தீராக் காதல் - 17

 


தமிழ் நாட்டுத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு நன்னாளில் ஆளுநர் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுத்தபடியே சந்திர பிரகாஷ் முதல்வராகவும், காளிதாசன் துணை முதல்வராகவும் பொறுப்பெற்றுக் கொண்டார்கள். 

மற்ற அமைச்சர்களுக்கும் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்களுக்கும் பதவி பிரமானம் செய்து வைத்த ஆளுநர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். 

5 மாதங்கள் கடந்து இருந்த நிலையில், காளிதாசனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அந்த அலைபேசி அழைப்பு தனது அரசியல் வாழ்க்கையையே மொத்தமாகப் புரட்டிப் போடப் போகிறது என்பதை அப்போது அவர் அறியவே இல்லை.   

அழைப்பை ஏற்று அலைபேசியைக் காதில் வைத்த காளிதாசன், “ம்..” என்று மட்டும் சொல்ல, மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ, உடனே வெளியே கிளம்ப ஆய்த்தமானார்.

வெள்ளைச் சட்டையின் பட்டனை மாட்டிக் கொண்டே அவர் வெளியே வர, அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த பி.ஏ. அவரைப் பார்த்து விட்டு அவசரமாக அழைப்பைத் துண்டித்து விட்டு ஓடி வந்தான். 

“சார்..” 

“போய் காரை எடு” என்று சொல்ல, “ஓகே சார்” என்று விட்டு விடுவிடுவென நடந்துச் சென்று காரை எடுத்து வந்து வாசலில் நிறுத்தினான். 

காளிதாசன் காரில் ஏறப் போன சமயம், “அப்பா..” என்றபடி அங்கே வந்து நின்றான் சுந்தர்.

‘வந்துட்டானா? இவன் வர்றத்துக்கு முன்னாடியே கிளம்பிடலாம்னு பார்த்தா முடியலையே.. இப்போ எங்க போற.. எதுக்குப் போறன்னு 1008 கேள்வி கேட்டு சாவடிப்பானே..’ என்று அவர் மனதில் நினைத்து புலம்பிய அதே நேரம்,

“எங்கே இவ்ளோ அவசரமா கிளம்புற?” என்று கேட்டான்.

“அது.. வந்து.. கட்சி ஆபீஸ்க்கு” என்று அந்த நேரத்தில் வாயில் வந்ததை கூற,

“அங்க என்ன வேலை?” என அடுத்த நொடியே கேட்டான்.

“அது.. வேலை.. ஹான்.. நம்ம பெருமாளை வரச் சொல்லி இருந்தேன். அவன் கட்சி ஆபீஸ்க்கு வந்துட்டானாம். அவனைப் பார்க்கத் தான் கிளம்பிட்டு இருக்கேன்ப்பா” என்றவரை நம்பாத பார்வைப் பார்த்தான் சுந்தர். 

“நெஜமாவே பெருமாளைப் பார்க்கத் தான் போறேன்டா” என்று அவர் வாயெல்லாம் பல்லாகக் கூற, 

“சரி சரி.. நம்புறேன்..” என்றவன் தனது காரில் ஏறப் போனான். 

“நீ எங்கப்பா போற?” என்று காளிதாசன் கேட்க,

கார் கதவைப் பிடித்துக் கொண்டே திரும்பி தந்தையைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை ஏற்றியவன், ‘என்ன’ என்பது போல் பார்த்தான். 

“இல்ல.. நான் ஒன்னும் கேட்கல. நீ போப்பா..” என்று சற்று பயத்துடன் சொல்ல, சுந்தர் தனது சன்கிளாஸை எடுத்து கண்ணுக்கு மாட்டிக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தான். 

‘இதுல யாரு அப்பா.. யாரு புள்ளன்னே தெரியல?’ என்று காளிதாசனின் பி.ஏ. மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்த போதே சுந்தரின் கார் முதலில் அங்கிருந்துக் கிளம்பிச் சென்றது.

“டேய்.. அவன் போயிட்டான். நீ வண்டியை எடு” என்ற காளிதாசன் காரில் ஏறி அமர, பி.ஏ. வாகனத்தைக் கிளப்பினான். 

என்ன தான் காளிதாசன் பல வருடங்களாக அரசியலில் ஈடுப்பட்டு இருந்தாலும், அவர் எம்.எல்.ஏ. அந்தஸ்தை தாண்டியதே இல்லை. இன்று துணை முதல்வர் ஆகும் அளவுக்கு அவருக்கு அரசியல் பாடம் எடுத்தவன் சுந்தர் தான். அவரது இந்த அசுர வளர்ச்சிக்காக அசுரனாகவே மாறி அனைத்து தடைகளையும் தகர்த்து எரிந்தவனும் அவன் தான்.. 

எல்லாவற்றையும் மாற்றி அமைத்தவனால், ஒன்றே ஒன்றை மட்டும் மாற்றி அமைக்க முடியவில்லை. அது, அவனது தந்தையின் சபலப் புத்தி. சொல்லிச் சொல்லிப் பார்த்தான். பின்னர், கண்டும் காணாமல் இருந்து விட்டான்.

சுந்தருக்கும் எல்லா கெட்டப் பழக்கமும் இருக்கிறது தான். ஆனால் என்றைக்கும் எல்லை மீறி போக மாட்டான். தன்னிலை இழந்து நிற்கவும் மாட்டான்.

காளிதாசனின் கார் நேரே அவரது கெஸ்ட் அவுஸிற்குச் செல்ல, இருவரும் கீழே இறங்கி உள்ளே சென்றனர். அங்கே இருந்த ஒருவன் காளிதாசனைக் கண்டதும் இருக்கையில் இருந்து எழுந்து நிற்க, “எங்கேடா?” என்று கேட்டார் அவர். 

அதற்கு அவன் மாடியறையைக் கைக்காட்ட, மூவரும் சேர்ந்து மாடிப் படியில் ஏறினர். அவன் காட்டிய அறையை காளிதாசன் திறக்க, உள்ளே பள்ளி ஆடை அணிந்த மாணவி ஒருத்தி அழுகையும் திகைப்புமாக ஜன்னல் ஓரத்தில் ஒடுங்கிப் போய் நின்று இருந்தாள். 

கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவள், “எ..ன்னை என்னை விட்டுடுங்க. நான்.. வீட்டுக்கு போகனும். அ..ம்மா அம்மா எ..ன்னை தே..டுவாங்க..” என்று தேம்பி கொண்டே கூற, காளிதாசனின் பார்வை அவளை மேல் கீழ் வரை ரசனையுடன் நோக்கின. 

அவள் சொன்னதையே மீண்டும் மீண்டும் கூற, காளிதாசன் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அவர்கள் இருவரும் திரும்பிச் செல்ல, காளிதாசன் அறைக்குள் வந்து கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டார். 

அதைக் கண்டு சிறுமி மிரண்டு போய் பார்த்துக் கொண்டு இருக்க, அவளிடம் சென்று நின்றவர், “பயப்படாதே பாப்பா.. நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்.. ஜஸ்ட் அரை மணி நேரம் தான்.. அப்படியே கண்ணை மூடி படுத்துட்டு இரு.. எல்லாம் முடிஞ்சிரும்.. நீயும் சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்” என்றபடியே அவளை இன்னும் நெருங்க, அவள் பயந்து போய் ஓடப் பார்த்தாள். 

கதவு வரை ஓடி சென்றவள் வேகமாக கதவைத் தட்டி, “யாராவது என்னைக் காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..” என்று கத்திக் கூச்சல் போட, 

சத்தமாக சிரித்த காளிதாசன் அவள் பின்னாடி வந்து நெருங்கி நின்று “ஏய் பாப்பா.. இது என் இடம். என்னை மீறி உன்னால அவ்ளோ சீக்கிரம் தப்பிக்க எல்லாம் முடியாது. நானா உன்னை விட்டா தான் ஆச்சு. அதனால அடம் பிடிக்காம சொன்னதைக் கேட்டு புத்திசாலி புள்ளையா நடந்துக்கோ. பின்னாடி நீ என்ன கேட்டாலும் நான் செஞ்சி கொடுக்கிறேன்” என்றார். 

மீண்டும் அவள் கெஞ்ச, அவருக்குப் பொறுமை போய் விட்டது. அவளின் முழங்கையைப் பிடித்து இழுத்து திருப்பி நிறுத்தியவர் “என்னடி சொல்லிட்டே இருக்கேன். ரொம்ப தான் அடம் பிடிக்கிற..” என்றவாறே அவளது கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட, அவள் சென்று படுக்கையில் விழுந்தாள். 

தொடர்ந்து அழுது அழுது பலவீனமாக இருந்த சிறுமி மயக்க நிலைக்குச் செல்ல, அந்த மிருகம் சிறிதும் இரக்கமின்றி விளக்கை அணைத்து விட்டு அவள் மீது பாய்ந்தது. 

அடுத்த நொடி அறைக் கதவு படபடவென தட்டப்பட, “ப்ச்.. யாரது?” என்றபடியே சலிப்பாக தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்தவர் படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே இல்லை. அப்போது, சடசடவென அறைக் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் வந்த போலீஸ் படையைக் கண்டு அதிர்ந்து போனார் காளிதாசன். 

அதில் கையில் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு அவர் முன்னே வந்து நின்ற அபிலாஷினி, “யுவர் அண்டர் அரெஸ்ட்..” என்றாள்.  

“ஏய்.. நான் யார் தெரியுமா?” என்று அவர் ஆத்திரத்துடன் பல்லைக் கடிக்க, 

அவரது கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டு “தெரியும்டா பொறுக்கி..” என்றவள் அவரது கையில் விலங்கை மாட்டி இழுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியேறினாள். 

அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்த போது சொல்லி வைத்தாற் போல் அங்கே மீடியா ஆள்கள் வந்து குவிந்து கைதாகி இருக்கும் காளிதாசனைப் படம் பிடிக்க, அவரோ விலங்கு மாட்டிய கைகளால் தன் முகத்தை மறைக்க முயன்றார்.

“சார்.. துணை முதல்வரான உங்களை இப்போ எதுக்காக போலீஸ் அரெஸ்ட் பண்றாங்க?” 

“நீங்க ஸ்கூல் படிக்கிற ஒரு சின்னப் பொண்ணைக் கடத்திக் கொண்டு வந்து கற்பழிக்க முயற்சி செஞ்சதா போலீஸ் உங்க மேல குற்றம் சுமத்துறாங்களே, அது உண்மையா?” என பத்திரிகை நிருபர்கள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு கேள்விக் கேட்க, 

காளிதாசன் பதில் எதுவும் சொல்லாமல் அவமானத்துடன் தலை குனிந்தார். அதனை எல்லாம் ஒரு வித வன்மத்துடன் ரசித்துப் பார்த்த அபி, காளிதாசனின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துச் சென்று வண்டியில் ஏற்றினாள். 

அவர் அவளைக் குரோதத்துடன் பார்க்க, அவள் நக்கலாக இதழ் வளைத்து சிரித்து விட்டு வாகனத்தின் கதவை இழுத்து சாற்றினாள். 

ஈக்கள் போல சூழ்ந்து கொண்ட மீடியா ஆள்களைச் சமாளித்து விட்டு வந்து அவள் வாகனத்தின் முன்னிருக்கையில் ஏறி அமர, வண்டி காவல் நிலையத்தை நோக்கி சென்றன.  

காளிதாசன் கைதான விஷயம் ஊடகங்கள் மூலம் காட்டுத்தீயாய் பரவியது. இது எதுவுமே தெரியாத சுந்தர் தனது அலுவலகத்தில் ஒரு பெரிய பிஸினஸ் டீல்–காக வெளிநாட்டினர் சிலருடன் கான்ஃபிரென்ஸ் ஹாலில் அமர்ந்து டீல் பேசிக் கொண்டிருந்தான். 

அப்போது அவசரமாக கான்ஃபிரென்ஸ் அறைக்குள் ஒருவன் ஓடி வர, தனது பேச்சைப் பாதியில் நிறுத்திய சுந்தர், “வாட் த ஹெல்..” எனப் பெரும் கோபத்துடன் பற்களைக் கடித்து வார்த்தைகளை மென்று துப்பினான்.

“சாரி சார்..” என்று அந்தப் பணியாளர் சொல்ல,

“இப்போ என்ன தலை போற விஷயம்ன்னு ஓடி வந்த?” என்று கேட்டான்.

“போலீஸ் உங்க அப்பாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க சார்” என்று கூற, 

“வாட்..” என்று அதிர்ந்தான் சுந்தர். 

அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்து நியூஸ் சேனலை பார்த்தவன் ஒன்றும் புரியாமல் விழிக்க, பிஸினஸ் டீலுக்காக அமர்ந்து இருந்த வெளிநாட்டினர்கள் தங்களுக்குள்ளாகவே குசுகுசுவெனப் பேசிக் கொண்டு அதிருப்தியுடன் அந்த பிஸினஸ் டீல் வேண்டாம் என்று கூறி விட்டு எழுந்து சென்றனர். 

சுந்தருக்கு இதெல்லாம் பெரியதே இல்லை. முதலில் தந்தையை வெளியே எடுப்பதே முக்கியம் என்று நினைத்தவன் தனது அலைபேசியை எடுத்து வக்கீலின் எண்ணைத் தேடினான். 

அப்போது அதிரடியாக அறைக்குள் வந்த அதிகாரிகள், “நாங்க வருமானவரித் துறையில இருந்து வந்து இருக்கோம். உங்க கம்பெனியிலும் வீட்டிலும் சோதனைப் போடுறதுக்கான ஆர்டர் இது” என்று கூறி ஒரு காகித்தை நீட்டினர்.

“சர்ச் வாரண்ட் ஆஹ்?” என்று அவன் அதிர்ந்து நிற்க, 

தனக்குப் பின்னால் நின்று இருந்த அதிகாரிகளைப் பார்த்தவர், “அவர் கையில இருக்குற மொபைலை வாங்குங்க. எல்லா லேன் லைன் ஓயரையும் கட் பண்ணுங்க” என்றார்.

“சார் உங்க மொபைலை கொடுங்க” என்று ஒருவன் வந்து சுந்தரிடம் கேட்க, 

“நான் ஒரே ஒரு கால் மட்டும் பண்ணிக்கிறேன்” என்று அனுமதி கேட்டான். 

“அதெல்லாம் பண்ணக் கூடாது சார். இது கவர்மென்ட் ரூல்ஸ். அமைதியா எங்களுக்கு ஒத்துழைக்குறது தான் உங்களுக்கு நல்லது” என்று எச்சரிக்க, அவனும் வேறு வழியின்றி அலைபேசியை அதிகாரியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

இன்னொரு பக்கம் அபிலாஷினிக்கு டிபார்ட்மென்ட் பக்கம் இருந்தும் கட்சிக்காரர்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு. காளிதாசனின் கட்சித் தொண்டர்கள் ஆவேசத்துடன் ஸ்டேஷனை சூழ்ந்து கொண்டார்கள். 

அபி எதற்குமே அசரவில்லை. இதெல்லாம் நடக்கும் என்று அவள் முன்பே கணித்து விட்டு தான் தனது பழி தீர்க்கும் படலத்தைத் தொடங்கினாள். 

அமைச்சர் காளிதாசன் கைதான விஷயம் கசிந்த நொடியில் இருந்து ஸ்டேஷனில் இருந்த அனைத்து தொலைபேசிகளும் விடாமல் அடித்து கொண்டே இருக்க, அபி அதைக் கண்டு கொள்ளவே இல்லை. 

மற்றொரு புறம் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்த காளிதாசன் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டிருக்க, அபி அவரைக் கத்த விட்டு வேடிக்கைப் பார்த்தாள். 

அவள் அடிக்கடி தனது அலைபேசியில் எதையோ எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த போது, கமிஷனர் கந்தசாமி அதிரடியாக காவல் நிலையத்திற்கு வந்தார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்ற அபி விரைப்பாக சலியூட் அடிக்க, அவர் நேரே வந்து அவளது இருக்கையில் அமர்ந்தார். 

கம்பிகளுக்குப் பின்னால் உர்ரென முகத்தை வைத்து இருந்த காளிதாசனை ஒரு பார்வைப் பார்த்த கமிஷனர், “என்ன அபி.. எல்லாமே புரோசிஜரா தான் நடந்துட்டு இருக்கா?” என்று கேட்டார். 

அதே நேரம் அபியின் அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி ஒலிக்க, கமிஷனரிடம் அனுமதி கேட்டுப் பெற்று அந்த செய்தியைப் பார்த்தவள் புன்னகையுடன் அவரிடம் அதனைக் காட்டினார். அவர் ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தியவாறு அபியைப் பார்க்க, அவள் நினைத்ததைச் சாதித்து விட்ட புன்னகை ஒன்றைச் சிந்தினாள். 

ஆம்.. கமிஷனருமே அபிக்குத் தான் சப்போர்ட். காளிதாசன் ஒரு பொதுக் கூட்டத்தின் போது கமிஷனர் என்றும் பாராமல் அவரை அவமானப் படுத்தியதை மனதில் வைத்து இருந்தவர், பழி வாங்க தக்க தருணத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். 

அவருக்குமே அபி அதிரடியாக காளிதாசனை கைது செய்வாள் என்று எல்லாம் தெரியாது. எல்லோரையும் போல தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்து விட்டு தான் ஸ்டேஷனுக்கே புறப்பட்டு வந்தார். 

“யோவ் கமிஷனரு.. நான் ஒரு துணை முதலமைச்சர்ய்யா.. என்னை எப்படி இந்த பொண்ணு அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல வைக்க முடியும்? இவ சட்டம் படிச்சி போலீஸ் வேலைக்கு வந்தவளா? இல்ல, காசு கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவளா?” என்று சரமாரியாகக் கேட்க, 

“சார்.. ஒரு நிமிஷம்..” என்று அனுமதி கேட்டாள் அபி. 

அவள் எதற்கு கேட்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்ட கமிஷனர், “ம்..” என்று அனுமதி கொடுத்தார். 

காளிதாசனின் முன்னே சென்று நின்றவள், “என்ன சொன்ன?” என்று கேட்க,

“நான் ஒரு துணை முதலமைச்சர்.. நீ எப்படி என்னை அரெஸ்ட் பண்ணலாம்?” என்று கேட்டார். 

“உன்னை காலையிலேயே அமைச்சர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்தும் தூக்கிப் போட்டாச்சு” என்று நக்கலாகச் சொல்ல, 

“நான் நம்ப மாட்டேன்” என்றார். 

அபி தனது அலைபேசிக்கு வந்த செய்தியை காளிதாசனுக்குக் காட்ட, அதைக் கண்டவரது நம்பிக்கை பாதியாக உடைந்தது.

ஆம்.. முதலமைச்சரே இத்தகைய அதிரடி நடவடிக்கையை எடுத்து இருந்ததால், அவரால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. 

“பதவி போனா போயிட்டு போகுதுடி.. என் மகன் இருக்கான். அவன் என்னைக் காப்பாத்துவான்” என்று கூற, அபிக்குச் சிரிப்பு தான் வந்தது. 

அவளது சிரிப்பைக் கண்டவருக்கு எதுவோ சரியில்லை என்று மனதில் பட்டது. அவரது எண்ணம் சரியே என்பது போல, “இப்போ இருக்குற நிலைமையில அவனால அவனையே காப்பாத்திக்க முடியாது. இதுல எங்கிருந்து உன்னை வந்து காப்பாத்துவான்னு நீ நம்பிக்கிட்டு இருக்க?” என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, அவர் முழுவதுமாக உடைந்துப் போனார். 

“என்ன சொல்ற நீ?” 

“உன் பையன் கம்பெனியிலும் வீட்டுலயும் ரைடு நடந்துட்டு இருக்கு. அவனுக்கு மூச்சு விடக் கூட நேரம் இருக்காது. ரைடு முடிந்த கையோட அவனையும் அரெஸ்ட் பண்ண எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டேன். அப்பன், பையன் இரண்டு பேர் கட்டி எழுப்புன இந்த சாம்ராஜ்ஜியத்தை, நான் தூள் தூளா உடைச்சி நொறுக்காம விட மாட்டேன்டா” என்று அபிலாஷினி வஞ்சத்துடன் கூற, அவள் கண்களில் பளீரென மின்னிய பழிவெறியைக் கண்டு ஆடிப் போனார் காளிதாசன். 

“யா..யார் நீ?”

“யாரோட இரத்தத்துல உன்னோட இந்த அரசியல் வாழ்க்கைக்கு நீ பிள்ளையார் சுழி போட்டீயோ.. அதே இரத்தம்டா” என ஒவ்வொரு வார்த்தையையும் அவள் அழுத்திக் கூற, அவளை நோக்கி நீண்ட காளிதாசனின் கைவிரல் நடுங்கியது.


No comments

Powered by Blogger.