தீராக் காதல் - 1
பிற்பகல் நேரம் சாலையில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தப் பெண்மணியைப் பார்வையால் தனது நண்பனுக்குச் சுட்டிக் காட்டினான் சாலையின் ஓரமாக பைக்கில் அமர்ந்தபடி இருந்த ஒருவன். அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த மற்றொருவன் அந்தப் பெண்மணி அவர்களைக் கடந்து செல்லும் வரை பார்த்திருந்தான்.
அவர் தெருமுனையில் திரும்பியதும் “வண்டியை எடுடா” என்று நண்பனின் தோளைத் தட்டி விட்டு தலைக் கவசத்தை எடுத்து மாட்டிக் கொண்டவன், இருச்சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் ஏறி அமர, அவர்களது வாகனம் அந்தப் பெண்மணியைப் பின்தொடர்ந்தது.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்தப் பெண்மணியை நெருங்கிச் சென்று அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க தாலி சரடை கண நேரத்திற்குள் அறுத்துக் கொண்டு வாகனத்தில் பறந்துச் செல்ல, “ஐயோ! என் தாலி.. என் தாலி.. எவனோ என் கழுத்துல இருந்த தாலியை அறுத்துக்கிட்டுப் போறானே.. யாராவது அவனுங்களைப் பிடிங்களேன்..” என கதறிக் கொண்டே கழுத்தில் வடியும் இரத்தத்தை ஒரு கையால் பிடித்தபடி அந்த இருச்சக்கர வாகனத்தின் பின்னாடியே ஓடினார் அந்தப் பெண்மணி.
அவரது கதறலைக் கேட்டு சில ஆண்கள் அந்த இருச்சக்கர வாகனத்தைப் பிடிக்க முயல, கண் மண் தெரியாமல் வேகமாக ஓட்டிய திருடன் எதிரே வந்த காவல்த்துறை வாகனத்தின் மோதி இருவரும் கீழே விழுந்து விட்டார்கள்.
காரின் முன்னிருக்கையில் அமர்ந்து இருந்த பெண் இன்ஸ்பெக்டரான அபி என்கிற அபிலாஷினி, காரின் கண்ணாடியை இறக்கி விட்டு தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்க்க, “மச்சான் போலீஸ்டா..” என்று அலறியவன் முன்னே ஓட, அவன் பின்னாடியே அடிப்பட்ட காலைப் பிடித்துக் கொண்டு நொண்டி நொண்டி ஓடினான் மற்றொருவன்.
அவர்கள் ஓடுவதைப் பார்த்துக் கொண்டே அபி காரில் இருந்து இறங்க முற்பட, “ஐயோ.. திருடன்.. திருடன்.. செயினை அறுத்துட்டுப் போறானுங்க. யாராவது அவனுங்களைப் பிடிங்க” என்றபடியே சில ஆண்கள் திருடர்கள் ஓடிய திசையை நோக்கி ஓடினார்கள்.
கார் கதவை மூடிய அபி, “வண்டியை எடுங்க” என்று முன்னே கைக்காட்ட, டிரைவரும் வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு அவள் கைக்காட்டிய திசையில் வாகனத்தைச் செலுத்தினார்.
ஒரு புறம் அபிலாஷினி சுற்றி வந்து திருடர்களை மடக்க, மற்றொரு புறம் மக்கள் நின்று இருந்தார்கள். அபி காரில் இருந்து இறங்கி வர, திருடர்களில் அடிப்படாமல் இருந்த ஒருவன் மட்டும் சூழ்ந்து நின்ற மக்களைத் தள்ளி விட்டு ஓட முயன்றான்.
அபி காரில் இருந்த லத்தியை எடுத்து வீச, அது நேரே சென்று திருடனின் காலில் பட்டது. “ஆஆஆ..” என்ற கத்தியபடி அவன் காலைப் பிடித்துக் கொண்டு மண்ணில் சரிய, அந்தத் திருடனை நெருங்கியவள், “செயின் எங்கடா?” என்று கேட்டாள் சீற்றத்துடன்.
“எங்கிட்ட இல்ல மேடம்.. அவன் தான் வச்சி இருக்கான்..” என்று அவன் தனது கூட்டாளியைக் கைக்காட்ட, அபி தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்து அவனை நோக்கி நீட்டினாள்.
அவன் பயத்துடன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த தங்க தாலி சரடை எடுத்து நடுங்கும் கையால் அவள் முன்பு நீட்ட, அதைப் பிடுங்கிக் கொண்டவள் அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.
பின்னர் தனக்கு காரை ஓட்டி வந்த கான்ஸ்டெபிளைப் பார்த்தவள், “இவனுங்கள வண்டியில ஏத்துங்க..” என்று கட்டளை இட, அவரும் தன் பங்கிற்கு அந்தத் திருடர்களை அடித்து இழுத்துச் சென்று வண்டியில் ஏற்றினார்.
“இந்த தாலி யாரோடது?” அபி கூட்டத்தைப் பார்த்துக் கேட்க,
“மேடம்.. என்னோடது தான் மேடம்..” என்று கழுத்தில் இரத்தம் கசிய அதை முந்தாணையால் பிடித்தபடி தன் முன்னே வந்து நின்ற பெண்மணியைப் பார்த்த அபி, அவரிடம் தாலியைக் கொடுத்து விட்டு மருத்துவமனைக்குச் செல்ல ஆட்டோவையும் பிடித்துக் கொடுத்தாள்.
“ரொம்ப நன்றி மேடம்..” என்று அவர் சொல்ல,
“இனிமேலாச்சும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. தங்கம் உங்க உயிரை விட பெருசு இல்லை” என்று விட்டு தனது காருக்குச் சென்றாள்.
காவல் நிலையத்திற்குள் நுழைந்தவள் விறுவிறுவென நடந்து அவளது அறைக்குச் செல்ல, கான்ஸ்டெபிள் அந்த திருடர்களை இழுத்து வந்து உள்ளே ஒரு ஓரமாக அமரச் சொன்னார். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.
தனது அறைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்த அபி பேண்ட் பாக்கெட்டில் இருந்த அலைப்பேசியை எடுத்து மேஜை மீது வைத்து விட்டு தனது வேலையைப் பார்த்தாள். அப்போது அவளது அலைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி ஒலிக்க, அவள் அலைப்பேசியை எடுத்து யாரென்று பார்த்தாள்.
அவளது அப்பா அண்ணாமலை தான் வாய்ஸ் நோட் அனுப்பி இருக்க, அவள் அதை ஆன் செய்து ஒலிக்க விட்டாள்.
“அம்மும்மா.. இன்னைக்குக் கொஞ்சம் சீக்கிரமா 4 மணிக்கே வீட்டுக்கு வந்துரு..” என்று அவர் சொல்லி இருக்க,
இவள் தந்தைக்கே அழைப்பு விடுத்து, “எதுக்கு சீக்கிரமா வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“இன்னைக்கு சஷ்டிம்மா. கோயிலுக்குப் போய் முருகனைப் பார்த்துட்டு வந்தா நல்லது”
“நீங்க தனியா போயிட்டு வாங்க. எனக்கு வேலை இருக்கு” என்று அவள் சொல்ல,
“என்னம்மா இப்படி சொல்லிட்ட? அப்பாவுக்கு பிபி, கொழுப்பு, சர்க்கரை, உப்பு, புளி, காரம்ன்னு சகல வியாதியும் இருக்குன்னு உனக்குத் தெரியும் தானே.. இத்தனை நோயையும் வச்சிக்கிட்டு நான் வீட்டுல நடமாடுறதே பெருசு. நீ என்னன்னா, என்னை தனியா கோவிலுக்குப் போகச் சொல்றீயே.. இது தான் நீ என் மேல வச்சிருக்குற பாசமாம்மா?” என்று விசும்பினார்.
“சரி.. வந்து தொலைக்கிறேன்..” என்று அவள் பல்லைக் கடிக்க,
சட்டென இயல்பு நிலைக்குத் திரும்பிய அண்ணாமலை, “ஹான்.. அம்மும்மா.. வரும் போது அப்படியே ஸ்வீட் கடையில மைசூர் பாக் ஒரு அரை கிலோவும் ஜாக்கிரி ஒரு அரை கிலோவும் வாங்கிட்டு வந்துரு” என்றார் கெஞ்சலாக.
அபி கோபமாக அலைப்பேசி இணைப்பைப் பட்டென்று துண்டிக்க, “ம்ஹூம்.. இவ இனிப்பு பலகாரம் எல்லாம் வாங்கிட்டு வர மாட்டா. நாம தான் கடைக்குப் போய் வாங்கிட்டு வரனும் போல..” என்றவர் வீட்டின் கதவைப் பூட்டிக் கொண்டு கடைக்குச் சென்றார்.
பிற்பகல் நேரம்.. அபியின் அறைக்கு வந்த ஒரு கான்ஸ்டெபிள், “மேடம் கமிஷனர் ஆபீஸ்க்குப் போகனும்” என்று ஞாபகம் படுத்த,
“ம்.. போய் வண்டியை எடுங்க. நான் வரேன்” என்றவள் தனது டேபிளில் இருந்த இரண்டு கோப்பை கையில் எடுத்துக் கொண்டு கமிஷனர் அலுவலகத்திற்குப் புறப்பட்டாள்.
மூன்று மணிக்கு கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றவள், அவரது அறைக்குச் சென்றதும் “சார்..” என்று விரைப்பாக சலியூட் வைக்க,
“வா அபி.. உட்கார்..” என்ற கமிஷனர் கந்தசாமி தனக்கு முன்பிருந்த இருக்கையைக் கைக்காட்டினார்.
“எஸ் சார்..” என்று விட்டு அபி நாற்காலியில் அமர, “நேத்து கொடுத்த அந்த ஆர்.கே. நகர் ஸ்கூல் பையன் மிஸ்ஸிங் கேஸ் என்னாச்சு?” என்று கேட்டார்.
“அதே ஸ்கூல்ல அவன் கூட படிக்குற பொண்ணு மேல ஒன் சைட் லவ். அந்த பொண்ணை மிரட்டுறதுக்காக காணாம போன மாதிரி செட் பண்ணிட்டு அவன் ஃப்ரெண்ட்டோட வீட்டுல தங்கி இருந்தான். அவனை பத்திரமா மீட்டு அவன் பேரன்ஸ்கிட்ட ஒப்படைச்சாச்சு சார்”
“இந்த காலத்து பசங்களுக்கு மீசை முளைக்க முன்னாடியே காதல் முளைச்சிடுது. எல்லாம் வயசு கோளாறு..” என்று அவர் சலித்துக் கொள்ள, அபி ஆமோதிப்பாய் தலை அசைத்துக் கொண்டாள்.
“ஆன்.. அபி.. நான் உன்னை வர சொன்னதே வேற ஒரு முக்கியமான விஷயத்துக்காக தான்” என்று அவர் பீடிகைப் போட,
“என்ன விஷயம் சார்” என்று கேட்டாள்.
“இன்னைக்கு நியூஸ் பேப்பர் படிச்சீயா?”
“ம்.. படிச்சேன். நீங்க எதைப் பத்தி கேட்குறீங்க?” என்றவளிடம் அன்றைய நாளிதழை கொடுத்த கமிஷனர்,
“இதைப் படிச்சீயா?” என்று குறிப்பிட்டு ஒரு செய்தியை மட்டும் காட்டிக் கேட்டார்.
அதில் போதை பழக்கத்திற்கு அடிமையான பள்ளி மாணவன் ஒருவன், பணத்திற்காக அவனது பெற்றோரைக் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக கைதான விவகாரமும், அந்த மாணவனை கதற கதற போலீஸ் அதிகாரிகள் இழுத்துச் செல்லும் காட்சியும் இடம் பெற்றிருக்க, அபி நிமிர்ந்து கமிஷனரைப் பார்த்தாள்.
“இப்போ எல்லாம் ஸ்கூல் பசங்கக்கிட்ட ரொம்ப ஈஸியா போதைப் பொருள் கிடைக்குது அபி. இதை இப்படியே விட்டா எதிர்கால இந்தியாவே அழிஞ்சிப் போயிடும்” என்று அவர் சொல்ல,
“சார்.. நான் இந்த நியூஸை காலையில பார்த்த உடனே இன்வஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ணிட்டேன்” என்றவள் தன்னிடம் இருந்த இரண்டாவது பைலை அவரிடம் கொடுத்தாள்.
“அந்த பையன் பிரவீன் தொடர்ந்து ஒரு இரண்டு மூனு மாசமாவே ட்ரக்ஸ் எடுத்துட்டு தான் இருந்து இருக்கான். அப்பா, அம்மா இரண்டு பேருமே வேலைக்குப் போறதால, அவங்க இவனைச் சரியா கவனிக்கல. அப்பப்போ வீட்டுல வச்சி இருந்த பணத்தை எடுத்துட்டுப் போய் ட்ரக்ஸ் வாங்கி இருக்கான். அப்படி ஒரு நாள் பணத்தை எடுக்கும் போது தான் அப்பா கண்ணுல சிக்கி இருக்கான்.
பையனை அடிச்சி விசாரிச்சதுல அவன் ட்ரக்ஸ் எடுத்துக்குறதை தெரிஞ்சிக்கிட்ட அவனோட பேரன்ஸ், அவனை ஒரு ரூம்ல அடைச்சி வச்சி இருந்து இருக்காங்க. இரண்டு நாளா சாப்பிடாம அழுது அழுது பெத்தவங்க மனசை கரைச்சி வெளியே வந்தவன், நைட் எல்லாரும் தூங்குன நேரமா பார்த்து வீட்டுல இருந்த கத்தி எடுத்துட்டு போய் பெத்தவங்களையே வெட்டி கொன்னுட்டு பணத்தை எடுத்துக்கிட்டு ஓடிட்டான். போலீஸ் இவனை இரயில்வே ஸ்டேஷன்ல வச்சி தான் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க” என்று அவள் சொல்ல, கமிஷனர் ஒரு தலை அசைப்புடன் கேட்டுக் கொண்டார்.
“அந்த பையனுக்கு ட்ரக்ஸ் யார் மூலமா கிடைக்குதுன்னு தெரியல சார். ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூலுன்னு தான் இருந்திருக்கான். வெளியே டியூசன் கூட போறது இல்லையாம். வீட்டுக்கும் ஸ்கூலுக்கும் இடையில தான் இரயில்வே ஸ்டேஷனே இருக்கு. சோ, வீடு, ஸ்கூல், இரயில்வே ஸ்டேஷன் இந்த மூனு இடத்துல ஏதோ ஒன்னுல தான் அந்த பையனுக்கு ட்ரக்ஸ் கிடைச்சி இருக்கும். விசாரிச்சிட்டு இருக்கேன் சார். கூடிய சீக்கிரமே அந்த குற்றவாளிங்களை அரெஸ்ட் பண்ணி உங்க முன்னாடி நிறுத்துவேன்” என்று உறுதியுடன் கூற,
“ம்.. இதுக்குத் தான் உன்னை வரச் சொன்னேன் அபி.. உன் அளவுக்கு இந்த கேஸ்ல வேற யாரும் சின்சியரா இருக்க மாட்டாங்க” என்று அவளை வெகுவாகப் பாராட்டினார். அங்கிருந்து விடைப்பெற்ற அபி நேரே பிரவீனின் வீட்டிற்குச் சென்று தனது அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்கினாள். வேலையில் மும்முரமாக இருந்தவளுக்கு தந்தை மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வரச் சொன்ன விஷயமே மறந்துப் போனது.
******
மகளுக்காக மதியம் 3 மணியில் இருந்தே வழி மேல் விழி வைத்து காத்திருந்த அண்ணாமலை, பொறுத்து பொறுத்து பார்த்திருந்து விட்டு மாலை 5 மணியில் இருந்து மகளின் அலைப்பேசிக்கு அழைக்க ஆரம்பித்தார். ஆனால் ஓர் அழைப்பைக் கூட அபி ஏற்கவில்லை. ஏன்? பார்க்கக் கூட இல்லை.
அண்ணாமலைக்கு பிபி தாறுமாறாக ஏறிக் கொண்டிருந்த சமயம், வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்க, “அவ தான் வந்துட்டா போல..” என்றபடி வாசலுக்கு விரைந்தவர் தர்ம சங்கடத்திற்குள் ஆளானார்.
“வாங்க.. வாங்க.. இது தான் பொண்ணு வீடு” என்ற தரகர் மாப்பிள்ளை வீட்டார்களை அழைத்து வந்து அண்ணாமலை முன்பு நிறுத்த, அவரோ கஷ்டப்பட்டு தன் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு “வாங்க..” என்றார்.
“இவர் தான் பொண்ணோட அப்பா, அண்ணாமலை” என்று மாப்பிள்ளை வீட்டாருக்கு அறிமுகம் செய்து வைத்த தரகர், மாப்பிள்ளையையும் அவரது பெற்றோர்களையும் அண்ணாமலைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“வாசல்லேயே நிக்குறீங்களே.. உள்ளே வாங்க..” என்றவர் அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஹாலில் உட்கார வைத்து அவர்களுடன் பேசினார். அவர்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம் வாசலைப் பார்த்துக் கொண்டே பதில் சொல்வதைக் கண்ட மாப்பிள்ளையின் அப்பா, அதனை வாயைத் திறந்து கேட்டே விட்டார்.
“என்ன வாசலை வாசலைப் பார்க்குறீங்க? யாராவது வரணுமா?” என்று அவர் கேட்க,
“ஆமாங்க.. என் பொ..ண்ணு இன்னும் வேலையில இருந்து வீட்டுக்கு வரல..” என்றார் தயக்கமாக.
உடனே தனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார் மாப்பிள்ளையின் அப்பா. மணியோ ஆறைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது. “ஏன்.. நாங்க பொண்ணு பார்க்க வர்றதை நீங்க அவங்களுக்குச் சொல்லலையா?” என்று அவர் கேட்க,
“அது வந்து..” என்று வார்த்தைகளை மென்று முழுங்கினார் அண்ணாமலை.
😍
ReplyDelete