தீராக் காதல் - 14

 


மறுநாள் மதிய வேளையில் சூரிய ஒளிக்கதிர்கள் ருத்ராவின் முகத்தில் சுரீரென விழ, லேசாக உறக்கம் கலைந்தவன் திரும்பிப் படுத்து உறக்கத்தைத் தொடர முயன்றான். அவனால் அது முடியவில்லை. நெஞ்சில் ஏதோ பாரமாக அழுத்திக் கொண்டு இருப்பதை உணர்ந்தவன், அதிருப்தியுடன் கண்ணைத் திறந்துப் பார்த்தான். 

அபி அவனது நெஞ்சில் படுத்து இருக்க, மெல்ல அவளின் தூக்கம் கலையாதவாறு விலக்கி விட்டு படுக்கையில் இருந்து எழுந்தவன் நேரே குளியலறைக்குத் தான் சென்றான். 

தண்ணீர் விழும் சத்தத்தில் விழித்துக் கொண்ட அபி, அறையின் சுற்றும் முற்றும் பார்த்தாள். பின்னர் கணவன் குளியலறையில் இருப்பதை உணர்ந்ததும் இதழில் உறைந்த வெட்கத்துடன் போர்வையில் இருந்து கையை மட்டும் வெளியே நீட்டி கட்டிலின் கீழே கிடந்த தனது துணிகளைத் துழாவி எடுத்து போர்வைக்குள்ளேயே அணிந்து கொண்டாள். 

அதன் பின், படுக்கையில் இருந்து எழுந்து சுவரின் புறமாகத் திரும்பி நின்று புடவையைச் சுற்றிக் கொண்டு இருந்த போது குளியலறையில் இருந்து வெளிபட்ட ருத்ரா, தனது அலைபேசியை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியேறி விட்டான்.

தொடர் கூடலின் காரணமாக உடலில் ஆங்காங்கு கன்றிச் சிவந்து இருப்பதைக் கண்டவளுக்கு நேற்றைய கூடல் நினைவும் மனதில் எழ, நொடியில் முகம் சிவந்துப் போனது. வெகுநேரம் ஆகியும் ருத்ரா அறைக்கு வராமல் போக, அவனைத் தேடி வெளியே சென்றாள் அபி. 

மாடிப்படியின் அருகே யாருடனோ அலைபேசியில் டென்ஷனாக பேசிக் கொண்டிருந்தான். மனைவி தன்னை நோக்கி வருவதைப் பார்த்த ருத்ரா அழைப்பைத் துண்டித்து விட, அதற்குள் அவனை நெருங்கி விட்ட அபி “என்னாச்சு? ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள். 

அவளைப் பார்க்காமலேயே ‘ஆமாம்’ என்பது போல் தலை அசைத்தவன், “நான் உடனே ஆபீஸ்க்கு போய் ஆகனும்” என்றான்.

“சரி.. நீங்க போங்க. நான் கேப் புக் பண்ணி வீட்டுக்குப் போறேன்” என்று அவள் சொல்ல, அவன் விறுவிறுவென அங்கிருந்து நடந்துச் சென்றான். 

அபி ஹோட்டலின் வாசலுக்கு வந்து பார்க்கும் போது ருத்ரா தனது பைக்கை வேகமாக எடுத்துக் கொண்டு செல்லும் காட்சியைத் தான் கண்டாள். பின்பு அவள் புக் செய்த கேப் வர, அதில் ஏறி வீட்டிற்குச் சென்றாள். 

தனியாக வீட்டுக்கு வந்த மகளைப் பார்த்த அண்ணாமலை, “மாப்ள எங்கம்மா?” என்று வினவ,

“அவர் ஆபீஸ்க்குப் போயிட்டார்ப்பா” என்றவள் தனது அறைக்குச் சென்று விட்டாள். 

குளித்து விட்டு பால்கனியில் அமர்ந்தவள், நொடிக்கொரு முறை அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். கணவனின் அழைப்பை எதிர்ப்பார்த்து காத்திருந்தவள், மதியத்திற்கு மேல் முடியாமல் அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். அதற்கும் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றதும் அபியின் முகம் வாடிப் போனது. 

மாலை கடந்து இரவும் ஆகி விட்ட போதும் ருத்ரா வீட்டிற்கு வந்து சேரவில்லை. “மாப்ள ஏன் இன்னும் வீட்டுக்கு வரல? வழக்கமா ஈவினிங்கே வந்துருவாரே..” என்ற அண்ணாமலை ருத்ராவின் எண்ணிற்கு அழைக்க, அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. 

அந்நேரம் பார்த்து தண்ணீர் குடிப்பதற்காக கீழே இறங்கி வந்த அபி சமையலறையில் நுழைய போக, “அபிம்மா.. மாப்ள நம்பர் சுவிட்ச் ஆப்ன்னு வருது. இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகும்ன்னு உனக்கு எதுவும் ஃபோன் பண்ணி சொன்னாரா?” என்று கேட்டார். 

‘இல்ல’ என்பது போல் அவள் தலை அசைக்க,

“நேத்து நீ எதுவும் மாப்ளைக்கிட்ட சண்டை போட்டீயா?” என்று அண்ணாமலை மகளைச் சந்தேகமாகப் பார்த்து வினவினார்.

அவரை முறைத்துப் பார்த்த அபி, “என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? சண்டைக்குன்னே அலையுறவ மாதிரி தெரியுதா?” என்று பல்லைக் கடித்தாள்.  

“அதை நான் வேற சொல்லணுமா?” என்று முணுமுணுத்தவர் அவரது அறைக்குச் சென்று விட, அவள் கடுப்புடன் ஹால் சோஃபாவில் அமர்ந்தாள். 

கணவனுக்காக கண் விழித்து காத்திருந்தவள் ஹாலிலேயே தூங்கி விட்டாள். காலையில் வந்து அவளை எழுப்பிய அண்ணாமலை அவளுக்குக் குடிக்க தேநீர் கொண்டு வந்து கொடுக்க, “அவர் வீட்டுக்கு வந்தாராப்பா?” என்று தான் முதலில் கேட்டாள். 

“ம்.. வந்து அப்போவே வேலைக்குக் கிளம்பிப் போயிட்டாரே” என்று அவர் சொல்ல, 

“என்னப்பா சொல்றீங்க? என்னை ஏன் எழுப்பல?” என்று கேட்டாள். 

“இல்லம்மா.. நீ டையர்டா தூங்கிட்டு இருந்தீயா? அதனால தான் உன்னை எழுப்பல”

“சரி போகட்டும் விடுங்க. நேத்து எப்போ தான் வீட்டுக்கு வந்தார்?”

“அது இருக்கும் ஒரு இரண்டு மணி.. நான் தண்ணீ குடிக்க எழுந்து வந்தப்போ தான் மாப்ள வீட்டுக்கு வந்தார்” என்க, அபியின் முகத்தில் சிந்தனை ரேகை ஓடியது. 

“ஆபீஸ்ல ஏதோ பெரியப் பிரச்சனையாம். அதனால கொஞ்ச நாளைக்கு டைட் வொர்க் இருக்கும்ன்னு சொல்லிட்டுப் போயிட்டார்” என்றவர் சமையலறைக்குச் செல்ல, அபியும் தந்தை கொடுத்து விட்டுச் சென்ற தேநீரைப் பருகினாள்.

அன்று முழுவதும் ருத்ரா அபிக்கு ஒரு ஃபோன் கூட செய்யவில்லை. இவள் அழைத்தாலும் அவன் அழைப்பை ஏற்கவில்லை.  

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், இரவு 9 மணி ஆகவும் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். 

ருத்ராவின் அலுவலக வாசலில் காரை நிறுத்தியவள் வாட்ச்மேனிடம் ருத்ராவைப் பற்றி விசாரிக்க, “தெரியல மேடம்.. நான் உள்ளே போய் பார்த்துட்டு வரேன்” என்று விட்டு அலுவலகத்திற்குள் சென்றான். 

சிறிது நேரம் கழித்து அவளிடம் வந்த வாட்ச்மேன், “மேடம்.. சார் ஒரு முக்கியமான வேலையா இருக்கார்” என்று சொல்ல, 

“சரி.. எப்போ தான் வீட்டுக்கு வருவாராம்?” என்று கேட்டாள் அபி. 

“அது லேட் ஆகும் போல மேடம்” 

“எவ்ளோ லேட் ஆனாலும் பரவாயில்லை. நான் வெயிட் பண்றேன்” என்றவள் அலுவலக வாசலிலேயே காத்திருக்க, வாட்ச்மேனும் சற்று தள்ளிச் சென்று அலைபேசியில் யாருக்கோ அழைத்துப் பேசினான். 

மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ மீண்டும் அபியிடம் வந்தவன், “மேடம் அன்டைம்ல நீங்க இப்படி வெயிட் பண்ணா, என்னைய வேலையை விட்டே தூக்கிடுவாங்க. தயவுசெய்து வீட்டுக்குப் போங்க. சார் வேலை முடிஞ்சி வீட்டுக்கு வந்திடுவார்” என்று கெஞ்ச, அந்தக் கட்டடத்தை நிமிர்ந்து பார்த்த அபி வேறு வழியின்றி அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றாள். 

இப்படியே ருத்ரா தாமதமாக வீட்டிற்கு வருவதும் சீக்கிரமே வேலைக்குக் கிளம்பிச் செல்வதுமாகவே இருக்க, அபி தவித்துப் போனாள். 

********

ஒரு நாள் மாலையில் அவள் சோகமாக ஹாலில் அமர்ந்து இருந்த போது அவளிடம் வந்த அண்ணாமலை, “அபிம்மா.. மார்க்கெட்டுக்குப் போகப் போறேன். நாளைக்கு உனக்கு என்ன சாப்பாடு வேணும்ன்னு சொல்லு. அதுக்கு ஏத்த மாதிரி காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று கேட்க, 

“ப்ச்.. என்னவோ பண்ணுங்க போங்கப்பா. நாள் முழுக்க வெட்டியா தின்னுட்டு வீட்டுலயே இருக்குறதுக்கு எந்த சாப்பாடு சாப்பிட்டா என்ன..” என்றாள். 

இப்படி சலித்துக் கொண்ட மகளை அவர் விசித்திரமாகப் பார்க்க, “என்ன?” என்று கேட்டாள் அபி. 

“நீயா இப்படி பேசுற? நான் எதுவும் கனவு கினவு காணுறேனா?”

தந்தையை முறைத்துப் பார்த்த அபி, “என்ன நக்கலா?” என்று கேட்டாள்.  

“இல்லம்மா. நிஜமாவே எனக்கு ஆச்சரியமா இருக்கு. 24 மணி நேரமும் வேலை வேலைன்னே ஓடுன என் பொண்ணா இப்படி நாளைக்கு வேலைக்கு போகனும்ங்குறதையே மறந்துட்டு பேசுறா..” என்று சொல்லவும் சோஃபாவில் சாய்வாக அமர்ந்து இருந்த அபியின் விழிகள் பெரியதாக விரிந்தன. 

சடாரென நிமிர்ந்து அமர்ந்தவளின் பார்வை காலெண்டரில் பதிந்து விட்டு மீண்டும் தந்தையை நோக்க, “உன்னோட ஒரு மாசம் சஸ்பென்ஷன் இன்னையோட முடியுது” என்று நினைவூட்டினார். 

அசடு வழிந்தவாறே தலையைச் சொறிந்தவள் “ஆமால்ல.. நாளைக்கு ஸ்டேஷனுக்குப் போய் டியூட்டில ஜாயின் பண்ணனும்.. மறந்தே போயிட்டேன்ப்பா” என்று சொல்ல, அண்ணாமலை சத்தமாகச் சிரித்து விட்டார். 

“சிரிக்காதீங்க.. எல்லாம் உங்க மாப்ளையால தான்..” என சிணுங்கி விட்டு அவள் சென்று விட, அவரது சிரிப்பு இன்னும் அதிகமானது. 

மறுநாள் காவல் நிலையத்திற்குச் சென்றவள் போலீஸ் பணியில் மீண்டும் இணைந்தாள். அதன் பின்பு, அதீத வேலையின் காரணமாக அவள் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது கணவனின் நினைவும் வந்து போனது. 

தந்தையிடம் மட்டும் கணவனைப் பற்றிக் கேட்டு அறிந்து கொள்பவளுக்கு அவனிடம் நேரடியாகப் பேச முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கவே செய்தது.

இப்படியே இரு வாரங்கள் சென்று இருக்க, ஒரு நாள் அபி காவல் நிலையத்தில் இருக்கும் போது அவளது அலைபேசி அலறியது. ஒரு கோப்பை சரிப்பார்த்துக் கொண்டிருந்தவள் பார்வையை மட்டும் திருப்பி மேஜை மீது இருந்த அலைபேசி திரையில் யாரென்று பார்த்தாள். 

புது எண்ணாக இருக்க, யோசனையுடன் அழைப்பை ஏற்று அலைபேசியை காதில் வைத்தவள், “ஹலோ.. யாரு?” என்று கேட்டாள். 

“வணக்கம் அபி மேடம்.. என்னை யாருன்னு தெரியுதா?” என்று மறுமுனையில் இருந்தவன் கேட்க, 

அவனது குரலைக் கேட்ட அபி புருவம் சுருக்கியபடி “ராஜா..” என்றாள்.

மறுமுனையில் பலத்த சிரிப்புச் சத்தம் கேட்க, இங்கு அபிக்கு எரிச்சலாக இருந்தது. “பரவாயில்லையே.. என்னை இன்னும் ஞாபகம் வச்சி இருக்கீயே.. நான் கூட இத்தனை நாள் ஆனதுல நீ என்னை மறந்து போய் இருப்பன்னு நெனச்சேன்..” என்று அவன் சிரிப்பின் ஊடே சொல்ல, 

“ஏய்.. ஒழுங்கு மரியாதையா போலீஸ்ல சரண்டர் ஆகுற வழியைப் பாரு..” என அவனை எச்சரித்தாள். 

“நான் சரண்டர் ஆகணுமா? கொஞ்சம் இப்படி பாரு..” என்றவன் வீடியோ காலில் வர, அந்தப் பக்கம் ஒரு தூணில் ருத்ரா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போய் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள் அபி. 

“என்ன போலீஸ்காரம்மா.. வூட்டுக்காரனை இந்த நிலைமையில பார்த்ததும் என்ன பண்றதுன்னே தெரியலையா?” என்று ராஜா நக்கலாகக் கேட்க, 

“ராஜா.. பிரச்சனை உனக்கும் எனக்கும் மட்டும் தான். என் ஹஸ்பெண்டை விட்டுடு. அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என உள்ளுக்குள் தோன்றிய பதற்றத்தை மறைத்துக் கொண்டு பேசினாள். 

அதைக் கேட்டு இன்னும் பயங்கரமாகச் சிரித்த ராஜா, “உள்ளுக்குள்ள இருக்குற பயத்தை வெளியே காட்டிக்காம பேசுனா, நான் ஏமாந்துருவேன்னு நெனப்பா?” என்று கேட்டவன் அடுத்த கணமே தன் முகத்தில் வன்மத்தைப் படர விட்டு 

“ஏய்.. பொத்திக்கிட்டு நான் சொல்ற இடத்துக்கு அரைமணி நேரத்துல தனியா வந்து சேர். இல்ல, உன் புருஷனோட ஒரு பிடி சாம்பல் கூட உனக்குக் கிடைக்காது” என்று மிரட்டி விட்டு அழைப்பைப் பட்டென்று துண்டித்தான்.

உடனே அவளது அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வர, ஜீப் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அவன் வரச் சொல்லிய இடம் நகரத்தை விட்டுத் தள்ளி இருக்க, இவளும் அதிவேகமாக ஜீப்பை இயக்கிச் சென்று அரைமணி நேரத்திற்குள்ளாகவே அந்த இடத்தை அடைந்து விட்டாள். 

அது ஒரு செயல்பாட்டில் இல்லாத தொழில்சாலை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ஜீப்பில் இருந்து இறங்கிய அபி, இடுப்பில் இருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டாள். கழுகுப் பார்வையால் அந்த இடத்தின் ஒவ்வொரு பகுதியையும் அலசிக் கொண்டே அவள் முன்னேறிச் செல்ல, ஒரு ஈ, எறும்பு கூட அவளது பார்வை வட்டத்தில் சிக்கவே இல்லை. 

தொழில்சாலையின் மையப்பகுதிக்கு வந்த அபி அங்கு ஒரு தூணில் கணவன் மட்டும் மயங்கிய நிலையில் கட்டி வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டாள். “ருத்ரா..” என்றபடி அவனிடம் ஓடிச் சென்றவள் பரிதவிப்புடன் அவனது கன்னத்தைப் பற்ற, மெல்ல கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். 

“உங்களுக்கு ஒன்னும் ஆகாதுங்க..” என்றவள் அவனது கைக்கட்டை அவிழ்த்து விட்டு கணவனை அழைத்துச் செல்லத் திரும்ப, ராஜா தனது ஆள்களுடன் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து விட்டான். 

அபி தனது துப்பாக்கியை எடுத்து நீட்ட, ராஜாவும் ஒரு துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றிப்பொட்டிற்கு நேரே நீட்டினான். இருவரின் விழிகளிலும் சரிசமமான வெறி இருக்க, “அவ்ளோ சீக்கிரம் உன்னால இங்க இருந்து தப்பிச்சி போக முடியாதுடி..” என்றான் ராஜா. 

அவள் பதில் பேசாமல் அவனைப் பார்வையால் உறுத்து விழிக்க, அடியாள்களில் ஒருவன் அவளின் துப்பாக்கியைத் தட்டி விட்டு விட்டான். 

அதில் அதிர்ந்தவள் சற்றும் தயங்காமல் அவர்களை எதிர்த்து சண்டைப் போட்டாள். ஐந்தாறு பேரை அடித்து தும்சம் செய்தவள், அடுத்து மோதியது ராஜாவோடு தான். 

அவன் அவளை நோக்கி துப்பாக்கியை நீட்ட, அதனைக் காலால் தட்டி விட்டவள் அவனையும் அடித்து நொறுக்கினாள். இருவருக்கும் இடையில் கடுமையான சண்டை நடைபெற, அபி தான் அவனை வீழ்த்தினாள். 

வலி தாங்காமல் தரையில் உருண்டுக் கொண்டு இருந்தவனை அற்பமாகப் பார்த்தவள், தனது அலைபேசியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரான முரளிதரனுக்கு அழைத்தாள். 

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், “உடனே கிளம்பி சிட்டிக்கு அவுட்டர்ல இருக்குற பேக்டரிக்கு வாங்க. ரவுடி ராஜா இங்க தான் இருக்கான்” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பின்னால் துப்பாக்கியால் சுடும் சத்தம் அவளது காதைத் தீண்டியது. 


No comments

Powered by Blogger.