தீராக் காதல் - 16

 


“பொ..ய் தானே.. இ..இந்தாள் சொ..ல்றது எல்லாம் பொ..ய் தானே ருத்ரா” என்று கேட்ட அபியின் பார்வையிலும் குரலிலும் அவன் ‘பொய் தான்’ என்று சொல்லி விட மாட்டானா என்ற தவிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

‘இல்லை’ என்பது போல் தலையை இடம் வலமாக அசைத்தவன், “இவர் தான் என் அப்பா. அவருக்காக உன்னை பழி வாங்க தான் திட்டம் போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்ற ருத்ரா உண்மையை ஒப்புக் கொள்ள, அவள் உடைந்துப் போனாள்.  

அண்ணாமலை மூலம் அபியை நெருங்க நினைத்த ருத்ரா, அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில் தான் அவர் சாலையின் ஓரத்தில் மயங்கி விழுந்தார். அந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தவன், அவரை மருத்துவமனையில் சேர்த்தான். 

அபி அங்கு வந்ததும் அறையில் இருந்து வெளியேறியது போல் சென்றவன், கதவின் பின்னால் மறைவாக நின்று கொண்டு தந்தையும் மகளும் பேசுவதை ஒட்டுக் கேட்டான். 

அண்ணாமலை அபியைத் திருமணத்திற்கு வற்புறுத்துவதையும் அவள் திருமணத்திற்கு விதிக்கும் நிபந்தனையையும் அறிந்து கொண்டு அடுத்தக்கட்ட திட்டத்தைத் தீட்டினான். 

அவள் கூறிய நிபந்தனைகளுக்கு ஏற்ப தனக்கென ஒரு போலியான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட ருத்ரா, தரகரைச் சந்தித்து 500 ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை அவரது கையில் திணித்தான். 

அவர் புரியாமல் திகைத்து விழிக்க, அபியின் புகைப்படத்தைக் காட்டி தனக்கும் அவளுக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான். அவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு அண்ணாமலையிடம் ருத்ராவின் புகைப்படத்தைக் காட்டினான். 

அண்ணாமலையோ அல்லது அபியோ, யாரேனும் ஒருவர் கண்டிப்பாக தன்னைப் பற்றி விசாரிக்க வருவார்கள் என்று கணித்து வைத்து இருந்த ருத்ரா, முன் ஏற்பாடாக அந்தக் காலனியில் உள்ள அனைவரையும் விலைக்கு வாங்கிவிட்டான். 

காவல் நிலையத்தை சூறையாடிய ரவுடி ராஜா மேல் கடும் கோபத்தில் இருந்த அபி, பிஸியாக இருந்த அந்த சமயத்திலும் கான்ஸ்டெபிள் ஒருவரை அனுப்பி ருத்ராவைப் பற்றி விசாரிக்கச் சொல்லி இருந்தாள். 

பணத்திற்கு விலை போன காலனி மக்கள், ருத்ராவைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ள, கான்ஸ்டெபிளும் அதை அப்படியே வந்து அபியிடம் கூறினார். அதனால் தான் அவள் நம்பிக்கையாக அவனது முகத்தைக் கூட பார்க்காமல் திருமணம் செய்து கொண்டாள். 

திருமணம் ஆன போதிலும் அபி வேலை வேலை என்று ஓட, அவளை வீட்டில் தங்க வைத்து தன் வசப்படுத்திக் கொள்ள நினைத்த ருத்ரா, ஒரு திட்டத்துடன் தந்தை மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு திரையரங்கத்திற்குச் சென்றான். அங்கு, நடந்த துப்பாக்கிச் சூடு எல்லாமே அவன் ஏற்பாடு செய்தது தான். 

அந்தப் பழி தன் மேல் விழாமல் இருப்பதற்காக தந்தையின் உதவியோடு ராஜாவை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்தான். வேண்டும் என்றே அபியை முதலில் சஸ்பென்ட் செய்ய வைத்தவன், அடுத்ததாக அவளுக்கு ஆதரவாக இருந்த கமிஷனர் கந்தசாமியையும் வேறு ஊருக்கு பணியிட மாற்றம் செய்து அனுப்பினான். 

அவன் ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல, தான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறோம் என்று நினைத்து அபியின் கண்களில் இருந்து கண்ணீர் சுரக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணாமலைக்கு நெஞ்சில் சுருக் சுருக் என்று வலித்தது. 

கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அபி, “நா.. நான்.. நம்ப மாட்டேன்.. எனக்குத் தெரியும்.. நீங்க என்னை உண்மையா காதலிச்சதை நான் ஃபீல் பண்ணேன். உங்க கண்ணுல நான் எனக்கானக் காதலைப் பார்த்தேன்” என்று ருத்ராவைப் பார்த்து அழுத்தமாகச் சொல்ல, 

“நான் உன்னைக் காதலிக்கவே இல்லை அபிலாஷினி. அதெல்லாமே ஒரு டிராமா தான். அன்னைக்கு ஹோட்டலுக்கு உன்னை கூட்டிட்டுப் போனது கூட, உனக்கு ட்ரக் கொடுத்து போலீஸ்ல மாட்டி விட தான். ஆனா கடைசி நேரத்துல அந்த ரூம் பாய் பாலை மாத்தி வச்சி எங்க பிளானை எல்லாம் நாசமாக்கிட்டான்” என்று ஆத்திரத்தில் பற்களை நறநறவெனக் கடித்தான். 

அன்று நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்த அபிக்கு உடல் மொத்தமும் கூசிப் போனது. அதோடு இப்போது அவனுக்காக கொலைப்பழியை ஏற்றுக் கொண்டு சட்டத்தின் முன்பும் ஊரார் முன்பும் குற்றவாளியாக நிற்பதை எண்ணி வெட்கிப் போனாள். 

அதைக் கண்டு ஆணவத்துடன் சிரித்த காளிதாசன் அவள் முன்பு வந்து நின்று, “நான் நெனைச்சி இருந்தா ஒரே நொடியில உன்னை காலி பண்ணி இருக்க முடியும்டி. நான் ஏன் அதைச் செய்யல தெரியுமா?” என்று கேட்டவர் சிறிது இடைவெளி விட்டு 

“உன்னால நான் அனுபவிச்ச வலியையும் வேதனையையும் விட பல மடங்கு உனக்கு நான் திருப்பித் தரனும்ன்னு தான் இப்படி எல்லாம் பண்ணேன். இனி, நீயே நெனைச்சாலும் இந்த சக்கரவியூகத்துல இருந்து உன்னால வெளியே வரவே முடியாதுடி. இங்க இருக்குற போலீஸ்ல இருந்து உள்ளே இருக்குற ஜட்ஜ் வரைக்கும் என் ஆளுங்க தான். வாழும் போதே உனக்கு நான் நரகத்தைக் காட்டல.. என் பேர் காளிதாசன் இல்லைடி” என்று ஆவேசமாகப் பேசி மீசையை முறுக்கினார். 

அபி நொறுங்கிப் போய் நின்று இருந்த சமயம், காளிதாசன் மகனைப் பார்த்து கண்ணைக் காட்டவும் அவளது கழுத்தில் இருந்த தாலியை அறுத்து தூக்கி எறிந்து விட்டான் ருத்ரா. 

“அடப்பாவிங்களா.. அநியாயமா என் பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்களே..” என்று கதறிய அண்ணாமலை அங்கேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மண் தரையில் சரிந்து விழுந்தார். 

“அப்பாஅஅஅ..” என அலறிய அபி அவரிடம் ஓட, உடனே அவ்விடத்தைச் சுற்றி கூட்டம் கூடி வேடிக்கைப் பார்த்தனர். அண்ணாமலையின் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு கதறி அழுதாள் அபி.

சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ் வண்டி அங்கே வர, இருவர் வந்து அண்ணாமலையின் உடலை வாகனத்தில் ஏற்றினர். அவர்களுடனே அபியும் செல்லப் போக, “மேடம்.. நீங்க போக முடியாது” எனக் கூறி காவலர்கள் அவளைத் தடுத்து விட்டனர். 

“அப்பா..” என்று அவள் தவிப்புடன் கூற, 

அங்கிருந்த ஒரு கான்ஸ்டெபிளைப் பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் “நீங்க கூட போங்க” என்றார்.

அவர் ஏறி அமர்ந்ததும் ஆம்புலன்ஸ் அங்கிருந்து கிளம்பிச் செல்ல, அபி அந்த வண்டியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போலீஸ்காரர்கள் இழுத்த இழுப்புக்குச் சென்றாள். 

நீதிமன்றத்தில் ராஜாவின் கொலை வழக்கு விசாரணைக்கு வர, அபி ஆஜர் செய்யப்பட்டாள். நீதிபதி “விசாரணையை ஆரம்பிக்கலாம்” என்று சொன்னதும், அரசு தரப்பு வழக்கறிஞர் எழுந்து வந்து தனது வாதத்தைத் தொடங்கினார்.  

“யுவர் ஆனர்.. குற்றவாளி கூண்டில் இருக்கும் அபி என்கிற அபிலாஷினி, தான் தான் ராஜாவைச் சுட்டுக் கொன்றதாக அவரே வாக்குமூலம் கொடுத்து விட்டார். இதற்கு மேல் விசாரிக்க இதில் ஒன்றுமில்லை. ஆகவே குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி விட்டு தன்னிடத்திற்கு வந்து அமர, நீதிபதி பிரதிவாதி இருப்பிடத்தைப் பார்த்தார். 

வழக்கம் போல் இன்றும் அவ்விடம் காலியாகவே இருக்க, நீதிபதி அபியைப் பார்த்து, “நீங்க ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?” என்று கேட்டார். 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கோர்ட் வாசல்ல என் அப்பா நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு மயங்கி விழுந்துட்டார். அவருக்கு என்னாச்சுன்னு எனக்குத் தெரியனும். ப்ளீஸ்..” என்று கலங்கியக் குரலில் கண்ணீருடன் கையெடுத்து வணங்கி கெஞ்ச, அரசு தரப்பு வழக்கறிஞர் எழுந்து ஆட்சேபனைத் தெரிவித்தார். 

“இது இந்த வழக்குக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதது மை லாட்” என்று அவர் பேசிக் கொண்டிருந்த போதே சப்-இன்ஸ்பெக்டரின் அலைபேசி சைலண்டில் அதிர, எழுந்து வெளியே சென்று பேசினார்.  

பின்னர் உள்ளே வந்தவர் நீதிபதியின் உதவியாளரின் காதில் எதையோ கூற, அவர் சென்று நீதிபதியின் செவி அருகே குனிந்து மெல்லியக் குரலில் சப்-இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கூறி விட்டு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார்.  

பின்னர், “அபி.. உங்க அப்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து போயிட்டார்” என்று நீதிபதி கூற, அவளுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. 

அபி குற்றவாளி கூண்டிலேயே மயங்கி சரிய, சப்-இன்ஸ்பெக்டர் வந்து அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தார். அதிலும் அவளுக்கு மயக்கம் தெளியாமல் போக, விசாரணையை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபி, மயக்கம் தெளிந்தப் பின்பு சிறைக்கு அனுப்பப்பட்டாள். அண்ணாமலைக்கும் அபியைத் தவிர உறவு என்று சொல்லிக் கொள்ள வேறு யாரும் இல்லாததால் அவரது உடல் அரசு மருத்துவமனையின் பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 

********** 

2 வருடத்திற்கு முன்பு,

“தலைவர்” 

“வாழ்க”  

“தலைவர்” 

“வாழ்க” என மக்கள் கோஷம் காதைக் கிழிக்க, பற்கள் தெரிய புன்னகை முகத்துடன் பால்கனிக்கு வந்து நின்ற காளிதாசன் இருகரம் குப்பி வணங்கினார்.

அவரது முகத்தைப் பார்த்ததுமே தொண்டர்கள் ஆரவாரம் செய்ய, புன்னகை மாறாமல் கை அசைத்தவர், “என்ன கணபதி.. மக்கள் என்ன சொல்றாங்க?” என்று தனது பிஏ-விடம் கேட்டார்.

“வழக்கம் போல ரோடு போடல, தண்ணீ வரலன்னு ஒரே புலம்பல் தான் சார்” என்று அவன் சொல்ல, 

“அவங்க எல்லாம் அப்படி இருந்தா தான்ய்யா நாம பொழைக்க முடியும்.. இவங்களுக்கு எல்லாமே கிடைச்சிட்டா, அப்புறம் நம்மளை சுத்தமா மறந்துருவாங்க” என்றார். 

“சரியா சொன்னீங்க சார்.. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுற கூட்டம் இருக்குற வரைக்கும் தான் நாம அரசியல் பண்ண முடியும்” என்று கூறி அவன் சிரிக்க, காளிதாசன் திரும்பி அவனைப் பார்த்த ஒரு பார்வையில் கணபதியின் சிரிப்பு அப்படியே நின்று போனது. 

“சாரி சார்” என்று தலை குனிந்தவாறு கூற, காளிதாசன் திரும்பி நடந்தார். 

அவரது அன்றைய தின நிகழ்ச்சிகளைக் கூறியபடியே கணபதி நடந்து வர, காளிதாசன் படியில் இறங்கி ஹாலுக்கு வந்தார். அவரைக் கண்டதும் சோபாவில் அமர்ந்து இருந்த அவரது அல்லக்கைகள் “ஐயா.. வந்துட்டார்..” என்று விட்டு எழுந்து நிற்க, அவர்களிடமும் சிரித்த முகமாய் பேசி விட்டு வெளியேறினார்.

அங்கே வாசலில் நின்று இருந்த தொண்டர்கள் கையில் ஒரு மனுவை வைத்துக் கொண்டு மீண்டும் “தலைவர் வாழ்க.. தலைவர் வாழ்க..” என்று ஆரவாரம் செய்ய, வாசலில் வந்து நின்ற காரில் ஏறப் போனார். 

கணபதி பாய்ந்து வந்து காரின் பின்னிருக்கைக் கதவைத் திறந்து விட, காளிதாசன் காரில் ஏறி அமர்ந்தார். அந்தக் கதவை மூடி விட்டு முன்னாடி கதவைத் திறந்த கணபதி காரில் ஏறி அமரவும் கார் அங்கிருந்து புறப்பட்டது. 

வெளிக்கதவைத் திறந்ததும் மக்கள் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி காரைச் சூழ்ந்து கொள்ள முண்டி அடித்துக் கொண்டு ஓடப் பார்க்க, சாலைக்கு வந்த பின்பு கார் ஒரு நிமிடம் நின்றது. 

காரின் கண்ணாடியை மட்டும் கீழே இறங்கிய காளிதாசன் “விடுங்கய்யா..” என்று போலீஸ்காரர்களைப் பார்த்து கை அசைத்துச் சொல்ல, அவர்களும் விட்டு விட்டார்கள். 

“ஐயா.. ஐயா..” என கதறலுடன் ஓடி வந்த மக்கள் தங்களது குறையைக் கூறி அவரிடம் வெள்ளை நிறத் தாளில் மனுவைக் கொடுக்க, 

“கண்டிப்பா.. உங்க எல்லாரோட கோரிக்கையையும் நான் நிறைவேத்துவேன்” என்று சிரித்தபடியே காளிதாசன் மனுக்களை வாங்கிக் கொண்டு இருக்கும் போதே கார் நகர்ந்தது. 

மனுவைக் கொடுக்க முடியாத மக்கள் காரின் பின்னாடியே சிறிது தூரம் ஓடி வர, அதனை காரின் பக்கவாட்டு கண்ணாடியில் பார்த்து ரசித்தார் காளிதாசன்.

இது தினசரி காலையில் காளிதாசன் வீட்டில் இருந்து கட்சி அலுவலகத்திற்குப் புறப்பட்டு செல்லும் போது நடப்பது தான். அவர்கள் கொடுக்கும் எந்த மனுவையும் காளிதாசனோ அவரது பிஏ-வோ பிரித்து பார்க்கக் கூட மாட்டார்கள். போகிற வழியிலேயே அதனை ஒரு குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு சென்று விடுவார்கள். 

ஜனநாயக மக்கள் இயக்கம் (கற்பனை பெயர்) என்ற கட்சி தான் அப்போதைய தமிழகத்தை ஆண்ட கட்சி. அதில் ஒரு முக்கிய அமைச்சர் தான் காளிதாசன். இப்போது கூடும் செயற்க்குழு கூட்டத்தில் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் தேர்தலில் எப்படி பங்காற்றலாம், யாரை எங்கு நிற்க வைக்கலாம் போன்ற சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.

மேலும் சில தினங்கள் கடந்து தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. அதில் காளிதாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். 

பெரும்பான்மையான இடங்களில் ஜனநாயக மக்கள் இயக்கம் கட்சி வெற்றி பெற்று இருக்க, இரண்டாவது முறையாக முதல்வரானார் அக்கட்சியின் தலைவர் சந்திரபிரகாஷ். 

ஆட்சி அமைக்கப்படும் முன்பு தேர்தலில் வெற்றிப் பெற்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அலுவலகத்திற்கு அழைத்து விருந்து உபச்சாரம் அளித்தார். 

அதில் யார் யாருக்கு எந்தெந்த துறையில் அமைச்சர் பதவி வழங்க இருக்கிறது என்ற முக்கிய அறிவிப்பும் வெளியாக, காளிதாசனை துணை முதல்வராக அறிவித்தார் சந்திரபிரகாஷ்.

அதனை காளிதாசனின் அலைபேசி வழியே கேட்டுக் கொண்டிருந்த அவரது மூத்த மகனான சுந்தரின் இதழ்கள் புன்னகையில் வளைந்தன. அழைப்பைத் துண்டித்து விட்டு அலைபேசியைப் படுக்கையில் விட்டெரிந்தவன் அலமாரி அருகே சென்று அதனைத் திறந்துப் பார்த்தான். 

வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானப் பாட்டில்களில் ஒன்றைக் கையில் எடுத்தவன் அதனை வாயில் சரித்துக் கொண்டபடி பால்கனிக்குச் சென்றான். 

பாதி பாட்டிலை காலி செய்தவன் அடுத்து சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தபடியே இருள் நிறைந்த வானை மிதப்பாகப் பார்த்தான். அப்போது அவனது அலைபேசி மீண்டும் அலற, அறைக்குள் வந்து அலைபேசியை எடுத்து யாரென்றுப் பார்த்தான். 

அழைப்பை ஏற்றவன், “என்ன?” என்று இறுகிய குரலில் கேட்க, 

“சார்.. இந்தாளு ஒத்து வர மாட்டேங்குறான்” என்றான் மறுமுனையில் இருந்தவன். 

“ஒரு ஆளை மிரட்டி கையெழுத்து வாங்க முடியல.. நீங்க எல்லாம் ரவுடிங்களாடா?” என்று ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன், மது பாட்டிலை தூக்கி எரிந்து விட்டு விறுவிறுவென அறையில் இருந்து வெளியேறினான். 

காரை எடுத்தவன் நேரே சென்றது அவர்களது குடோனுக்குத் தான். காரில் இருந்து இறங்கியவன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே வேகமாக உள்ளே சென்றான். அங்கே, வயதான முதியவர் ஒருவர் பயத்துடன் நற்காலியில் அமர்ந்து இருக்க, அவர் முன்னே வந்து நின்றான் சுந்தர். 

அவன் ஒரு சொடக்குப் போட, சுற்றி இருந்த அடியாட்களில் ஒருவன் ஓடி போய் நாற்காலியைத் தூக்கி வந்து சுந்தருக்கு போட்டான். அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன், “ஏன்டா பரதேசி நாயே.. இதுல ஒரு கையெழுத்து போடுன்னா போட மாட்டியா?” என்று அடிக்குரலில் சீறிக் கொண்டே அவன் கையை உயர்த்த, அதில் பத்திரத்தை வைத்தான் அடியாளின் தலைவன் மதன். 

“அதெப்படி முடியும்? 50 கோடி ரூபாய் சொத்தை நீங்க வெறும் 5 கோடி ரூபாய்க்கு எழுதிக் கொடுக்க சொல்றீங்களே?” என்று அந்தப் பெரியவர் தயக்கமும் தவிப்புமாகக் கேட்க, 

“ஏய்..” என்று அதட்டியவனின் வாயில் இருந்து அடுத்து வந்து விழுந்த வார்த்தைகள் எல்லாம் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகள் தான். 

அந்தப் பெரியவருக்கு உடல் கூசிப் போக, இரு கையால் காதைப் பொத்திக் கொண்டார். “மரியாதையா இதுல கையெழுத்து போட்டுட்டு கொடுக்குறதை வாங்கிட்டு போடா. இல்ல, கனடாவுல இருக்குற உன் பையன் பொணமா தான் இந்தியாவுக்குத் திரும்பி வருவான்” என்று மிரட்ட, 

“வேணாப்பா.. வேணா.. நான் கையெழுத்து போட்டு கொடுத்திடுறேன். என் பையனை ஒன்னும் பண்ணிடாதீங்க..” என்று பதறியவரின் முகத்தில் அந்த பத்திரத்தை வீசி எறிந்தான் சுந்தர். 

அவர் கண்ணீருடன் தனது சட்டை பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து அந்த பத்திரத்தில் கையெழுத்து போட, அதனை வெடுக்கெனப் பறித்து கொண்ட சுந்தர், 5 கோடி ரூபாயை ரொக்க பணமாகக் கொடுத்து விட்டு சென்றான். 

அவன் பின்னாடியே அவனது அடியாள்களும் சென்று விட, அந்தப் பெரியவர் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார். 


No comments

Powered by Blogger.