தீராக் காதல் - 4
பெண் பார்க்க மாலை ஆறு மணிக்கே வந்து விட்டான் ருத்ரா. அவன் மட்டும் தனியே தரகர் உடன் வந்து இருக்க, அங்கு அண்ணாமலையைப் பார்த்து விட்டு, “சார்.. நீங்க என்ன சார் இங்க?” என்று ஆச்சரியமாக வினவ,
“தம்பி.. பொண்ணோட அப்பாவே இவர் தான்ப்பா” என்றார் தரகர்.
“என்னண்ணே சொல்றீங்க.. சார் பொண்ணைத் தான் எனக்கு முன்னாடியே தெரியுமே..” என்று அவசரமாக உரைத்தவன்,
பின்பு அதிர்ச்சியில் விழி விரித்து ‘அந்தப் போலீஸ்க்காரப் பொண்ணா?’ என்பது போல் கையால் சைகை செய்ய,
அவரும் ‘ஆமாம்’ என்பது போல் புன்னகையுடன் இரு கண்களையும் மூடி திறந்தார்.
“ஐயைய்யோ.. நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா..” என்று விட்டு அவன் ஓடப் பார்க்க,
“வாட்ச்மேன்.. கதவை இழுத்து மூடு..” என்று உரக்கக் குரல் கொடுத்தார் அண்ணாமலை.
கதவு வரை ஓடியவனை வாட்ச்மேனே பிடித்து இழுத்து வந்து அண்ணாமலையிடம் நிறுத்த, “சார்.. சார்.. என்னைய விட்டுடுங்க சார்.. நானே அப்பா, அம்மா இல்லாத பையன்.. என்னைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்லையா?” என்று கெஞ்சலாக விழிகளைச் சுருக்கிக் கேட்டான் ருத்ரா.
“பயப்படாம உள்ளே வாங்க மாப்பிள்ளை.. நான் தான் இருக்கேன் இல்ல..” என்ற அண்ணாமலை ருத்ராவின் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டு வீட்டினுள் அழைத்துச் செல்ல, அவன் வேறு வழியில்லாமல் தரகரை முறைத்துக் கொண்டே சென்றான்.
ஹாலில் அபிலாஷினி காக்கிச்சட்டையில் கம்பீரமாக இருக்கும் புகைப்படங்கள் வரிசையாக இருக்க, ருத்ரா திடுக்கிடலுடன் அண்ணாமலையை ஏறிட்டான்.
“என் பொண்ணு பார்க்கத் தான் பயங்கரமா இருப்பா. ஆனா பாசக்காரிப்பா..” என்று நெகிழ்ச்சியாகக் கூறியவர், அவனுக்கு ஃப்ளாஸ்க்கில் இருந்த தேநீரை ஒரு கப்பில் ஊற்றிக் கொடுக்க, ருத்ரா வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டான்.
அண்ணாமலை தன் மகளைப் பற்றிப் பேசிக் கொண்டே போக, ருத்ராவின் பார்வை அபியின் புகைப்படத்தில் பதிந்தது. நேரம் அதன் போக்கில் போக, மணி 8 ஆகியும் அபி வீட்டிற்கு வரவில்லை.
அப்போது ருத்ராவின் அலைப்பேசி அலற, “மேனேஜர் கால் பண்றார்” என்றவன் அழைப்பை ஏற்று அலைப்பேசியைக் காதில் வைத்தான்.
“.. ..”
“ஓகே சார்..”
“..”
“ஓகே சார்.. நான் முடிச்சிடுறேன்..” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவன்,
அண்ணாமலையை நோக்கி, “அர்ஜென்ட் வொர்க் வந்திடுச்சு. நான் உடனே போய் ஆகனும்” என்றான் தயக்கமாக.
அவர் தரகரைப் பார்க்க, “தம்பி.. பொண்ணு இன்னும் வரலையே..” என்று இழுத்தார்.
“பரவாயில்லை.. நான் ஆல்ரெடி பொண்ணைப் பார்த்துட்டேன். எனக்கு ஓகே தான். பொண்ணுக்கும் சம்மதம்ன்னா, கல்யாணத்தை சிம்பிளா வச்சிக்கலாம்” என்று புன்னகையுடன் சொல்ல,
“ரொம்ப சந்தோஷம் மாப்ள” என்றார் அண்ணாமலை.
ருத்ரா கிளம்ப எத்தனிக்க, “அப்புறம் வரதட்சணை பத்தி ஒன்னுமே பேசலையே..” என்று அண்ணாமலை கேட்டார்.
“எதுக்கு? உங்கப் பொண்ணு என்னை ஸ்டேஷன்ல வச்சி முட்டிக்கு முட்டி தட்டவா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டவன் கிளம்பிச் சென்று விட, தரகரும் அவனுடன் கிளம்பி விட்டார்.
*********
அதே நேரம் அபி சாதாரண உடையில் பிரவீன் வீட்டைச் சுற்றிலும் நோட்டம் விட்டு கொண்டிருந்தாள். அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, “இங்க அரவிந்த், ஆனந்த் யாரு?” என்று கேட்க, அவர்கள் அப்படி யாரும் அந்தப் பகுதியில் இல்லை என்று கூறி விட்டார்கள்.
“இல்லையா..” என்று அதிர்ந்த அபி தனது அலைப்பேசியில் இருந்த பிரவீனின் போட்டோவைக் காட்டி, “இவனைத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“ம்.. இவன் பிரவீன்..” என்று அவர்கள் கோரஸ் போட,
“இந்த பையன் யாரோட க்ளோஸ் ஆஹ் இருப்பான்?” என்று கேட்டாள்.
“இவன் எப்பவும் அந்த சேரிக்கார பசங்களோட தான் சுத்திட்டு இருப்பான். எங்களோட எல்லாம் சேரவே மாட்டான். நாங்க விளையாட கூப்பிட்டாலும் வீட்டை விட்டு வர மாட்டான்” என்று சொல்ல,
‘அப்போ கண்டிப்பா அந்த பசங்களும் அந்த சேரியில தான் இருக்கனும்’ என்று கணித்தவள் தனது வாகனத்தை எடுத்து கொண்டு சேரிக்குப் புறப்பட்டாள்.
பிரதான சாலையிலேயே ஆட்டோவில் இருந்து இறங்கி கொண்டவள், சேரிக்குள் செல்லாமல் தெருமுனையில் இருந்த டீக்கடைக்குச் சென்றாள்.
“ஒரு டீ” என்று டீ மாஸ்டரிடம் சொன்னவளின் பார்வை சுற்றும் முற்றும் அலசி விட்டு கடைசியாக டீக்கடை பென்ஞ்சில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்த இருவரில் படிந்தது.
“தம்பி.. இங்க அரவிந்த், ஆனந்த்..” என்று அவள் ஆரம்பிக்க,
“இன்னாக்கா.. சரக்கு வேணுமா?” என்று கேட்டான் ஒருவன்.
அடுத்தவனோ, “அவனை விட விலை கம்மியா சரக்கு கொடுக்க நம்ளான்ட ஆள் இருக்குக்கா” என்று அருகில் இருந்த இன்னொருவன் சொல்ல, அபிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இதைச் சொன்ன இருவருமே பதின்ம வயதில் இருந்ததைக் கண்டு தான் அவளுக்கு அதிர்ச்சியே.
சட்டென தன் முக பாவத்தை மறைத்துக் கொண்டவள், “இல்ல, எனக்கு அரவிந்த், ஆனந்த்தை தான் பார்க்கனும்” என்று கேட்க,
“சொல்ல வேண்டியது சொல்லிட்டேன். அதுக்கு மேல உன் இஷ்டம்க்கா”
ஏதோ போனால் போகிறது என்ற தோரணையில் சொன்னவன், “இப்படியே நேரே போய் ரைட்ல திரும்புன நாலாவது வீடு..” என்று சொல்ல, கையில் வாங்கிய தேநீரை குடிக்காமலேயே வைத்து விட்டு அவள் சேரிக்குள் சென்றாள்.
போகும் போதே தனது போலீஸ் டீமுக்கு வாட்சப்பில் தன்னுடைய லோகேஷனை அனுப்பி விட்டு உடனே ‘கிளம்பி வருமாறு’ தகவல் அளித்தவள், அந்த சிறுவன் சொன்ன வீட்டை அடைந்தாள்.
அவள் கதவைத் தட்டி விட்டு காத்திருக்க, “ஆன்.. வரேன்..” என குரல் கொடுத்து கொண்டே வந்து கதவைத் திறந்த அரவிந்த், அபியை அடையாளம் கண்டு திடுக்கிட்டுப் போனான்.
அவன் தன்னைக் கண்டு கொண்டான் என்று உணர்ந்தவள், அவன் கதவை அடைக்க முயல்வதையும் உணர்ந்து காலால் கதவை எட்டி உதைத்தாள்.
அரவிந்த் கதவை விட்டு இரண்டடி பின்னால் சென்று கீழே விழ, வீட்டினுள் நுழைந்த அபி அவனை அடி அடியென்று அடித்தாள். அவன் ஒன்றும் பிரவீன் அளவுக்கு சிறுவன் இல்லை. 18 வயதிற்கு மேல் உள்ளவன் தான்.
அடி தாங்க முடியாமல் அவன் கதறி அழுத போது ஆனந்த் வீட்டினுள் நுழைய, “மச்சான் போலீஸ்டா ஓடிரு..” என்று கத்தினான் அரவிந்த்.
ஆனந்த்தும் ஓடப் பார்க்க, சரியாக அவ்விடத்திற்கு வந்து விட்ட அபி உடைய போலீஸ் டீம் அவனைச் சுற்றி வளைத்தன.
அரவிந்த், ஆனந்த் இருவரையும் கைது செய்து இழுத்து செல்லும் அபியைக் கண்டு டீக்கடையில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்த அந்த இருவர் அதிர்ச்சியில் எச்சில் கூட்டி விழுங்க, போகும் போது அவர்களை ஒரு பார்வைப் பார்த்தாள் அபி.
அந்தப் பார்வையில் நடுங்கியவர்கள் பயத்துடன் நின்று இருக்க, அபி நடந்து சென்று போலீஸ் வாகனத்தின் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள்.
அத்துடன் அவர்களைப் பார்த்து தன்னிடம் வரும்படி ஆள்காட்டி விரலைக் காட்டி அழைக்க, அவர்களும் தயங்கிக் கொண்டே அந்த ஜீப்பின் அருகே சென்று நின்றார்கள்.
“எவ்ளோ டா சரக்கு?” என்று அபி கேட்க,
“அக்கா அக்கா.. சாரிக்கா.. நீங்க போலீஸ்ன்னு தெரியாம பேசிட்டோம்” என்று இருவரும் ஒருசேர கெஞ்சினர்.
“என்ன படிச்சி இருக்கீங்க இரண்டு பேரும்..?”
“டென்த்..” அவர்களின் குரல் தாழ்ந்து வெளிவர,
“ஒழுங்கா படிக்கிற வழியைப் பாருங்க. இவங்களை மாதிரி ஆளுங்க கூட சேர்ந்து சுத்தி, உங்க வாழ்க்கையை அழிச்சிக்குறதும் இல்லாம, மத்தவங்க வாழ்க்கையையும் கெடுக்காதீங்க” என்று அறிவுரைக் கூறினாள்.
“இல்லக்கா.. ஒழுங்கா படிக்கிறோம்..”
அவர்கள் அவசரமாகக் கூற, டிரைவரைப் பார்த்தவள் “வண்டியை எடுங்க” என்றாள்.
வண்டி நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றது. லாக்கப்பில் வைத்து அரவிந்த், ஆனந்த் இருவரையும் அடித்து உதைக்க, அவர்களும் வலி தாங்க முடியாமல் அவள் கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் சொன்னார்கள்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தை வீடியோ பதிவாக எடுத்து வைத்தவள், கமிஷனருக்கு அழைத்தாள்.
அவளது எண்ணைப் பார்த்ததுமே அழைப்பை ஏற்ற கமிஷனர், “சொல்லும்மா அபி..” என்று சொல்ல,
“சார்.. அந்தப் போதைப் பொருள் கும்பலுக்குப் பின்னாடி யார் இருக்காங்கன்னு கண்டுப்பிடிச்சிட்டேன்” என்றாள்.
“யாரு..?”
“தினேஷ்”
“எந்த தினேஷ்?”
“லோக்கல் ரவுடி ராஜாவோட வலதுக்கை” என்று அவள் சொன்னதும் கந்தசாமிக்குப் பேச்சே வரவில்லை.
“அவனை இப்போவே அரெஸ்ட் பண்ணி ஜட்ஜ் முன்னாடி நிறுத்தப் போறேன்” என்று அபி ஆவேசத்துடன் சொல்ல,
“இல்ல இல்ல அபி.. நீ கொஞ்சம் பொறுமையா இரு” என்றார் அவர்.
“ஏன் சார்?”
“என்ன அபி புரியாம பேசுற? தினேஷ் மேல அவ்வளவு ஈஸியா கை வைக்க முடியாது. அவனுக்கு ஒன்னுன்னா அவன் அண்ணன் ராஜா சும்மா இருக்க மாட்டான். அவனுக்கு அரசியல் சப்போர்ட்டும் இருக்கு”
“ஓ.. ரவுடி அண்ணனும் அரசியல் சப்போர்ட்டும் இருந்தா என்ன வேணுன்னாலும் செய்யலாமா சார்? அதுக்கு எதுக்கு நாம காக்கி யூனிபார்ம் போட்டுக்கிட்டு போலீஸுன்னு ஊருக்குள்ள சுத்தனும்?”
“அபி.. ரியாலிட்டிய புரிஞ்சிக்க பாரு..”
“நல்லா புரிஞ்சிக்கிட்டேன் சார். நீங்களா என்னை கூப்ட்டு ஒரு கேஸை கொடுத்து கண்டுப்பிடின்னு சொல்லுவீங்க. நான் நாயா திரிஞ்சி குற்றவாளியைக் கண்டுப்பிடிச்சி யாருன்னு சொல்லுவேன். அவனுக்குப் பெரிய பெரிய சப்போர்ட் எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சா, உடனே பல்டி அடிப்பீங்க.. இதுக்குப் பேசாம போலீஸ் டிப்பார்ட்மென்ட்டை கலைச்சிட்டு அந்தந்த ஏரியா ரவுடிங்க வீட்டு வாசல்ல போய் நின்னு அவனுங்களுக்கு கொடி பிடிக்கலாம்”
அபி ஆத்திரத்தில் பேச, “இள இரத்தம் இல்ல, அப்படி தான் பேசுவ..” என்றார் கமிஷனர்.
“எப்படி வேணா நினைச்சிக்கோங்க சார். காலையில் முதல் வேலையா அரெஸ்ட் வாரெண்ட்டோட போய் தினேஷை அரெஸ்ட் பண்ணி கோர்ட்ல நிறுத்துறேன்” என்று உறுதியாக உரைத்தவள் அழைப்பைப் பட்டென்று துண்டித்து விட்டாள்.
விடிந்ததும் முதல் வேலையாக தினேஷை கைது செய்ய வாரெண்ட் வாங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு அபி வீட்டிற்குச் செல்ல, அதனை ஒரு காவலாளி ராஜாவுக்கு அலைப்பேசியில் அழைத்து சொல்லி விட்டான்.
“என்னய்யா சொல்ற?”
“நாளைக்குக் காலையில உங்க தம்பியை அரெஸ்ட் பண்ண ஏற்பாடும் செய்யச் சொல்லிட்டு அந்தம்மா இப்போ தான் வீட்டுக்குக் கிளம்பிப் போயிருக்கு” என்று சொல்ல,
“இப்போ என் தம்பிக்கு எதிரா அவக்கிட்ட என்னென்ன ஆதாரம் எல்லாம் இருக்கு?” என்று கேட்டான் ராஜா.
அவரும் ஒவ்வொன்றாகச் சொல்ல, அதற்குள் படுக்கையில் இருந்து எழுந்து சட்டையை மாற்றிக் கொண்டு வாசலுக்கு வந்து விட்ட ராஜா, “உனக்கு உயிர் மேல ஆசை இருந்தா, இப்போவே வீட்டுக்கு ஓடிப் போயிடு” என்று பல்லைக் கடித்து வார்த்தைகளை மென்று துப்பி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
“ஏய்.. எல்லாரும் கிளம்புங்கடா” என்று ஒரு குரல் கொடுத்தவன் காரின் முன்னிருக்கையில் ஏறி அமர, அவனைத் தொடர்ந்து ஐந்தாறு தடிமாடுகளும் வண்டியின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தன.
“முதல்ல வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு..” என்று ராஜா சொல்ல, டிரைவரும் புயல் வேகத்தில் காரை இயக்கினான்.
************
நள்ளிரவு பொழுதில் வீட்டிற்கு வந்த மகளை எதிர்கொண்ட அண்ணாமலை, “ஒரு தடவை கூட என் பேச்சைக் கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட இல்ல..” என்று கேட்க, புரியாமல் விழித்தவள் டீப்பாய் மீது தாம்பூலத் தட்டு இருப்பதைப் பார்த்தப் பின்பு தான், இன்று பெண் பார்க்க வருவதாக தந்தை கூறியதே அவளின் நினைவிற்கு வந்தது.
“இல்லப்பா.. ஒரு முக்கியமான கேஸ் விஷயமா..” என்று அவள் வாயைத் திறக்கும் போதே அவளின் முகத்திற்கு நேரே ஒரு கிப்ட் பாக்ஸை நீட்டினார் அண்ணாமலை.
“என்னப்பா இது?”
“மாப்பிள்ளை போகும்போது உங்கிட்ட இதைக் கொடுக்கச் சொல்லி கொடுத்துட்டுப் போனார்”
அபி யோசனையுடனே அதனை வாங்கிக் கொள்ள, “மாப்பிள்ளைக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்காம். கல்யாணத்தைக் கூட சிம்பளா வச்சிக்கலாம்ன்னு சொல்லிட்டார்” என்றார் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்.
அண்ணாமலை தன் போக்கில் ருத்ராவைப் பற்றிப் புகழ்ந்து தள்ள, அபிக்கு அவரது பேச்சு எல்லாம் காதிலேயே விழவில்லை. தந்தையின் முகத்தில் தவழும் புன்னகையை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவரது புன்னகை அவளையும் தொற்றிக் கொண்டது.
“கல்யாணம் வேணா மாப்பிள்ளை இஷ்டப்படி சிம்பளா வச்சிக்கலாம். ஆனா ரிசப்ஷன் மட்டும் பெருசா கிராண்டா செஞ்சிடனும் அபிம்மா” என்று சொல்லி விட்டு அவர் சென்று விட, அபியும் மெல்ல நடந்து தனது அறைக்குச் சென்றாள்.
கையில் இருந்த கிப்ட் பாக்ஸை திறந்துப் பார்த்த அபி, அதில் கிளி கூண்டு இருப்பதைக் கண்டு யோசனையாகப் புருவம் சுருக்கினாள்.
அப்போது அவளது அலைப்பேசி அலற, கையில் இருந்த கிளி கூண்டை எதிரே இருந்த மேஜையில் வைத்து விட்டு அழைப்பை ஏற்றவள் “ம்.. சொல்லுங்க கிருஷ்ணன் சார்..” என்றாள். கிருஷ்ணன் அபியின் பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டெபிளாக இருக்கிறார்.
“மேடம்.. நீங்க போனதுக்கு அப்புறம் ராஜா அடியாளுங்களோட ஸ்டேஷனுக்கு வந்து எங்க எல்லாரையும் அடிச்சிப் போட்டுட்டு அரவிந்தையும் ஆனந்தையும் தூக்கிட்டுப் போயிட்டான்” என்று பதற்றத்துடன் சொல்ல, அபி அழைப்பைத் துண்டித்து விட்டு உடனே காவல் நிலையத்திற்குக் கிளம்பி விட்டாள்.
Post a Comment