கனல் பொழிந்த காதல் (இதழ் 3)
(Title Reserved)
டீசர் 1
திடீரென ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்த ஆதவனைக் கண்டு அனைவரும் அதிர்ந்து நோக்க, அப்போது தான் காரில் வந்து இறங்கிய புவியரசன் இருவரையும் பார்த்து புருவம் சுருக்கினான்.
“ஏன்டா ஆதவா.. உனக்காக உன் அண்ணன் மினிஸ்ட்டர் பொண்ணை பேசி வச்சி இருந்தா, நீ என்னடா இப்படி வந்து நிக்குற?” என்று ஞானப்பிரகாசம் வினவ,
அதே நேரம் ஆர்த்தி தட்டுடன் வந்து நின்ற மதுமதியை முறைத்தார் ரங்கநாயகி.
“உன்னை யார் இதை எடுத்துட்டு வர சொன்னது? அவ யாரு என்னன்னே தெரியல..” என்று சிடுசிடுக்க, புவியரசனின் பார்வை அன்னையின் மீது அழுத்தமாக பதிந்தது.
“அண்ணா.. இவ பேரு நதியா.. இவ..” என்று ஆதவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே போதும் என்பது போல கையை உயர்த்தினான் புவியரசன்.
“நான் உங்கிட்ட ஏதாவது கேட்டேனா?” என்று வினவ, அவன் ‘இல்லை’ என்பது போல தலை அசைத்தான்.
“அப்புறம் எதுக்கு எனக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்க..” என்றவன் மனைவியை ஏறிட்டு நோக்கி, ‘ஆர்த்தி எடு’ என்பது போல தலை அசைத்தான்.
அதில் ஆதவனின் கண்கள் கலங்கி போக, பக்கவாட்டாகத் திரும்பி கண்களைத் துடைத்துக் கொண்டான்.
“ஹும்.. இந்த வீட்டுல எனக்கு என்னைக்கு மரியாதை இருந்து இருக்கு..” என ரங்கநாயகி முணுமுணுத்துக் கொண்டே வீட்டினுள் சென்று விட, மதுமதி ஆர்த்தி சுற்ற ஆதவன் முன்பு சென்று நின்றாள்.
அவள் அருகே வருவதைக் கண்ட நதியா பயத்தில் ஆதவனின் முதுகுக்குப் பின்னால் தன்னை ஒளித்து கொள்ள, “இப்படி ஒளிஞ்சிக்கிட்டா நான் எப்படி ஆர்த்தி எடுக்குறது.. வெளியே வா..” என்று அவள் கையைப் பிடிக்க போனாள் மதுமதி.
உடனே அவள் பயத்தில் கத்தி அலற, அனைவரும் திகைத்து போய் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தார்கள்.
“நதியா.. பயப்படாதே.. அவங்க என் அண்ணி தான்..” என்று ஆதவன் அவளை சமாதானம் செய்ய முயல, அது எதுவுமே அவள் காதில் விழவில்லை.
“இல்ல.. அவங்க என்னை கொல்ல தான் வர்றாங்க.. என்னை கொன்னுடுவாங்க.. என்னை கொன்னுடுவாங்க..” என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னவள் அப்படியே அவன் கரங்களிலே மயங்கி சரிய,
“டேய் அவளை உள்ளே தூக்கிட்டு போ.. நான் டாக்டருக்கு ஃபோன் பண்றேன்..” என்றான் சாகரன்.
ஆதவன் நதியாவைத் தூக்கிக் கொண்டு வீட்டினுள் செல்ல, புவியரசனின் அழுத்தமான பார்வை அவனைப் பின்தொடர்ந்தது.

Post a Comment