இரவோடு இரவாக - 1

 




டீசர் 1



வீட்டுப் பெரியவர்கள் அத்தனை பேரும் இளமதியை எரித்து விடுவது போல முறைத்துப் பார்க்க, அவள் கையில் ஐந்து மாத குழந்தையை வைத்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் நின்று இருந்தாள்.

“கொஞ்சமாவது அறிவிருக்காடி உனக்கு?” இளமதியின் அம்மா அபிராமி அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் பல்லைக் கடிக்க, 

“அது இருந்திருந்தா இப்படியொரு வேலையைப் பார்த்து இருப்பாளா?” என்று கேட்டு தன் பங்கிற்கு அன்னையை ஏற்றி விட்டான் அவளது அண்ணன் குமரன். 

இளமதியின் தந்தைக்கோ.. எதுவும் வெளிப்படையாக பேச முடியாத நிலை. மனைவியும் மகனும் மகளைத் திட்டுவதைத் தடுக்க முடியாமல் அங்கே அமைதியாக அமர்ந்து இருந்தார். 

ஒரு கட்டத்தில் அபிராமி மகளை அடிக்கப் பாய, இடையில் புகுந்து தடுத்த அவளது மச்சினன் மனைவி ரமணி, “என்னக்கா இது.. கல்யாணம் பண்ணி கொடுத்த பொண்ணைப் போய் கை நீட்டிக்கிட்டு..” என்று கூறி அபிராபியை இழுத்து வந்து விட்டாள்.

அத்துடன், “ஏம்மா இளமதி.. இந்த காலத்துப் பொண்ணு நீ.. உனக்கு நாங்க சொல்லணுமா? கொஞ்சம் பார்த்து ஜாக்கிரதையா இருந்து இருக்கலாம் இல்ல..” என்று கூற, அவள் சித்தியைப் பாவமாக ஒரு பார்வைப் பார்த்தாள். 

“எப்படி பார்க்குறா பாரு..” என்று அபிராபி அதற்கும் மகளைக் கரித்துக் கொட்ட, இத்தனை களேபரத்துக்கும் காரணமானவனே காரில் வந்து இறங்கினான்.

துள்ளல் நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தவனை அத்தனை பேரும் கொலைவெறியுடன் முறைத்துப் பார்த்தார்கள். 

“பண்றதையும் பண்ணிட்டு நடையைப் பாரு..” என்று குமரன் பல்லைக் கடிக்க,

“டேய் குமரா.. நீ அமைதியா இரு. நாங்க பேசிக்கிறோம்” என்றார் அவனது சித்தப்பா சதாசிவம்.

“இதுல பேசுறதுக்கு என்ன இருக்கு?”

“அதை நாங்க பார்த்துக்கிறோம். நீ அவசரப்பட்டு எதுவும் பேசி வைக்காதே. இது நம்ம வீட்டுப் பொண்ணோட வாழ்க்கை பிரச்சனை..” என்று அவர் சொல்ல, 

“எல்லாம் இவளைச் சொல்லணும்..” என்று அதற்கும் தங்கையைத் திட்டியவன் ஓரமாகச் சென்று நின்று கொண்டான். 

அவர்களை நெருங்கியதும் சன்கிளாஸை கழட்டி சட்டையின் பாக்கெட்டில் வைத்த ஆதவ் அர்ஜூனா, “ஹாய்.. மாமா.. ஹாய் அத்தை..” என்று உற்சாகமாகக் கை அசைக்க, அபிராபி வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 

“ஹாய் மச்சான்.. என்ன இன்னைக்கு வீட்டுல இருக்க? வேலைக்குப் போகலையா?” என்று ஆதவ் குமரனைப் பார்த்து கேட்க, அவன் பதில் சொல்லாமல் முறைத்துப் பார்த்தான். 

அவனது முறைப்பைக் கண்டு கொள்ளாமல், “அட சின்னமாமாவும் சின்னத்தையும் கூட இங்க தான் இருக்காங்களா..” என்று கேட்ட ஆதவ், “என்ன சின்னமாமா.. இன்னைக்கு கடைக்கு லீவ் விட்டுட்டீங்களா?” என்று அவரைப் பார்த்து கேட்க, 

“இல்ல.. அண்ணானைப் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்” என பட்டும் படாமல் பதிலளித்தார் சதாசிவம்.

“ஓ..” என்றவனின் பார்வை அங்கே கையில் குழந்தையுடன் நின்று இருந்த இளமதியின் மேல் மோகனமாகப் பதிய, அவள் அவனை வெட்டவா? குத்தவா? என்பது போல் பார்த்து வைத்தாள்.

அதே நேரம் குழந்தை தலையைத் திருப்பி அவனைப் பார்க்க, “அம்முக்குட்டி..” என்றழைத்தவாறு ஒரே எட்டில் மனைவியை நெருங்கி மகளைக் கையில் தூக்கிக் கொண்டான்.  

“அப்பாவைப் பார்க்காம எப்படிடா குட்டி இருக்க.. அப்பா கூட வர்றீங்களா? வீட்டுக்குப் போலாம்.. கார்ல போலாமா? ஹான் சொல்லுடா..” என்று மகளைத் தூக்கிக் கொஞ்ச, பெரியவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

“மாப்பிள்ளை..” என்று சதாசிவம் அழைக்க, 

“ஹான் சொல்லுங்க சின்னமாமா..” என்றான் ஆதவ் அர்ஜூனா. 

“இளமதியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகவா வந்து இருக்கீங்க?”

“ஆமா சின்னமாமா.. அஞ்சாவது மாசம் ஆயிடுச்சுல்ல.. அதான் மதியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாம்ன்னு கிளம்பி வந்தேன்” என்று சொல்ல, 

“முதல்ல ஃபோனை போட்டு உங்க அப்பா, அம்மாவை வரச் சொல்லுங்க” என வெடுக்கென கூறினாள் அபிராமி. 

“அவங்க எதுக்கு? நான் தான் வந்து இருக்கேன் இல்ல..” என்று ஆதவ் கூற, 

“நீங்க ஃபோனைப் போட்டு வரச் சொல்லுங்க மாப்ள..” என்றார் சதாசிவம். 

அப்போது தான் அனைவரது முகமும் ஒரு மாதிரியாக இருப்பதையே உணர்ந்தவன், “என்னாச்சு மாமா? ஏதாவது பிரச்சனையா?” என்று தனது மாமனாரைப் பார்த்து கேட்டான். 

‘நீ தான்டா பிரச்சனை’ என்று குமரன் முணுமுணுக்க, 

“நீங்க ஃபோன் பண்ணுங்க மாப்ள” என இறுகிய முகத்துடன் கூறினார் பரமசிவம்.

அவனும் தனது பெற்றோருக்கு அழைத்து உடனே மாமனாரின் வீட்டிற்கு வரச் சொல்ல, அவர்களும் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார்கள். 

“அஞ்சாவது மாசம் பொண்டாட்டியையும் பொண்ணையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வர தானே என் பையன் வந்தான். எங்களை எதுக்கு வரச் சொன்னீங்க?” என்று ஆதவ் அர்ஜூனின் அம்மா மாதவி சற்றே கடுப்புடன் கேட்க, 

“குழந்தை பொறந்து அஞ்சு மாசம் ஆச்சுன்னா, பொண்ணைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கணும் தான். ஆனா எங்க பொண்ணே இப்போ மூனு மாசம்” என மருமகனை முறைத்தபடியே கூறினாள் அபிராபி. 

அதைக் கேட்டு இனிதாக அதிர்ந்த ஆதவ் அர்ஜூனா மனைவியை ஆர்வத்துடன் நோக்க, அவள் அவனை இன்னும் அதிகமாக முறைத்தாள். 

‘இதுக்குப் போய் எதுக்கு முறைக்குறா?’ என்று நினைத்தவன் அப்படியே தாய் தந்தையைத் திரும்பிப் பார்க்க, அதில் தந்தை மகனை அற்பமாகப் பார்த்தார். மாதவியோ, தலையில் அடித்துக் கொண்டாள்.        




 




1 comment:

Powered by Blogger.