தீராக் காதல் - 7

 

வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி வந்த அபி, நிலைக்கதவில் வழியை மறைத்தபடி நின்று இருந்த தந்தையைக் கண்டு அப்படியே நின்று விட்டாள்.

அவளை உக்கிரமாக முறைத்து பார்த்த அண்ணாமலை, “உன்னை நீ மாத்திக்கவே மாட்ட இல்ல..” என்று பல்லைக் கடிக்க, 

“இல்லப்பா.. ஒரு முக்கியமான கால்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையில் புகுந்தவர்,

“கல்யாணம் கூட வாழ்க்கையில முக்கியமான ஒன்னு தான் அபி.. அதை ஏன் நீ புரிஞ்சிக்கவே மாட்டேங்குற?” என்று கேட்டார் அழுத்தமாக.

அதற்கு அபி பதில் சொல்ல முடியாமல் அமைதி காக்க, அண்ணாமலை சற்று இறங்கி வந்து “நீ இப்படியே வேலை வேலைன்னு ஓடிட்டு இருந்தா எப்படி அபிம்மா? உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு.. அதை நீ எப்போ வாழப் போற?” என்று ஆதங்கத்துடன் கேட்டார்.

“சாரிப்பா.. இனிமே இப்படி நடக்காது” 

அவள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு தாழ்ந்தக் குரலில் சொல்ல, அதற்கு மேல் அண்ணாமலையால் மகளிடம் கடுமை காட்ட முடியவில்லை. 

ஒரு பெருமூச்சை வெளியிட்டவர், “மணி இரண்டாகுது.. வந்து சாப்பிடு” என்று விட்டு உள்ளே செல்ல, அபியின் இதழ்களில் புன்னகை அரும்பியது. 

பின்னர், திருமணத்திற்காக ருத்ரா எடுத்துக் கொடுத்த சேலையை அண்ணாமலை அவளிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, “என்னம்மா புடவையைப் பார்த்துட்டு அமைதியா இருக்க? எப்படி இருக்குன்னு சொல்லு.. உனக்குப் புடிச்சி இருக்கா?” என்று கேட்டார்.

தந்தை தன் முகத்தை ஆர்வமாகப் பார்ப்பதைக் கண்ட அபி, மெல்ல இதழ்களை விரித்து புன்னகைக்க, “மாப்ளையோட தேர்வு தான்.. சூப்பரா இருக்குல்ல..” என்றவர் ருத்ராவைப் பற்றிப் பேசிக் கொண்டே போனார். 

அப்போது அபியின் அலைபேசி அலற, அண்ணாமலையின் பேச்சு பாதியிலேயே தடைப்பட்டுப் போனது. அலைபேசி திரையைப் பார்த்து விட்டு தந்தையை ஏறிட்டு நோக்கியவள் “கமிஷனர்..ப்பா” என்று விட்டு விலகிச் சென்று அழைப்பை ஏற்று பேசினாள்.

சில நொடிகள் அங்கேயே இருந்து பார்த்த அண்ணாமலை பின்னர் அவரது அறைக்குச் சென்று விட, கமிஷனரிடம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்த அபி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். 

அதே நேரம் ராஜாவின் வீட்டில் தினேஷ் தாம் தூம் என்று வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான். 

“அண்ணா.. இப்போ எதுக்கு நீ அந்த சேதுவை வரச் சொல்லி இருக்க? அவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான். நேத்து வந்த பிள்ளக்கா பய அவன்.. அவனை நம்பி நீ இவ்ளோ பெரிய வேலையைக் கொடுத்தா, அப்புறம் எவனும் என்னை மதிக்க மாட்டானுங்கண்ணா” என்று கோபத்தில் ஆரம்பித்து ஆதங்கத்துடன் தினேஷ் பேச, ராஜா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான். 

அப்போது அங்கே தனது ஆட்களுடன் சேது வர, “வா சேது..” என்றான் ராஜா. 

“என்னாண்ணா.. வரச் சொல்லி இருந்த..” 

“ஒரு சின்ன வேலை சேது..” 

“ம்.. சொல்லுண்ணா.. யாரா இருந்தாலும் தட்டி தூக்கிடலாம்” என்றவனை ஆழ்ந்து நோக்கிய ராஜா

“இது ஆளை தூக்குற மேட்டர் இல்ல. பொருளை தூக்குற மேட்டர்” என்றான். 

அதைக் கேட்டு குழம்பிய சேது “புரியலண்ணா” என்று சொல்ல, 

“அடுத்த வாரம் ஹார்பர்ல ஒரு சரக்கு வருது. அதை பத்திரமா இறக்கி இந்த இடத்துல கொண்டு போய் சேர்க்கனும்” என்று கூறி ஒரு சீட்டை அவனிடம் நீட்டினான். 

அதனை வாங்கிப் பார்த்த சேது, அப்படியே பார்வையை மட்டும் உயர்த்தி தினேஷை ஒரு பார்வைப் பார்க்க, அவனோ இவனை கொலைவெறியுடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 

சேதுவிற்கு தெரியும்.. இந்த மாதிரி வேலை எல்லாம் வழக்கமாக தினேஷ் தான் செய்வான் என்று. திடீரென மாற்றி விடுகிறான் என்றால், தினேஷால் ஏதோ பிரச்சனை ஆகி இருக்கிறது என்று நொடியில் புரிந்தும் கொண்டவனுக்கு மனதிற்குள் கொண்டாட்டமாகவும் இருந்தது. 

அத்துடன் யாரும் அறியாமல் தினேஷை நோக்கி நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன் உடனே தனது முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டு ராஜாவை ஏறிட்டு “சப்பை மேட்டர்ண்ணா. அசால்ட்டா செய்வேன்” என்றான். 

அதில் தினேஷின் தன்மானம் சீண்டப்பட, சேதுவை ஆழ்ந்து ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். சேது ராஜாவின் காலடியில் அமர்ந்து சரக்கு வரும் விபரத்தைக் கேட்டு கொண்டான். 

வெளியே நின்று இருந்த தினேஷ் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைக்க, அவனது மனமும் நெருப்பிற்கு நிகராகப் பற்றி எரிந்து கொண்டிருந்தது. 

********** 

அபியின் திருமண நாள் நெருங்க நெருங்க, அண்ணாமலைக்குத் தான் மனம் படபடப்பாக இருந்தது. திருமண ஏற்பாடுகள் எல்லாம் ஒருபுறம் நடந்தாலும் அபி தொடர்ந்து வேலைக்குச் சென்றாள். 

தினேஷை பின்தொடர்ந்தவனுக்கும் உருப்படியாக எந்த தகவலும் கிடைக்காமல் போக, அபிக்கு மண்டை காய்ந்துப் போனது. கமிஷனரும் அவளை அழைத்துப் பேச, “இப்போ வரைக்கும் ஒரு தகவலும் கிடைக்கல சார்..” என்றாள் தலை குனிந்து கொண்டே. 

கடுப்புடன் மேஜையை இரு கையாலும் குத்தி விட்டு இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்ட கமிஷனர், “அன்னைக்கே அந்த தினேஷை அரெஸ்ட் பண்ண வேண்டியது.. ஆனா எப்படியோ என் பொண்ணை கடத்தி என்னை பிளாக்மெயில் பண்ணி தப்பிச்சிட்டான்” என்று பல்லைக் கடிக்க, அபியின் அலைபேசி அலறியது. 

அலைபேசி திரையில் புதிதாக இருந்த எண்ணைக் கண்டு புருவம் சுருக்கியவள் கமிஷனரை ஏறிட்டு நோக்க, அவர் ‘எடுத்து பேசு’ என்பது போல் கையை அசைத்து விட்டு ஜன்னல் அருகே சென்று நின்றார். 

அழைப்பை ஏற்றவள் பேச ஆரம்பிக்கும் முன்பே, “ஹலோ அக்கா.. நான் தான் பிரசன்னா பேசுறேன்” என படபடத்தான் மறுமுனையில் இருந்தவன். 

“பிரசன்னா..” என்றவள் மீண்டும் கமிஷனரைப் பார்க்க, அவர் அவள் அருகே வந்து நின்றார்.

அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டவள், “சொல்லுடா..” என்க,

“அக்கா.. நாளைக்கு ஹார்பர்ல ஒரு பெரிய சரக்கு வரப் போகுது. அந்த வேலையை ராஜா இந்த தடவை சேதுக்கிட்ட கொடுத்து இருக்கான்” என்று சொல்ல, அபியின் மூளை யோசனையில் ஆழ்ந்தது.

சட்டென தனது யோசனையில் இருந்து வெளியே வந்தவள், “சரி.. இது எப்படி நீ தெரிஞ்சிக்கிட்ட? இதென்ன புது நம்பர்ல வந்து இருக்க?” என்று வினவ, 

“நான் அந்த தினேஷை ஃபாலோ பண்றதை அவன் பார்த்துட்டான்க்கா” என்றான் பிரசன்னா. 

அதைக் கேட்டு அதிர்ந்து போன அபி, தனது இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள். “என்னடா சொல்ற? அவனுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டீயா நீ?” என்று பதற்றத்துடன் கேட்க, 

“அப்படியெல்லாம் அவ்ளோ சீக்கிரத்துல இந்த பிரசன்னாவை பிடிச்சிட முடியுமா? நாங்க எல்லாம் யாரு.. சைக்கிள் கேப்ல ஆட்டோவே ஓட்டுவோம்..” என்று காலரைத் தூக்கி விட்டபடி சொன்னான் பிரசன்னா. 

அதன் பின்பே அபிக்கு நிம்மதியாக இருக்க, “சரி.. நீ என்ன பார்த்த.. என்ன கேட்ட..ன்னு சொல்லு” என்று கேட்க, அவனும் சொல்லத் தொடங்கினான். 

“அக்கா.. வழக்கமா சரக்கை இறக்குறதுல இருந்து அதை ஏரியாவாரியா பிரிச்சி அனுப்புறது எல்லாம் தினேஷோட வேலை தான். நீங்க அந்த பிரவீன் கேஸ்ல மோப்பம் பிடிச்சி தினேஷ் வரைக்கும் வந்துட்டீங்கல்ல, அதனால இந்த முறை அந்த வேலையை ராஜா தினேஷ்க்கிட்ட கொடுக்காமல் சேதுவை வரச் சொல்லிட்டான். 

அதுல செம கடுப்பான தினேஷ் நாளைக்கு சேதுவை அட்டாக் பண்ணி சரக்கை அவனே எடுத்துக்க போறதா தண்ணீ அடிச்சிட்டு அவனோட ஆளுங்கக்கிட்ட பேசிட்டு இருந்ததைத் தான் நான் கேட்டேன். முழுசா கேட்குறதுக்குள்ள நான் மறைஞ்சி இருந்து ஒட்டு கேட்குறதை அங்கிருந்த ஒருத்தன் பார்த்துட்டான். அவங்கக்கிட்ட இருந்து தப்பிச்சி வரும் போது தான் என் ஃபோன் கா(ல்)வாய்ல விழுந்திடுச்சு” என்று சொல்லி முடிக்க, 

“சரி.. நீ பத்திரமா இரு. இனி நான் பார்த்துக்கிறேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்த அபி கமிஷனரை ஏறிட்டாள்.

“சார்.. எனக்கு ஒரு டீம் வேணும்” என்றவள் தனது திட்டத்தை அவரிடம் விரிவாகக் கூற, 

அவற்றைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர், “ஓகே அபி.. நான் இதை பார்த்துக்கிறேன். நீ கிளம்பு” என்றார். 

அதைக் கேட்டு அதிர்ந்த அபி, “சார்..” என்க, 

“நாளை மறுநாள் உனக்கு கல்யாணம் அபி.. அதை விட்டுட்டு இந்த கிரிமினல்ஸ் பின்னாடியா ஓடப் போற நீ?” என்று நேரடியாகவே கேட்டார். 

“ஆனா.. இப்போ விட்டா இந்த போதைப் பொருள் கேங்கை கையும் களவுமா பிடிக்க முடியாது சார்” 

கமிஷனரும் அபியிடம் எவ்வளவோ பேசிப் பார்க்க, அவள் விடுவதாகவே இல்லை. கடைசியில் அவர் தான் இறங்கிப் போக வேண்டியதாக போய் விட்டது. 

“நான் சொல்ல வேண்டியது சொல்லிட்டேன். இனி உன் இஷ்டம் அபி” என்று சொல்ல, அபி காவல் துறையில் நேர்மையாகவும் துடிப்பாகவும் செயல்படும் ஐவரின் பெயர்களைக் கூறி அவர்களை தன்னுடைய சீக்ரெட் மிஷனுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டாள். 

அவள் கேட்ட அனுமதியைக் கொடுத்தவர், “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்ல, சலியூட் அடித்து அவரிடமிருந்து விடைபெற்றாள் அபி.

ஐவர் கொண்ட டீம் உடன் அபி வீட்டிற்குக் கூட செல்லாமல் மும்முரமாக வேலை பார்க்க, அண்ணாமலைக்கு பிபி தாறுமாறாக எகிறிப் போனது. 

வேலையின் நடுவே அபிக்கு தந்தையின் அழைப்பு விடாமல் வந்த வண்ணம் இருக்க, அவள் அதைக் கண்டு கொள்ளாமல் “இந்த நம்பரை டிராக் பண்ணுங்க” என்று குழுவினரில் ஒருவரிடம் ராஜாவின் எண்ணைக் கொடுத்தாள். 

ஆளாளுக்கு ஒரு வேலையைக் கொடுத்தவள், தனியே வந்து தந்தையின் எண்ணிற்கு அழைத்து “அப்பா நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். நைட் வந்தா தான் வருவேன். நீங்க வீட்டைப் பூட்டிக்கிட்டு ஜாக்கிரதையா இருங்க” என்று சொல்ல,  

“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க அபி?” என்று மறுமுனையில் பல்லைக் கடித்தார் அண்ணாமலை.

தந்தையின் கோபத்தை உணர்ந்தவள், “அப்பா.. ஒரு முக்கியமான மிஷன்ல இருக்கேன்” என்று ஆரம்பிக்க, அவர் எதையும் கேட்க தயாராக இல்லை. 

“இரண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு மிஷன் அது இதுன்னு உளறிட்டு இருக்காதே அபி. ஒரு மாசம் லீவ் சொல்லிட்டு உடனே கிளம்பி வீட்டுக்கு வா” என்று சிடுசிடுத்தவர் அபி சொல்லும் எந்த காரணத்தையும் காதிலேயே வாங்கவில்லை. 

“இப்போ மட்டும் நீ அரைமணி நேரத்துக்குள்ள வீட்டுக்கு வரல. நான் கிளம்பி நேரா உன் ஸ்டேஷனுக்கே வந்துருவேன்” என்று வேறு மிரட்ட, அபி டென்ஷனாக நெற்றியை நீவி விட்டுக் கொண்டாள்.  

அப்போது அவளிடம் வந்த தீபன், “அபி.. நீங்க வீட்டுக்குப் போங்க. நாங்க இங்க பார்த்துக்கிறோம். எதாவது விஷயம்ன்னா உடனே உங்களுக்கு கால் பண்றோம்” என்று சொல்ல, அபியும் சரி என்பது போல் தலை அசைத்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.

***********

இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து உறங்கினாலும் விடியற்காலையிலேயே அபி விழித்துக் கொண்டாள். அலைபேசியை எடுத்தவள் முதல் வேலையாக தனது டீமிற்கு அழைத்து “தீபன்.. எந்த இடம்ன்னு தெரிஞ்சுதா?” என்று கேட்க, 

“இன்னும் இல்ல அபி.. நம்ம ஆளுங்க ராஜா, தினேஷ், சேது இவங்க மூனு பேரையும் க்ளோஸா தான் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க” என்றான். 

அவனுடன் பேசிக் கொண்டே பால்கனிக்கு வந்தவள், புதிதாக இருவர் தனது வீட்டின் தெருமுனையில் நின்று கொண்டு இரகசியமாக தனது வீட்டை கண்காணிப்பதைப் பார்த்து விட்டாள்.

உடனே தனது முக பாவனைகளை மாற்றிக் கொண்டு வேறு பக்கம் பார்த்தவள், “தீபன்.. தினேஷ் என்னை கண்காணிக்க ஆள் போட்டு இருக்கான்” என்றாள்.

“என்ன சொல்றீங்க அபி? அப்போ நாம அவனை ஃபாலோ பண்றதை அவன் கண்டுபிடிச்சிட்டானா?” என்று தீபன் தனது சந்தேகத்தைக் கேட்க, 

“ம்.. இருக்கலாம். என்னோட இன்ஃபார்மர் நேத்து அவங்கிட்ட மாட்டிக்கிட்டு, எப்படியோ எஸ்கேப் ஆயிட்டான். அதனால அவனுக்கு என் மேல டவுட் வந்து இருக்கும்” என்று சரியாக கணித்துச் சொன்னாள். 

“இப்போ என்ன பண்ணப் போறோம்?” என்று அவன் கேட்க, 

சிந்தனையுடன் அறைக்குள் வந்த அபி, “சேதுவை ரொம்ப க்ளோஸா வாட்ச் பண்ணுங்க. அவன் தான் நம்ம டார்கெட். ஒரு நொடி கூட அவனை மிஸ் பண்ணக் கூடாது” என்று விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். 

குளித்து விட்டு ஹாலுக்கு வந்த அபி, மூடி இருந்த தந்தையின் அறையைப் பார்த்து விட்டு ‘அப்பா இன்னும் எழுந்துக்கல போல..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள். 

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பால் பாக்கெட்டை எடுத்தவள், தந்தைக்கும் தனக்கும் சேர்த்து தேநீர் தயாரித்தாள். அவளுக்கு அது மட்டும் தான் தெரியும்.     

அண்ணாமலை துயில் கலைந்து தனது அறையில் இருந்து எழுந்து வர, “அப்பா.. டீ எடுத்துக்கோங்க” என்று அவர் முன்னே வந்து நின்றாள் அபி. 

அதனை விழி விரித்து ஆச்சரியமாகப் பார்த்தவர், சட்டென தனது முகத்தை விரைப்பாக வைத்துக் கொண்டு “என்னது.. ஆச்சரியமா இருக்கு?” என்றார். 

“எதுப்பா? நான் காலையில சீக்கிரம் எழுந்ததா?”

“இல்ல.. இன்னும் நீ வேலைக்கு ஓடாம வீட்டுல இருக்குறதைச் சொன்னேன்” என்றவர் அபி நீட்டிய தேநீர் கப்பை எடுத்து ஒரு மிடறு குடித்து விட்டு, 

“டிபார்ட்மென்ட்ல ஒரு மாசம் லீவ் சொல்ல சொன்னேனே.. சொல்லிட்டீயா?” என்று கேட்க, 

“ஒரு மாசம் எதுக்குப்பா? கல்யாணம் சிம்பளா கோயில்ல தானே நடக்குது. அதுக்கு ஒரு ஒன் அவர் பர்மிஷன் போதும் இல்ல..” என்று கேட்டு விட்டு தந்தையின் முறைப்பை பரிசாகப் பெற்றாள் அபி. 


No comments

Powered by Blogger.