தீராக் காதல் - 15
அபி திரும்பிப் பார்க்க, அவளுக்கு வெகு அருகாமையில் ராஜா அவளைக் கொல்ல கையில் கத்தியோடு நின்று இருந்தான். துப்பாக்கி குண்டு அவனது முதுகின் வழியே இதயத்தைத் துளைத்து இருக்க, அவன் அப்படியே சரிந்து கீழே விழுந்தான். அவளுக்கு நேரே கையில் துப்பாக்கியோடு நின்று இருந்த கணவனைக் கண்டவள், அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
ராஜா அசைவின்றி கிடப்பதைக் கண்ட மற்றவர்கள் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி விட, அபி பதைபதைக்கும் மனதுடன் சென்று ராஜாவின் உயிர் இருக்கிறதா என்று அவனது கழுத்தின் பக்கவாட்டில் கை வைத்துப் பார்த்தாள்.
அப்படியே கணவனை நிமிர்ந்து பார்த்தவள், “இ..இவன் செத்துட்டான்” என்று சொல்ல, ருத்ரா தீச்சுட்டாற் போல் தனது கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே போட்டான்.
இரு கைகளாலும் தலைமுடியை அழுத்திக் கோதிக் கொண்டவன், கண்கள் கலங்க மனைவியை ஏறிட்டு நோக்கி “அப்..அப்போ நா..நான் கொலை பண்ணிட்டேனா? எ..ன்னைத் தூக்குல போட்டுடுவாங்களா?” என்று எல்லாம் புலம்பித் தள்ள, அபி கண்ணீருடன் சென்று கணவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
தொலைக்காட்சியில் பழைய சிவாஜி திரைப்படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்த அண்ணாமலை தற்செயலாக சேனலை மாற்றும் போது செய்தி சேனல் ஒன்றில், “பிரபல ரவுடி ராஜா சுட்டுக் கொலை.. ஐ.பி.எஸ். அதிகாரி அபிலாஷினி கைது” என்ற தகவல் ஃபிளாஷ் நியூஸாக ஒளிப்பரப்பாக, அவர் அதிர்ந்துப் போய் இருக்கையில் இருந்து எழுந்து நின்றார்.
உடனே தனது அலைபேசியைத் தேடி எடுத்தவர் மகளுக்கும் மாப்ளைக்கும் மாற்றி மாற்றி அழைக்க, இருவருக்குமே அழைப்பு போகவில்லை.
“ச்சே.. என்னதிது மாப்ளைக்கு கூட லைன் போக மாட்டேங்குது..” என்று புலம்பியவர் அடுத்த கணமே போலீஸ் ஸ்டேஷனுக்குக் கிளம்பி விட்டார்.
“அபி.. அபிம்மா..” என்று கத்தியவாறே அண்ணாமலை காவல் நிலையத்திற்குள் நுழைய, அவரை இரு கான்ஸ்டெபிள் பிடித்துக் கொண்டார்கள்.
“என்னை விடுங்க.. நான் என் பொண்ணைப் பார்க்கனும்..” என்று அவர் கதற, அவரது தவிப்பானக் குரலைக் கேட்ட அபி சிறைக் கம்பிகளுக்குப் பின்பு கண்ணீர் வடித்தாள்.
அண்ணாமலை என்ன தான் அழுது புரண்டாலும் அபியை மட்டும் பார்க்க அனுமதிக்கவே இல்லை. அவரும் மகளைப் பார்க்காமல் ஸ்டேஷனை விட்டு நகர மாட்டேன் என்று வாசலிலேயே உட்கார்ந்து விட்டார்.
“சார்.. அபி மேடம் மேல விசாரணை போயிட்டு இருக்குற இந்த நேரத்துல நீங்க இப்படி ஸ்டேஷன் வாசல்ல உட்கார்ந்து பிரச்சனை பண்ணா, அதுவும் அபி மேடமுக்கு எதிரா தான் அமையும். தயவுசெய்து வீட்டுக்குப் போங்க சார்” என்று அவரிடம் ஒரு கான்ஸ்டெபிள் கெஞ்ச, அண்ணாமலை கலங்கிப் போனார்.
“ஒரே ஒரு தடவை என் பொண்ணைப் பார்த்து பேசிட்டு போயிடுறேன். அதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க” என்று கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டுக் கேட்க, உள்ளே ஓடிய ஒரு கான்ஸ்டெபிள் அபியிடம் தனது அலைபேசியை நீட்டினான்.
அவள் அவனைப் புரியாமல் பார்க்க, “நாங்க எவ்ளோ சொல்லியும் உங்க அப்பா போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறார் மேடம்.. நீங்களே அவருக்குச் சொல்லுங்க” என்றவன் அண்ணாமலையின் எண்ணிற்கு அழைப்பு விடுத்து விட்டு ஸ்பீக்கரில் போட்டான்.
மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், அபி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தந்தையிடம் பேசினாள்.
“ஸ்டேஷன் வாசல்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”
அவளது குரல் எப்போதும் போல அழுத்தமாக இருக்க, “அபிம்மா..” என்றவருக்கு அதற்கு மேல் வாயில் வார்த்தைகள் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
“ப்ச்.. பிரச்சனை எதுவும் பண்ணாம எழுந்து வீட்டுக்குப் போங்க” என்று அவள் சொல்ல,
“உ..உன்னை இந்த நிலைமையில விட்டுட்டு நான் எப்படி போவேன் அபிம்மா” அவர் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து போய் அழுதார்.
“எனக்கு என்னைப் பார்த்துக்க தெரியும். நீங்க வீட்டுக்குப் போங்க” என்றவள் அதற்கு மேல் முடியாமல் அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
கான்ஸ்டெபிள்களும் அண்ணாமலைக்கு ஆறுதல் அளிக்க, அவர் மகளின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அங்கிருந்து எழுந்துச் சென்றார். ஆனால் வீட்டிற்குச் செல்லவில்லை. மகளை வெளியே எடுக்க வக்கீலைப் பார்க்கச் சென்றார்.
இந்தப் பக்கம், டிபார்ட்மென்ட் விசாரணையில் அபியை பேசவே விடாமல் சரமாரியான கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார்கள். அவளுக்கு ஆதரவாகப் பேச கூட கமிஷனர் கந்தசாமி இப்போது அங்கு இல்லை. வேறு ஒரு மாவட்டத்தில் பணிப்புரிகிறார்.
திரையரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததில் அபியை வேண்டுமென்றே தற்காலிக பணி நீக்கம் செய்த போதே கந்தசாமிக்கும் பணியிட மாற்றம் வழங்கப்பட்டது.
“அபி.. நீங்க ஏன் தனியா ராஜாவைப் பார்க்கப் போனீங்க?” என்று விசாரணை அதிகாரி வினவ,
“அவன் தான் சார் எனக்கு ஃபோன் பண்ணான்” என்றாள் அபி.
“அவன் ஃபோன் பண்ணா நீங்க ஏன் அவனைத் தேடி தனியா போனீங்க? அவன் ஒரு ஜெயில்ல இருந்து தப்பிச்சி போன குற்றவாளின்னு தெரியும்ல்ல, அவன் ஃபோன் பண்ணதை ஏன் மேலிடத்துக்கு நீங்க இன்ஃபார்ம் பண்ணல? யாரை கேட்டு நீங்க அவனை ஷூட் பண்ணீங்க?
ஏற்கனவே அவன் தம்பியையும் இதே மாதிரி தான் ஷூட் பண்ணி கொன்னீங்க, அதுக்கு என்னென்னமோ காரணம் சொல்லி எஸ்கேப் ஆயிட்டீங்க. ஆனா இந்த விஷயத்துல உங்களை நாங்க சும்மா விடப் போறதில்லை” என்று விசாரணை அதிகாரிகள் மாறி மாறி கேள்விகள் கேட்க, அபி தப்பித் தவறிக் கூட ருத்ரா பெயரை வெளியே சொல்லக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தாள்.
முடிந்த அளவுக்குச் சமாளிக்கப் பார்த்தவள், சில கேள்விகளுக்கு மௌனத்தையே பதிலாக தந்தாள். அதில் கடுப்பானவர்கள், அபியின் இன்ஸ்பெக்டர் பதவியைப் பறித்துக் கொண்டார்கள். அத்துடன் அவளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, நீதிபதியும் வழக்கம் போல் 14 நாட்கள் விசாரணைக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அந்த 14 நாட்களும் அபியைத் தனிச் சிறையில் வைத்து இருந்தார்கள். யாரையும் சந்திக்க விடவில்லை. தனிச் சிறை, நீதிமன்றத்தில் ஆஜர் ஆவது என தொடர்ந்து 3 மாதத்திற்கு இதுவே தொடர்ந்தது. அண்ணாமலை எவ்வளவு முயன்றும் நீதிமன்றத்தில் கூட மகளிடம் பேச போலீஸ்க்காரர்கள் விடவில்லை.
அபிக்குக் கூட எங்கே தந்தையின் பேச்சைக் கேட்டால் உள்ளம் கொண்டுள்ள உறுதி உடைந்து போய் விடுமோ என்று தோன்றியதால், தன்னிடம் பேச முயன்ற தந்தையைத் தவிர்த்தே வந்தாள்.
இன்று இறுதிக்கட்ட விசாரணைக்காக அபிலாஷினியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய போலீஸ் வேனில் அழைத்து வரப்பட்டாள்.
“நான் உள்ளே போய் பி.பி-க்கிட்ட (அரசுத் தரப்பு வக்கீல்) பேசிட்டு வரேன். ஜாக்கிரதையா இருங்க..” என்று சொல்லி விட்டு இன்ஸ்பெக்டர் செல்ல, அபி வேனிலேயே அமர்ந்து இருந்தாள்.
தோற்றத்தில் பொலிவு இழந்து கையில் விலங்குடன் இரும்புக்கம்பி ஜன்னலில் தலைச் சாய்த்தபடி சோகச் சித்திரமாகக் காணப்பட்டவளின் பார்வை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி அலச, அவள் தேடியது காணக் கிடைக்காமல் போனதில் இன்னுமே சோர்ந்து போனாள்.
**********
அன்று ராஜாவைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு ருத்ரா புலம்பித் தள்ள, அபி தான் அவனைத் தேற்றினாள்.
“ருத்ரா இங்க பாருங்க..” என்று அழுத்தமானக் குரலில் உரைத்தவள் அவனின் கன்னத்தைப் பிடித்து விடாப்படியாக தனது முகத்தைப் பார்க்கச் செய்தாள்.
அவனது பார்வையில் ஒரு வித பயமும் தவிப்பும் தெரிய, “நீங்க இங்க இருந்து போங்க. நான் இது எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்” என்றாள்.
அவன் ‘முடியாது’ என்பது போல் தலை அசைக்க, “சொல்றேன்ல்ல, அடம் பிடிக்காம நீங்க முதல்ல இங்க இருந்து போங்க” என்றவள் அவனை வலுக்கட்டாயமாக எழுப்பி இழுத்துக் கொண்டு தொழில்சாலையை விட்டு வெளியே வந்தாள்.
“சீக்கிரம் இங்கிருந்துப் போங்க.. போலீஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்திடுவாங்க” என்று அவள் சொல்ல, ருத்ரா அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றான்.
அவன் சென்றதும் மீண்டும் தொழிற்சாலைக்கு வந்தவள் கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து அதிலிருந்த ருத்ராவின் கைரேகை தடத்தை முதலில் அழித்தாள். பின்பு, அதில் தனது கைரேகையைப் பதித்தவள் போலீஸ் வருவதற்காகக் காத்திருந்தாள்.
அவர்கள் அங்கு வரவும், தான் தான் ராஜாவைச் சுட்டுக் கொன்றதாக கொலைப் பழியைத் தன் மேல் போட்டுக் கொண்டு தனது கையில் இருந்த துப்பாக்கியை நீட்ட, “என்ன மேடம் சொல்றீங்க? நீங்களா ஷூட் பண்ணீங்க?” என்று சப்-இன்ஸ்பெக்டர் நம்ப முடியாமல் வினவினான்.
‘ஆமாம்..’ என்பது போல் குற்றத்தை ஒப்புக்கொள்ள, மேலதிகாரியிடம் அலைபேசியில் பேசினான் சப்-இன்ஸ்பெக்டர்.
பின்னர், “ஓகே சார்..” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவன், அபி கையில் இருந்த துப்பாக்கியை வாங்கிக் கொண்டு அவளைக் கைது செய்தான்.
அபி நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இடைவெளியில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் பின்பக்கக் கதவைத் திறந்து “அழைச்சிட்டு வாங்க” என்றார்.
இரு பக்கமும் காவலர்கள் சூழ, கையில் விலங்குடன் காவலர் வாகனத்தில் இருந்து இறங்கிய அபி அவர்களுடன் இணைந்து நடந்தாள். சிறிது தூரம் நடந்ததும் திடீரென முகத்தில் காற்று பட்டுத் தெறிக்க கண்களை மூடியபடி நின்று விட்டவள் கண்களைத் திறந்து காற்று வந்த திசையில் பார்த்தாள்.
அங்கு, கருப்பு நிறச் சட்டையும் அதே நிறத்தில் பேண்டும் அணிந்து பாக்கெட்டில் கை வைத்தபடி நின்று இருந்தான் ருத்ர பிரதாபன். அவனைக் கண்டதும் இதழில் புன்னகை ததும்ப பக்கவாட்டாகத் திரும்பிய அபி, சப்-இன்ஸ்பெக்டரை கெஞ்சலாகப் பார்க்க, “போய் சீக்கிரம் பேசிட்டு வாங்க” என்று அனுமதி வழங்கினான்.
கணவனின் முன்னே சென்று நின்றவள், “ஒருவழியா இத்தனை நாள் கழிச்சி சாருக்கு என்னை வந்து பார்க்கனும்ன்னு தோணிருச்சு போல..” என்று அவனைப் போலவே தலையைச் சாய்த்து சிரித்துக் கொண்டே வினவ, அவன் முகத்தில் எந்த வித உணர்வும் இன்றி அவளை வெறித்துப் பார்த்தான்.
“அப்பாவை அப்பப்போ பார்த்தேன். உங்களைத் தான் பார்க்கவே முடியல.. ரொம்ப வேலையா??” அவள் வருத்தம் தோய்ந்தக் குரலில் வினவ, அவன் எதுவும் சொல்லவில்லை.
“இன்னைக்கு ஃபைனல் இயரிங். குற்றத்தை ஒத்துக்கிட்டதால குறைந்தபட்ச தண்டனை கிடைக்கக் கூட வாய்ப்பு இருக்கு. என்ன.. அப்பா தான் என்னை நெனச்சி ரொம்ப கவலைப்படுவார்..”
அதைச் சொல்லும் போதே என்ன முயன்றும் அபிக்கு துக்கம் தொண்டையை அடைக்க தான் செய்தது. கண்கள் கலங்கிப் போக, கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் ஆழ்ந்து மூச்சை இழுத்து வெளியே விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
இன்னும் சில நொடிகள் தானே தன்னவனிடம் அவளால் பேச முடியும்? அதன் பின்பு தண்டனை வழங்கப்பட்டு சிறைக்குச் சென்ற பின்னால் அவளால் பேச முடியாது அல்லவா??
அப்போது தான் ஆட்டோவில் வந்து இறங்கிய அண்ணாமலை, அபி ருத்ராவுடன் நின்று இருப்பதைக் கண்டு திகைத்துப் போய் அவர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தார்.
“ருத்ரா.. உங்கக்கிட்ட ஒன்னு சொல்லனும்..” என்ற அபி கணவனது கையைப் பற்ற,
ருத்ராவின் பின்னால் இருந்து வெளிப்பட்டவரைக் கண்டு அதிர்ந்தவளின் உதடுகள் “நீயா?” என்று முணுமுணுத்தன.
அண்ணாமலையும் அவரைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே நின்று விட, அவர் பக்கவாட்டாக நின்று இருப்பதை யாருமே கவனிக்கவில்லை. கவனிக்கும் நிலையிலும் அவர்கள் யாருமே இல்லை.
வெண்ணிற சட்டை மற்றும் கறை வைத்த வேட்டி, கையில் வெள்ளைத் துண்டு, இதழில் நக்கல் வழிந்தோடும் புன்னகை என ஆறடி உயரத்தில் அரக்கனின் மறுவுருவமாய் அபியின் முன்பு தோன்றினார் காளிதாசன். முன்னாள் துணை முதலமைச்சர்.
“நீ இங்க என்ன பண்ற?” அபி அவரைப் பார்த்து கடுப்பாகக் கேட்க,
“ஏதோ நீ ஒரு கொலை பண்ணிட்டு ஜெயில்ல இருக்குறதா பேப்பர்ல பார்த்தேன். அந்த கேஸ் கூட இன்னைக்கு ஃபைனல் இயரிங்க்கு வருதுன்னு கேள்விப்பட்டேன். உனக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகுதோன்னு ஒரே ஆர்வமா இருந்துச்சா, அதான் நேர்ல பார்த்து தெரிஞ்சிக்கலாம்ன்னு கிளம்பி வந்துட்டேன்” என்றார் ஏற்ற இறக்கத்துடன்.
தன் நிலையை ஏளனம் செய்யவே வந்து இருக்கிறார் என்பதை உணர்ந்தவள் அலட்சியமாக உதட்டைச் சுழித்து “ருத்ரா நீங்க வாங்க.. நாம அப்படி போய் பேசலாம்” என்று விட்டு திரும்ப, அவன் இம்மி அளவும் அசையாமல் அங்கேயே அழுத்தமாக நின்றான்.
அபி புரியாமல் திரும்பி கணவனைப் பார்க்க, அவளது பிடியில் இருந்த தனது கையை உருவிக் கொண்டான் ருத்ரா. “சொன்னா கேளுங்க.. நாம அப்படி போய் பேசலாம்.. இந்த இடம் வேணாம்..” என்றவள் கணவனின் கையை மறுபடியும் பிடிக்கப் போக, அவன் ஓர் அடி பின்னால் நகர்ந்து காளிதாசனின் அருகில் சென்று நின்றான்.
“என்னடி அப்படி தெகச்சிப் போய் பார்க்குற.. அவன் வர மாட்டான்” என்று அவர் இறுமாப்போடு கூற, அபி ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“இன்னுமா உனக்குப் புரியல..” என்று கேட்டவர் சிறிது இடைவெளி விட்டு,
“இவன் என் மகன்டி..” என்று ருத்ராவின் தோளில் கைப்போட்டு தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அபியும் அண்ணாமலையும் உயரழுத்த மின்சாரம் உடலில் பாய்ந்தது போல் உறைந்து போய் நின்றார்கள்.
Post a Comment