நெஞ்சில் ஜில் ஜில்
(Title Reserved)
டீசர் 1
கருப்பு நிற ஜக்குவார் கார் வந்து அந்த மாளிகை முன்பு நின்றது. வண்ண விளக்குகளால் அந்த மாளிகை மின்னி கொண்டு இருக்க, அதனைப் பார்த்துக் கொண்டே காரில் இருந்து இறங்கினான் கர்ணன்.
கையில் இருந்த சிவப்பு நிற ரோஜாக்கள் கொண்ட மலர் செண்டைப் பார்த்தவன் இதழ் வளைத்து சிரித்தான்.
"கர்ணன்.." என்று ஒரு குரல் கேட்க, அவன் நிமிர்ந்து பார்த்தான்.
"நீங்க இருக்குற பிஸியில வர மாட்டீங்கன்னு நினைச்சேன்.. எப்படியோ வந்துட்டீங்க.." என்று புன்னகை முகத்துடன் கர்ணனை வரவேற்றான் நிரஞ்சன்.
"நம்ம வீட்டு விசேஷமாச்சே நிரஞ்சன்.. வராமல் இருப்பேனா.." என்று கூற, அதன் உள்ளர்த்தத்தை உணராத நிரஞ்சன் விரிந்தப் புன்னகை உடன் அவனை வீட்டினுள் அழைத்து சென்றான்.
உள்ளே ஆட்டம் பாட்டம் என்று வளைக்காப்பு விழா கலை கட்டியது. நிரஞ்சனின் மனைவிக்கு தான் வளைக்காப்பு. இளஞ்சிவப்பு நிறப் பட்டுப்புடவையில் தாய்மை பூரிப்பில் பேரழகுடன் பிரம்மாண்ட நாற்காலியில் அமர்ந்து இருந்தாள். அவள் அருகே நின்று இருந்த 4 வயது தீரன் "அம்மா.." என்று அழைத்து அவள் மேல் ரோஜா இதழ்களைத் தூவி விட்டு புன்னகைத்தான்.
"தீ..ரன்.. சும்மா இருக்க மாட்டியா.. அப்பாக்கிட்ட போடா.." என்று அவள் சிரித்து கொண்டே விரட்ட, அவன் நிரஞ்சனிடம் ஓடினான்.
"அப்பா.. அப்பா.. அம்மா திட்டுறாங்க.." என்று தன் மழலைக் குரலில் தந்தையிடம் புகார் வாசிக்க, மகனைத் தூக்கி வைத்து கொண்ட நிரஞ்சன் தனக்கு இடது பக்கம் கை காட்டி "அங்க ஐஸ்கிரீம் தர்றாங்க.. போய் சாப்பிடு.." என்று மகனை திசை திருப்பினான். அவனும் ஐஸ்கிரீம் ஆசையில் தந்தையின் கையில் இருந்து நழுவி ஓடி விட்டான்.
"எங்க மூத்த பையன்.. தீரன்.." என்று நிரஞ்சன் கர்ணனிடம் கூற
"ஓ.. இரண்டாவது குழந்தைக்கு எல்லாம் கூடவா இப்போ வளைக்காப்பு பண்றாங்க.." என்று நக்கலாக கேட்டான்.
"இல்ல கர்ணன்.. இது அம்மாவோட ஆசைக்காக பண்றோம்.." என்ற நிரஞ்சன் கர்ணனை அழைத்துக் கொண்டு மேடை ஏறினான்.
அவளைப் பார்த்துக் கொண்டே அழுத்தமாக அடி எடுத்து வைத்து மேடை ஏறி வந்த கர்ணன் அவளிடம் பூ செண்டை நீட்ட, "தேங்க்ஸ்" என்றபடி அதனை புன்னகை உடன் வாங்கிக் கொண்டாள்.
"டேக் கேர்.. டேக் கேர் ஆப் அவர் சைல்ட்" என்று அவன் கூற, அவள் முகம் பேயறைந்தது போல் ஆனது.
நிரஞ்சன் சிரித்து கொண்டே "கர்ணன்.. நீங்க தப்பா விஷ் பண்றீங்க?" என்றான்.
பக்கவாட்டாகத் திரும்பி அவனை அழுத்தமாகப் பார்த்தவன் "இந்த கர்ணன் எங்கேயும் எதையும் தப்பா செய்ய மாட்டான் மிஸ்டர் நிரஞ்சன். இவ வேணும்ன்னா உங்க மனைவியா இருக்கலாம். ஆனா இவ வயித்துல வளர்ற குழந்தை என்னோடது.." என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி கூற, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

Post a Comment