தீராக் காதல் - 5
காவல் நிலைய வாசலில் ஜீப்பை நிறுத்தியவள், நிமிர்ந்து காவல் நிலையத்தின் பெயர்ப்பலகையைப் பார்க்க, அதையும் அடித்து நொறுக்கி ஒரு பக்கமாக சாய்வாக தொங்க விட்டு இருந்தார்கள். அதைப் பார்த்து ஆத்திரத்தில் பல்லைக் கடித்த அபி, காவல் நிலையத்திற்குள் நுழைய, நாற்காலிகளும் மேஜைகளும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டாள். காவல் நிலையமே சுனாமி வந்தது போல் தலைகீழாய் புரட்டிப் போடப்பட்டு இருக்க, அரவிந்த் மற்றும் ஆனந்த் இருந்த சிறை காலியாக இருந்தது.
இரவு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளிகள் எல்லாம் இரத்தக் காயத்துடன் காட்சி அளிக்க, அவர்களிடம் விரைந்தவள் “ஏன் இங்கேயே இருக்கீங்க? ஹாஸ்பிடலுக்குப் போகலாம் இல்ல..” என்று அக்கறையுடன் கேட்க,
“பரவாயில்லை மேடம். எங்க யாருக்கும் பெருசா ஒன்னும் இல்லை..” என்ற கிருஷ்ணன் சற்று முன் நடந்தேறிய கொடூரத்தை அவளிடம் கூறினார்.
தனது அறைக்கு வந்த அபி அலங்கோலமாய் கிடந்த அறையைக் கண்டு ஆத்திரம் கொண்டாள். முக்கியமான பைல்கள் வைக்கும் இரும்பு லாக்கர் கூட உடைக்கப்பட்டு திறந்து கிடக்க, அவள் கேள்வியாக கான்ஸ்டெபிளைப் பார்த்தாள்.
“மேடம்.. நீங்க கஷ்டப்பட்டு திரட்டுன ஆதாரத்தை எல்லாம் அந்த ராஜா போகும் போது எடுத்துட்டு போயிட்டான். இப்போ நாம என்ன பண்றது மேடம்?” என்று கேட்க, அபியின் அலைப்பேசி அலறியது.
மருத்துவமனையில் இருந்த பிரவீன் அந்த அறையில் இருந்த மின்விசிறியில் படுக்கை விரிப்பினால் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விட்டான் என்று மறுமுனையில் தகவல் சொல்லப்பட, அபியின் கண்கள் ஆத்திரத்தில் சிவந்துப் போயின. அவளுக்குத் தெரியும் இந்த வேலையைப் பார்த்தது கூட ராஜா தான் என்று.
அதே நேரம் வாசலில் சைரன் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்க, எல்லோரும் எட்டிப் பார்த்தார்கள். “மேடம் கமிஷனர் சார் வந்து இருக்கார்” என்று ஏட்டு சொல்ல, அபி இறுகிய முகத்துடன் நின்று இருந்தாள்.
வண்டியில் இருந்து இறங்கியவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே அபியிடம் வந்து நிற்க, கடமைக்காக அவரைப் பார்த்து விரைப்பாக சலியூட் அடித்தவள் அமைதியாக நின்றிருந்தாள்.
“உங்க நல்ல நேரம்.. அந்த ராஜா யாரையும் எதுவும் செய்யாமல் விட்டுட்டு போயிட்டான்” என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவர் சொல்ல, அபி அவரை அழுத்தமாகப் பார்த்தாள்.
எல்லோரையும் போகும்படி கை அசைத்த கந்தசாமி, மற்றவர்கள் அந்த அறையில் இருந்து சென்ற பின்பு தனது தொண்டையைச் செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார்.
“அபி உன்னை இந்த கேஸை எடுக்கச் சொன்னதே நான் தான். இப்போ நானே சொல்றேன். நீ இந்த கேஸை விட்டுடு. இதுக்கு மேல ராஜாவோட தம்பியை அரெஸ்ட் பண்றதைப் பத்தி கனவுல கூட நீ நெனைச்சி பார்க்காதே” என்று அவர் சொல்ல,
“வார்னிங் அஹ் சார்?” என்று இறுகிய குரலில் கேட்டாள்.
ஒரு பெருமூச்சை வெளியிட்ட கமிஷனர், “இல்ல அபி.. நான் உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன்” என்றார்.
இதழ் பிரிக்காமல் விரக்திச் சிரிப்பு ஒன்றை உதிர்த்த அபி, “இதுக்கு முன்னாடி இதே மாதிரி எத்தனையோ கேஸை தனியா ஹேண்டில் பண்ணி இருக்கேன். அப்போ எல்லாம் வராத கரிசனம், இப்போ மட்டும் எதுக்கு சார்?” என்று கேட்க, இப்போது அவர் மௌனம் காத்தார்.
இந்த பிரவீன் வழக்கிற்கு பின்னணியில் ராஜாவின் தம்பி சிக்குவான் என்று அவர் என்ன கனவா கண்டார்?
“ஓகே சார்.. மேலதிகாரியோட ஆர்டரை ஃபாலோவ் பண்ண வேண்டியது தானே எங்களோட வேலை. நான் இந்த கேஸை இதோட விட்டுடுறேன்” என்று அபி சொல்ல, கமிஷனர் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
சிறிது தூரம் சென்றதும் பாலத்தின் நடுவே வாகனம் நிற்க, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருந்தவன் நக்கல் சிரிப்புடன் திரும்பி பின்னிருக்கையில் அமர்ந்து இருந்த கமிஷனரைப் பார்த்தான்.
அவன் வேறு யாருமில்லை, அபி யாரை கைது செய்ய துடித்தாளோ, அந்த தினேஷ் தான் இவன்.
தினேஷின் நக்கல் சிரிப்பை வெறித்து நோக்கிய கந்தசாமி, “நான் தான் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன் இல்ல, என் பொண்ணு எங்க?” என்று கேட்க,
“அதெல்லாம் இந்நேரம் பத்திரமா உங்க வீட்டுக்குப் போயிருப்பா” என்று அலட்சியமாகக் கூறியவன் கதவைத் திறந்து கொண்டு இறங்க, கமிஷனரும் இறங்கினார்.
ஆம்.. இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி கமிஷனர் என்பதை ராஜா கண்டறிந்த அடுத்த நொடியே அவரது பொண்ணை வீடு புகுந்து கடத்தி விட்டான்.
போதைப் பொருள் வழக்கை அபி கை விட செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்க, அவரும் வேறு வழியில்லாமல் அபியைப் பார்க்க அந்த இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குச் சென்றார். ஆனாலும் அவரை நம்பாமல் கூடவே வந்த தினேஷ், அபியும் கமிஷனரும் பேசுவதை மறைவாக நின்று ஒட்டு கேட்டான்.
“கமிஷனரே.. இனியும் அந்த பொம்பள போலீஸ் எங்க விஷயத்துல தலையிட்டுச்சுன்னு வச்சிக்கோங்க, அப்புறம் உங்க பொண்ணை எப்பவுமே பார்க்க முடியாத மாதிரி ஆயிடும்”
போகும் போது அவன் மிரட்டி விட்டுச் செல்ல, கமிஷனர் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து வாகனத்தை விரைந்து செலுத்தினார்.
அவர் வீட்டினுள் காலடி எடுத்து வைக்க, அழுகையுடன் ஓடி வந்து தந்தையின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள் அவரது ஆசை மகள் யாழினி. பதினேழு வயது பருவ மங்கையவள், கொடூரர்களின் கையில் இருக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து என்பதை உணர்ந்தவர், தனது கடமையை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு தந்தையாகச் செயல்பட்டார்.
மற்றொரு புறம் காவலர்களே உடைந்தப் பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்க, அபி இறுகிய முகத்துடன் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தாள்.
நேரம் அதன் போக்கில் கடக்க, அதிகாலையில் தேநீர் வாங்கி வந்த கான்ஸ்டெபிள், “மேடம் டீ..” என்று விட்டு நிற்க, அவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
அபியின் முன்பிருந்த மேஜையில் தேநீர் குவளையை வைத்தவன், எதுவும் பேசாமல் சென்று விட்டான். அவள் முகத்தில் இருக்கும் இறுக்கத்தைக் கண்டவர்களுக்கு அவளிடம் செல்லவே பயமாக இருந்தது. தேநீருடன் சேர்ந்து டிபன் கூட அப்படியே மேஜையில் ஆறிப் போய் இருக்க, அபியின் நிலையில் சிறிதும் மாற்றம் இல்லை.
எட்டரை மணி வாக்கில் காவல் நிலையத்தினுள் நுழைந்தான் ராஜாவின் கைக்கூலியான கான்ஸ்டெபிள் மாரியப்பன். “என்ன ஏட்டய்யா ஸ்டேஷன் இப்படி இருக்கு?” என்று ஏதும் அறியாதவன் போல அவன் வினவ, அவரும் திரும்பி நின்று பைல்களை அடுக்கிக் கொண்டே நடந்தவற்றைக் கூறினார்.
அப்போது மாரியப்பன் ஓரக்கண்ணால் திறந்திருந்த அபியின் அறையை எட்டிப் பார்த்தான். வெறித்தப் பார்வையுடன் இறுக்கமாக அமர்ந்து இருந்தவளின் செவியில் அவர்கள் பேசுவது கேட்டது. ஆனாலும், அவள் திரும்பிப் பார்க்கவில்லை.
“நல்லவேளை.. நேத்து நீ உன் பொண்ணுக்கு உடம்பு சரியில்லைன்னு அபி மேடம் இங்கிருந்து போனதுமே கிளம்பி வீட்டுக்குப் போயிட்ட.. இல்லன்னா, நீயும் எங்களோட சேர்ந்து அடி வாங்கி இருப்ப.. ஆமா உன் பொண்ணுக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று ஏட்டு சாதாரணமாக நலம் விசாரிக்க, மாரியப்பனின் கவனம் தான் இங்கில்லையே.. அபி என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதை ஆராய்வதிலேயே இருக்க, ஏட்டுவின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.
“என்ன பதிலையே காணோம்?” என்று ஏட்டு அழுத்திக் கேட்க,
அதில் திடுக்கிட்டவன் “ஆன்.. என்ன ஏட்டய்யா கேட்டீங்க?” என்று கேட்டான் தடுமாற்றத்துடன்.
“உன் பொண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு நேத்து வீட்டுக்குப் போனீயே.. இப்போ எப்படி இருக்குன்னு கேட்டேன்” என்று அவர் கேட்டதையே திருப்பிக் கேட்க,
“ம்.. இப்போ பரவாயில்லை ஏட்டய்யா..” என்று சொன்னவனின் பார்வை மறுபடியும் அபியின் அறைக்குத் திரும்ப, இப்போது அபியின் பார்வை அவனைத் துளைத்தெடுத்த வண்ணம் இருந்தது.
அந்தப் பார்வையில் பயந்து நடுங்கியவன் சட்டென தன் பார்வையை மாற்றிக் கொண்டு தனது இடத்திற்கு விறுவிறுவெனச் சென்று விட்டான்.
மாரியப்பனின் தடுமாற்றமும் நடுக்கமும் அபிக்கு உறுத்த, கண்களை மூடி அவள் இரவு வரும் போது அவளது அறை இருந்த கோலத்தை நினைவு கூர்ந்தாள்.
போதைப் பொருள் வழக்கிற்கு சம்பந்தப்பட்ட பைல்கள், ஆதாரங்கள் அனைத்தும் லாக்கரில் தான் உள்ளது என்பதை நன்கு தெரிந்து வைத்தது போலவே வேறு எங்கும் தேடாமல் நேரே லாக்கரை உடைத்து எடுத்து இருக்கிறார்கள். அத்துடன் அபி அந்த பைலை லாக்கரில் வைத்து பூட்டுவதை மாரியப்பனும் கவனித்தது நினைவுக்கு வர, அவளது கண்கள் அடக்கப்பட்ட ஆத்திரத்தில் சிவந்துப் போனது.
சடாரென இருக்கையில் இருந்து எழுந்தவள் தனது அறையில் இருந்து வெளியே வர, மாரியப்பனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரும்பி அவனை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே அவள் ஸ்டேஷனை விட்டு வெளியேற, மாரியப்பனுக்குப் பயத்தில் வியர்த்தே போனது.
“யோவ் மாரியப்பா.. என்னய்யா.. உனக்கு இப்படி வேர்க்குது?” என்று அருகில் இருந்த ஒரு கான்ஸ்டெபிள் கேட்க,
என்ன சொல்வது என்று தடுமாறியவர் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “அது.. அது.. பேன் ஸ்லோவ் அஹ் போகுது” என்று கூறி சமாளித்தான்.
*********
அடுத்த நாள்.. வெளியே யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு உள்ளறையில் இருந்த ருத்ரா “வரேன்..” என்று குரல் கொடுத்து கொண்டே வந்து கதவைத் திறக்க, வெளியே அண்ணாமலை நின்று இருந்தார்.
“சார் நீங்களா?”
“ஏன்ப்பா.. நான் உன் வீட்டுக்கு வரக் கூடாதா?” என்று அவர் சிரித்துக் கொண்டே கேட்க,
“அப்படி எல்லாம் இல்ல சார்.. நீங்க உள்ளே வாங்க” என்றவன் பிளாஸ்டிக் நாற்காலியைக் காட்டி உட்காரச் சொல்ல, அவர் மனதில் எதுவும் நினைத்துக் கொள்ளாமல் அமர்ந்தார்.
“ஒரு நிமிஷம் சார்.. இதோ வந்திடுறேன்” என்றவன் ஒரு பையை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, அண்ணாமலையின் பார்வை அந்த வீட்டைச் சுற்றிலும் அலசின.
சிறிய ஹால், அதை ஒட்டி 5 அடியில் நீளமான சமையல் அறை, பக்கத்தில் படுக்கை அறையும் அதனுள் குளியலறையும் இருந்தன. வீடு சுத்தமாகவும் மிக நேர்த்தியாகவும் இருக்க, அண்ணாமலையின் விழிகளில் ஒரு மெச்சுதல் தோன்றியது.
வெளியே கடைக்குச் சென்றவன், இருவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வாங்கி வந்து இருக்க, “அட.. இதெல்லாம் எதுக்குப்பா?” என்று கேட்டார் அண்ணாமலை.
“இருக்கட்டும் சார்.. நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ இதே மாதிரி தானே என்னை கவனிச்சீங்க” என்றவன் ஒரு கப்பில் தேநீர் ஊற்றி அவருக்குக் கொடுத்தான்.
அதை வாங்கி ஒரு மிடறு பருகியவர், “ம்.. பரவாயில்லையே.. வீடு எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கு. வழக்கமா பேச்சுலர் வீடுன்னா கண்ணா பின்னான்னு இருக்கும்ன்னு தான் கேள்விப்பட்டு இருக்கேன்” என்று சொல்ல,
இதழ் பிரிக்காமல் புன்னகைத்த ருத்ரா, “அம்மாவுக்கு வீடு எப்பவுமே சுத்தமா இருக்கனும் சார்..” என்று சொன்னான்.
“ஓ..” என்றவர் அதற்கு மேல் ஏதும் கேட்டால் அவன் மனது சங்கடப்படும்படி ஆகி விடுமோ என்று எண்ணி வாயை மூடிக் கொண்டார்.
இருவரும் தேநீர் குடித்து முடிக்க, “ஜோசியர்கிட்ட உங்க ஜாதகத்தையும் என் பொண்ணு ஜாதகத்தையும் கொடுத்தேன். அவர் பொருத்தம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டார். அடுத்த வாரம் புதன் கிழமை கல்யாணத்தை வச்சிக்கலாம்ன்னு சொல்லி இருக்கார்.. உங்களுக்கு ஓகே தானே மாப்ள..” என்று நேரடியாகக் கேட்டு விட்டார்.
அதைக் கேட்டு ஒரு நொடி திகைத்த ருத்ரா, “என்ன சார் அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயிட்டீங்க? உங்கப் பொண்ணு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டாங்களா?” என்று கேட்க,
“வீட்டோட மாப்பிள்ளைன்னா அவளுக்கு பரிபூரண சம்மதமாம்.. நீங்க என்ன சொல்றீங்க மாப்ள?” என்றார்.
ருத்ரா சிறிது தயங்கி யோசிக்கவும், “வீட்டோட மாப்பிள்ளையா வந்துட்டா மரியாதை எல்லாம் இருக்காதுன்னு யோசிக்காதீங்க மாப்ள. உங்க மரியாதைக்கு ஒரு குறைச்சலும் வராமல் நான் பார்த்துக்கிறேன். என் பொண்ணும் எந்த காலத்துலயும் உங்களை மரியாதை குறைவா நடத்த மாட்டா. அதுக்கு நான் விடவும் மாட்டேன்” என்று படபடத்தார்.
“இல்ல சார்.. நான் அதைப் பத்தி யோசிக்கல. நீங்க அடுத்த வாரமே கல்யாணம்ன்னு சொல்றீங்களே, அதுக்குள்ள வீடு காலி பண்றதைப் பத்தி வீட்டு ஓனர்கிட்ட பேசணுமேன்னு தான் யோசிச்சேன்” என்று சொல்ல,
“போங்க மாப்ள.. கொஞ்ச நேரத்துல நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்” என்று நெஞ்சில் கை வைத்து சிரிக்க, ருத்ராவும் அவரது சிரிப்பில் இணைந்து கொண்டான்.
கையோடு எல்லாவற்றையும் பேசி முடிவு செய்து விட்டு அண்ணாமலை அங்கிருந்து கிளம்ப, ருத்ராவும் அன்றே வீட்டு ஓனரிடம் பேசி விட்டான்.
அபியின் காவல் நிலையத்தில் ராஜா செய்த கலாட்டா, அத்துமீறி உள்ளே நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியது எதுவுமே வெளி உலகில் யாருக்குமே தெரியாமல் போனது. விஷயம் வெளியே கசியக் கூடாது என்று கமிஷனர் கண்டிப்புடன் சொல்லி விட்டதால், மீடியாவுக்குச் சொல்லவில்லை.
மற்றொரு புறம் திருமண வேலையில் மும்முரமாக இறங்கிய அண்ணாமலை, “அபிம்மா.. நாளைக்கு ஜவுளி எடுக்க போலாமா?” என்று கேட்க, அவளும் அவர் கேட்பதற்கு எல்லாம் தலையைத் தலையை ஆட்டி வைத்தாள்.
Post a Comment