இரவோடு இரவாக - 2
டீசர் 2
“இது தான்டா நடந்துச்சு. இதுக்கு போய் இரண்டு குடும்பமும் சேர்ந்து எங்க இரண்டு பேரையும் பிரிச்சு வச்சு வேடிக்கை பார்க்குறாங்க” என்று ஆதவ் அர்ஜுனா முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொல்ல,
“விடுங்க மாமா. அவ்வளவு தானே.. பாத்துக்கலாம். அக்காவை உங்களோட சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்றான் சபரி.
அவன் வார்த்தைகளைக் கேட்டு அகம் மகிழ்ந்து போன ஆதவ் “ரொம்ப தேங்க்ஸ் மச்சான்” என்று பல் இளிக்க,
அதனை மறைந்திருந்து ஒட்டு கேட்ட சந்திரகலா, “இவன் இவ்ளோ நல்லவன் இல்லையே..” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
“அப்புறம் மாமா.. இன்னொரு விஷயம்..” என்று சபரி சற்று தயக்கத்துடன் பீடிகை போட,
“என்ன மச்சான். சொல்லு..” என்றான் ஆதவ்.
“அக்காவை உங்களோட சேர்த்து வைக்க நான் உதவி செஞ்சா, நீங்களும் எனக்கு ஒரு ஃபேவர் பண்ணனும்..”
“ப்ச்.. இதெல்லாம் நீ கேட்கணுமாடா.. உனக்கு லேட்டஸ்ட் மாடல் ஐஃபோன் வாங்கி தரேன்”
“எங்கிட்ட இருக்கிறதே லேட்டஸ்ட் மாடல் தான் மாமா. எனக்கு அதெல்லாம் வேணாம்”
“வேணாமா.. வேற என்னடா வேணும்?” என்று கேட்டவனைத் தயக்கத்துடன் நோக்கிய சபரி,
“உங்க தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணி தரணும்” என்று கூற, ஆதவ் ஆடிப்போய் விட்டான்.
“டேய்..”
“மாமா.. மாமா.. ப்ளீஸ்.. மாமா.. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க.. உங்க தங்கச்சியை எனக்கு சின்ன வயசுல இருந்து ரொம்பப் பிடிக்கும்” என்று கெஞ்ச,
அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்த ஆதவ், “சரி ஓய்ந்து போய் தொலை.. வீட்டுல பேசுறேன்.. ஆனா கண்டிப்பா உன் அக்காளை என் கூட அனுப்பி விட்டுரனும்” என்றான்.
“டீல்..” என்று சபரி கை கட்டைவிரலை உயர்த்தி காட்ட,
“ஹும்.. அதானே பார்த்தேன்..” என்றபடி அவர்கள் இருவர் முன்னே வந்து நின்றாள் சந்திரகலா.
அவளைப் பார்த்து விட்டு அவர்கள் அதிர, “எலி ஏன்டா ட்ரெஸ் இல்லாம ஓடுதேன்னு நினைச்சேன். இப்போ தானே தெரியுது.. அது எதுக்குன்னு..” என்று சபரியைப் பார்த்தப்படியே சொன்னாள்.
“அ..ண்ணி அ..ண்ணி.. ப்ளீஸ் அண்ணி.. இந்த விஷயத்தை அண்ணாக்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க..” என்று அவன் கெஞ்ச,
“அப்போ அத்தைக்கிட்ட சொல்லவா..” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“அதுக்கு நீங்களே என்னைய இந்த மாடியில இருந்து தள்ளி விட்டுடலாம். பெரியம்மா அக்காவை மாமாக்கு கல்யாணம் பண்ணி வச்சதே பெரிய விஷயம். என் விஷயம் எல்லாம் தெரிஞ்சா, சோத்துல விஷத்தை வச்சி என் கதையை முடிஞ்சி 16-வது நாள் காரியமே பண்ணிடுவாங்க..”
அவன் சொன்னதை நினைத்து பார்த்து வாயை மூடி சிரித்தவள், “சரி சரி சொல்லலை..” என்க,
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணி..” என்று பல் இளித்தான்.
“ஆஆஹ்ஹான்.. ரொம்ப எல்லாம் சந்தோசப்படாதே. உங்க டீலிங்-அ நான் யாருக்கிட்டயும் சொல்லாம இருக்கனும்ன்னா, நீங்க இரண்டு பேரும் எனக்கு ஒன்னு செய்யனும்” என்று சொல்ல, இருவரும் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
“என்ன செய்யனும்?” என்று இருவரும் ஒருசேர கேட்க,
“என் அண்ணனுக்கு உன் தங்கச்சியை கட்டி கொடுக்கனும்” என்று சபரியைப் பார்த்து கேட்டாள் சந்திரகலா.
“அதெல்லாம் முடியாது. அவனே ஒரு வேலை வெட்டி இல்லாத தண்டம். அவனுக்கு என் தங்கச்சி கேட்குதா..” என்று சபரி எகிற,
“அப்படியா.. சார்.. எந்த கலெக்டர் ஆபீஸ்ல கலெக்டரா இருக்கீங்க?” என்று நக்கலாக கேட்டாள்.
இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ள, ‘இது ஆவுறதில்லை..’ என்ற எண்ணத்துடன் எழுந்து சென்றான் ஆதவ்.
அவன் செல்வதைக் கண்ட சபரி, “மாமா.. என்ன நீங்க பாட்டுக்கு அமைதியா போறீங்க..” என்று கத்தி அழைக்க,
“போங்கடா.. நீங்களும் உங்க டீலிங்கும்.. எனக்கு யார் உதவியும் தேவையில்லை.. ஆள் வச்சி கடத்திட்டு போயாச்சும் நான் என் பொண்டாட்டியோட சேர்ந்துக்கிறேன்” என்று விட்டு சென்றான்.
“பாருங்க.. மாமா போயிட்டார்.. எல்லாம் உங்களால தான்” என்று சபரி அவளைக் குற்றம் சாட்ட,
“ம்.. உன்னால தான்..” என்றாள்.
“இல்ல.. உங்களால..”
“உன்னால..”
“உங்களால..”
“உன்னால.. தான்..”
அவன் போன பின்பும் இவர்கள் சண்டை ஓய்ந்த பாடில்லை.

Post a Comment