தீராக் காதல் - 3
அபி திட்டி முடித்து மூச்சிறைக்க நற்காலியில் அமர, அவள் முன்பு தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டிய அண்ணாமலை, “இந்தாம்மா.. இந்த தண்ணீய குடி..” என்றார்.
அதில் தந்தையை இன்னும் உக்கிரமாக முறைத்தவள், “நான் தான் சுகர் மாத்திரை வாங்கி கொடுத்தேன் இல்ல.. அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு?” என்று அவள் ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க,
“முதல்ல நீ தான் பிடிவாதம் பிடிச்ச.. அப்புறம் தான் நான் பிடிவாதம் பிடிச்சேன்” என்றார் நிதானமாக.
அபி அவரைத் திகைப்புடன் நோக்க, “உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா இந்த அப்பனோட கடமை முடிஞ்சுதுன்னு நானும் நிம்மதியா இருந்து இருப்பேன். ஆனா நீ வர்ற மாப்பிள்ளை எல்லாம் விரட்டி அடிச்சிட்டே இருந்தா எப்படிம்மா? நான் பாவம் இல்லையா? எனக்கும் வயசாகிட்டே போகுது. இன்னும் எத்தனை நாளைக்கு நான் உன் கூடவே இருப்பேன்னு நினைக்கிற..?” என்று அவர் உயிரை உருக்கும் குரலில் கேட்டார்.
அதற்கு அவளிடம் பதில் இல்லாமல் போக, இப்போது வாயை மூடிக் கொள்வது அவள் முறையாகிப் போனது. அண்ணாமலை பரிதவிப்புடன் மகளை நோக்கி தனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து விட, அதில் மனம் இறங்கிய அபி ஒரு பெருமூச்சுடன், “சரிப்பா.. நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று விட்டாள்.
அதைக் கேட்டு இனிதாக அதிர்ந்தவர், “அபிம்மா.. நிஜமா தான் சொல்றீயா?” என்று நம்ப முடியாமல் வினவ,
“நிஜமா எனக்கு ஓகே தான்ப்பா. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்” என்றாள்.
“கன்டிஷனா? என்ன கன்டிஷன்ம்மா?”
“மாப்பிள்ளை யாரா வேணா இருக்கட்டும். எந்த தொழில் வேணா பார்க்கட்டும். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம வீட்டுல நம்ம கூட தான் இருக்கனும்” என்று அவள் நிபந்தனை போட,
“எதே.. வீட்டோட மாப்பிள்ளையா?” என்று அதிர்ந்து போனார் அண்ணாமலை.
“ஆமா.. வீட்டோட மாப்பிள்ளை தான்”
“இந்த காலத்துல போய் யாரும்மா வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிப்பாங்க?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் கண்டிஷனுக்கு ஏற்ற போல மாப்பிள்ளையைத் தேடி கண்டுபிடிச்சி கொண்டு வாங்க. அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்று அவள் சொல்ல, அவர் சலிப்பாக முகத்தை வைத்துக் கொண்டார்.
“ஆமா, நான் ஃபோன் பண்ணப்போ வேற யாரோ பேசுனாங்களே.. யாரது?” என்று அவள் கேட்க, அப்போது தான் அண்ணாமலை ருத்ராவை அறையில் தேடினார்.
“யாரப்பா தேடுறீங்க?”
“இங்க ஒரு தம்பி நின்னுட்டு இருந்துச்சே..” என்று அவர் சுற்றும் முற்றும் தேட,
“மேடம் உள்ளே வந்த உடனே அவர் வெளியே போயிட்டார் சார்..” என்றாள் அருகில் இருந்த நர்ஸ்.
“யாருப்பா?” என்று அபி கேட்க,
“ரோட்டுல மயங்கி கெடந்த என்னை, அந்த தம்பி தான்ம்மா காப்பாத்தி ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு வந்துச்சு” என்றார்.
அதன் பின்னர், தந்தையை அழைத்துக் கொண்டு அபி வீடு வந்து சேர, அண்ணாமலை தரகருக்கு அழைத்துப் பேசினார்.
******
ஒரு வாரம் கடந்து இருக்கும். தரகர் வீட்டு வாசலில் பயத்துடன் நின்று கொண்டிருப்பதை தற்செயலாகக் கண்ட அண்ணாமலை வாசலுக்கு வந்து நின்று, “யோவ்.. தரகரே.. எப்போய்யா வந்த?” என்று உரக்கக் கேட்க,
“ஏன் சார் இப்படி கத்துறீங்க? உங்கப் பொண்ணு வீட்டுல இருக்காங்களா?” என்று தவிப்புடன் கேட்டார் தரகர்.
“அவ வீட்டுல இல்லைய்யா. வேலைக்குப் போயிட்டா. நீ தைரியமா உள்ளே வா” என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு அவர் உள்ளே செல்ல, தரகரும் பின்னாடியே சென்றார்.
இருவரும் சோபாவில் அமர, “என்னய்யா எதாவது வரன் அமைஞ்சதா?” என்று கேட்டார் அண்ணாமலை.
“ம்.. இரண்டு, மூனு வரன் அமைஞ்சது சார். ஆனா வீட்டோட மாப்பிள்ளைன்னு சொன்னதும் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டாங்க” என்று சொல்ல, அண்ணாமலையின் முகம் வாடிப் போனது.
“சொல்றேனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க சார். இந்த காலத்துல போய் யார் மாமனார் வீட்டோட இருக்க சம்மதிப்பாங்க?”
“உனக்குத் தெரியாதது என்ன? என் பொண்ணு இவ்ளோ இறங்கி வந்ததே பெருசுய்யா?”
“சார்.. இப்போ எல்லாம் பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் போகனும்ன்னு சொன்னா கூட, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சரின்னு தலை ஆட்டிடுறாங்க. ஆனா வீட்டோட மாப்பிள்ளைன்னா யோசிக்காம வேண்டாம்ன்னு சொல்லிடுறாங்க. நீங்க நினைக்கிற போல வரன் வேணும்ன்னா, அது அநாதை பையனா இருந்தா மட்டும் தான் அமையும்” என்று சொல்ல,
“சரி, கைவசம் அப்படி எதாவது பையன் இருந்தா காட்டு. பார்க்கலாம்..” என சிரித்து கொண்டே கேட்டார் அண்ணாமலை.
“என்ன சார் சொல்றீங்க.. அப்பா, அம்மா இல்லாத பையன்னாலும் உங்களுக்கு ஓகேவா?”
“அதெல்லாம் பரவாயில்லைய்யா.. பையன் நல்லவனா இருந்தா போதும். உனக்கே என் பொண்ணு குணம் தெரியும்ல்ல, சட்டு சட்டுன்னு கோபப்பட்டு கத்துவா. வர்றவன் கொஞ்சம் அவளை அட்ஜெஸ்ட் பண்ணி போறவனா இருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும்” என்றார் மகளின் குணம் அறிந்த தந்தையாய்.
அண்ணாமலை அப்படி கூறியதும் தரகர் தனது பையில் தேடி எடுத்து ஒரு புகைப்படத்தை அவரிடம் நீட்டி, “இந்த பையனுக்கு அப்பா, அம்மா இல்ல. நல்லா படிச்சி இருக்கான். படிப்புக்கு ஏத்த வேலை இல்லை. அதனால கிடைக்குற வேலை எல்லாம் செய்றான். நம்ம அழகர் காலனியில தான் தங்கி இருக்கான். பேரு.. ருத்ரா..” என்று சொல்ல,
அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்த அண்ணாமலை “அட.. இந்த பையனா..” என்றார் ஆச்சரியமாக.
“உங்களுக்குத் தெரியுமா சார்?”
“ம்.. போன வாரம் நான் மயங்கி ரோட்டுல விழுந்துட்டேன்ய்யா. அப்போ என்னைத் தூக்கிட்டுப் போய் ஹாஸ்பிடல்ல சேர்த்தது இவன் தான்” என்று அவர் சொல்ல,
“நல்ல தங்கமானப் புள்ள சார்.. உதவின்னு கேட்குறவங்களுக்கு மறுக்காம உதவி செய்யும்..” என்றார் புன்னகையுடன்.
அடுத்த நாள் அழகர் காலனிக்குச் சென்று ருத்ராவைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்த அண்ணாமலைக்கு, நல்ல விதமாகவே பதில் வந்தது. அதில் திருப்தி அடைந்தவர் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மகளிடம் ருத்ராவின் புகைப்படத்தை நீட்டினார்.
‘என்னதிது?’ என்பது போல் அவள் புருவம் சுருக்கி தந்தையைப் பார்க்க,
“மாப்பிள்ளை போட்டோ” என்றார்.
அபி அந்த கவரை வாங்க, “நாளைக்குப் பொண்ணு பார்க்க வரச் சொல்லி இருக்கேன்” என்றார் தகவல் போல.
அதைக் கேட்டு அவள் அதிரவில்லை. “நான் சொன்ன கன்டிஷன் என்னாச்சு?” என்று வினவ,
“மாப்பிள்ளைக்கு அம்மா, அப்பா இல்லை.. அதனால கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம கூடவே இருக்குறதுல அவருக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லையாம்” என்றார்.
புகைப்படத்தைப் பார்க்கப் போன அபி சட்டென விழிகளை உயர்த்தி தந்தையை நோக்கினாள்.
“மாப்பிள்ளையா? அதுக்குள்ள முடிவே பண்ணிட்டீங்களா?” என்று அவள் கேட்க,
“ஆமா.. எனக்கு இந்த மாப்பிள்ளையை ரொம்பப் பிடிச்சிருக்கு. என்ன ஆனாலும் உனக்கு இவரைத் தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்ன்னு நான் முடிவே பண்ணிட்டேன்” என்றார் விரிந்தப் புன்னகையுடன்.
அபி அந்தப் புகைப்படத்தைப் பார்க்காமலேயே அதனை கவருக்குள் போட்டவள், எதுவும் சொல்லாமல் தனது அறைக்குச் சென்றாள்.
**********
அரசு மருத்துவமனைக்கு வந்த அபி, நேரே டாக்டர் எழிலரசனின் அறைக்குச் சென்றாள்.
“டாக்டர்.. உங்களைப் பார்க்க இன்ஸ்பெக்டர் அபிலாஷினி வந்து இருக்காங்க” என்று ஒரு நர்ஸ் வந்து அவரிடம் சொல்ல,
“வரச் சொல்லுங்க” என்றார்.
அந்த நர்ஸ் வெளியே சென்று அபியிடம், “டாக்டர் உங்களை உள்ளே வரச் சொன்னாங்க மேடம்” என்று கூறி விட்டுச் செல்ல, அபி மருத்துவரின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
“வாங்க.. உட்காருங்க..” என்று மருத்துவர் அழைக்க,
“அந்த பையன் பிரவீன் இப்போ எப்படி இருக்கான் டாக்டர்” எனக் கேட்டபடி நாற்காலியில் அமர்ந்தாள் அபி.
“ம்.. இப்போ கொஞ்சம் பரவாயில்லை. ஆனா போதைப் பொருள் நினைவுக்கு வந்துட்டா, ரொம்ப முரட்டுத்தனமா மாறிடுறான். யாராலையும் அந்தச் சின்ன பையனை கன்ட்ரோல் பண்ணவே முடியல” என்றவர் அவன் அடம் பிடிக்கும் சமயத்தில் மயக்க மருத்து கொடுத்து சில மணி நேரங்கள் அவனை மயக்கத்துலயே வைத்து இருப்பதையும் கூறினார்.
“இப்போவும் அவன் மயக்கத்துல தான் இருக்கானா டாக்டர்?”
“இல்ல, காலையில இருந்து அவன் எதுவும் அடம் பிடிக்கல.. அதனால சுயநினைவோட தான் இருக்கான்” என்றவர் அபியை அழைத்துக் கொண்டு பிரவீன் அனுமதிக்கப்பட்டு இருந்த அறைக்குச் சென்றார்.
பெற்றவர்களைக் கொன்ற வழக்கில் கைதான சிறுவன் பிரவீன் போதைக்கு அடிமையாகி இருந்ததால், சிறையில் இருக்கும் போது போதைப் பொருள் கேட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான். யாரும் அவன் கேட்ட போதைப் பொருளைத் தராததால், என்ன செய்வது என்று தெரியாமல் இரும்பு கம்பியில் தலையை இடித்துக் கொண்டான்.
“டேய்.. என்னடா பண்ற?” என்று அங்கிருந்த போலீஸ்க்காரர் ஒருவர் பதற்றமாகக் கேட்க, அவன் அவர் பேச்சைக் கேட்காமல் அறையில் இருந்த குடிநீர் மண் பானையை கையில் எடுத்து மண்டையின் மேல் போட்டு உடைத்தான். அதில் இரத்தம் பீய்த்துக் கொண்டு வெளியேற, ஜெயிலர் வந்து பார்த்து விட்டு அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அபி மருத்துவருடன் பிரவீனின் அறைக்குள் நுழைய, அந்தச் சின்னஞ்சிறுவனின் முகம் பயத்தில் உறைந்து போய் இருந்தது. “வேணா.. என்னை அடிக்காதீங்க.. அடிக்காதீங்க..” என்று அவன் காக்கி உடையில் இருந்த அபியைப் பார்த்து அலற, மருத்துவர் தான் அவனைச் சமாதானப் படுத்தினார்.
“பயப்படாதேப்பா.. அவங்க உன்னை அடிக்க வரல.. ஏதோ உங்கிட்ட கேட்கணுமாம். அதை மட்டும் கேட்டுட்டு அவங்கப் போயிடுவாங்க” என்று மருத்துவர் சொல்ல, அவன் மருண்ட விழிப் பார்வையுடன் அபியை ஏறிட்டான்.
அவள் அவனருகே வந்து அமர்ந்து அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்க, அவன் பதிலுக்குப் புன்னகைக்கவில்லை. ஒரு வித பதற்றத்திலேயே இருந்தான்.
“சாப்பிட்டீயா?” என்று அவள் கேட்க, அவன் ‘ம்..’ என்று தலை அசைத்தான்.
அவனது தலை கட்டை தொட்டுப் பார்த்தவள், “இப்போ வலி எல்லாம் பரவாயில்லையா?” என்று கேட்க, அதற்கும் “ம்..” என்றான்.
“உனக்கு எத்தனை ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க?” என்ற கேள்விக்கு அவன் இரு விரலைக் காட்ட,
“இரண்டு பேரா? அவங்க பெயர் என்ன?” என்று கேட்டாள்.
“அரவிந்த், ஆனந்த்” அவன் மெல்லியக் குரலில் பதில் சொல்ல, “கிளாஸ் மேட் ஆஹ்?” என்று கேட்டாள் அபி.
அதற்கு ‘இல்லை’ என்பது போல் பிரவீன் தலை அசைக்க, அபியின் சந்தேகம் அங்கு தான் வலுத்தது.
“சரி.. சொல்லு.. உன் கைக்குப் போதைப் பொருள் எப்படி வந்துச்சு?” என்று அவனை அழுத்தமாகப் பார்த்து வினவ, அவன் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.
“நீ மட்டும் வாங்குவீயா? இல்ல, உன் ஃப்ரெண்ஸும் உன் கூட சேர்ந்து வாங்குவாங்களா?” என்று கேட்க, அதற்கும் பதில் இல்லை.
இதே பெரியவனாக இருந்தா, அபி விசாரிக்கும் முறையே வேறாக தான் இருக்கும். ஏதும் அறியாத வயதில் தவறான பாதைக்குச் சென்று விட்ட சிறுவனை, அதுவும் தன்னைக் கண்டாலே பயந்து நடுங்கும் பாலகனை அடித்தோ துன்புறுத்தியோ விசாரிக்க அவளது மனம் இடம் கொடுக்கவில்லை.
சில நொடிகள் பொறுத்து பார்த்தவள், “ஓகே டாக்டர்.. நான் கிளம்புறேன்..” என்று கூறி விட்டு அங்கிருந்துக் கிளம்பிச் செல்ல, பிரவீனின் கலங்கியப் பார்வை அபி சென்ற திசையை வெறித்து நோக்கின.
Post a Comment