தீராக் காதல் - 18
நேற்று, முதலமைச்சர் அலுவலகத்திற்குச் சென்ற அபி, முதலமைச்சரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவரது பி.ஏ.விடம் கூறினாள்.
“அதெல்லாம் முடியாது. கமிஷனரே வந்தாலும் காத்திருந்து தான் சி.எம்-ஐ பார்க்க முடியும். அதுவும் உள்ளே இருந்து உத்தரவு வந்தா மட்டும் தான். நீ ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர். நேரா வந்து சி.எம்-ஐ பார்த்துப் பேசனும்ன்னு நிக்குற.. போ.. போ..” என்று அந்த பி.ஏ. விரட்ட,
“ரொம்ப இம்பார்ட்டென்ட் ஆன விஷயம்” என்றாள் அபி.
“உயிரே போற விஷயம்ன்னாலும் சாரை பார்க்க முடியாது. அவருக்கு இன்னைக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு”
“ஆமா.. உயிர் போற விஷயம் தான். அதுவும் என்னோடது இல்ல, சி.எம். சாரோடது” என்று அவள் சொல்ல, அதே நேரம் அறையில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் அதிர்ந்துப் போய் அவளைப் பார்த்தார்.
அபி அவரிடம் பேச முயல, அவளைத் தடுக்க வந்த காவலாளிகளை விடச் சொல்லி கை அசைத்தார் முதலமைச்சர்.
அவரைப் பார்த்து சலியூட் அடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அபி, “சார்.. எனக்கு உங்களோட ஒரு 2 நிமிஷம் பேசனும். ப்ளீஸ் சார்..” என்று கெஞ்சலாகக் கேட்க, அவரும் அவளை அறைக்குள் வரச் சொல்லி அனுமதி கொடுத்தார்.
“வெளியே என்னவோ என் உயிர் போற விஷயம்ன்னு சொல்லிட்டு இருந்தீயே, என்ன விஷயம்?” என்று அவர் வினவ,
“நாளை மறுநாள் நீங்க நடத்தப் போற மாநாட்டுல உங்களைக் கொல்ல சதி திட்டம் நடக்குது சார்..”
“என்ன சொல்ற நீ? என்னைக் கொல்ல சதி திட்டமா? யாரது?” என்று அதிர்ச்சியுடன் வினவ,
“துணை முதலமைச்சர் காளிதாசன் தான் உங்களைக் கொல்ல திட்டம் தீட்டி இருக்கார்” என்க, அவர் இன்னும் அதிகமாக அதிர்ந்தார்.
“என்னம்மா சொல்ற நீ.. காளிதாசனுக்கும் எனக்கும் பல வருஷ பழக்கம் இருக்கு. அவன் எப்படி என்னைக் கொல்லப் பார்ப்பான்? அதுக்கு உங்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு?” என்று அவர் கேட்க, அவள் ஒரு பைலை அவரிடம் கொடுத்தாள்.
தந்தையின் துணை முதலமைச்சர் பதவிக்காக சுந்தர் செய்த வேலைகளை எல்லாம் அபி ஆதாரத்தோடு முதலமைச்சரிடம் ஒப்படைக்க, அதைப் பார்த்து விட்டு அவளைக் கேள்வியாகப் பார்த்தார்.
“ஒரு துணை முதலமைச்சர் பதவிக்கே இத்தனை வேலை பார்க்குறவங்க, முதலமைச்சர் பதவிக்காக எவ்ளோ வேலை பார்ப்பாங்கன்னு உங்களுக்கு ஒரு தடவைக் கூட தோணவே இல்லையா சார்?” என்று கேட்க, அவர் குழம்பிப் போனார்.
அபி தனது அலைபேசியில் ஒரு வீடியோவைக் காட்ட, அதில் சுந்தரும் காளிதாசனும் சேர்ந்து மாநாட்டில் முதலமைச்சரைக் கொல்ல சதி திட்டம் தீட்டுவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார் முதலமைச்சர்.
“என்னை எதுக்குக் கொல்லப் பார்க்குறாங்க? நான் அவங்களுக்கு என்ன பண்ணேன்?”
“அவங்களோட குறி நீங்க இல்ல.. உங்களோட முதலமைச்சர் பதவி..” என்று சொல்ல, அவர் அவளைப் புரியாதப் பார்வைப் பார்த்தார்.
“இந்த மாநாடு ஏற்பாடு கூட அந்த சுந்தர் கொடுத்த ஐடியா தான். மாநாடு நடக்குற நேரத்துல மேடையில வச்சி உங்களைப் போட்டு தள்ளிட்டு, அந்தப் பழியைத் தீவிரவாதிகள் மேல போட்டுட்டு உங்க இடத்துக்கு இப்போ துணை முதல்வரா இருக்குற அவனோட அப்பாவை ஈஸியா உட்கார வச்சிடலாம்ங்குறது தான் அவனோட மாஸ்டர் பிளானே” என்று சொல்ல, அவருக்கு வியர்த்து போனது.
“இப்போவே அவங்க இரண்டு பேரையும் என்ன பண்றேன்னு பாரு..” என்று விட்டு அவர் ஆவேசமாக இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள,
“அந்தப் பொறுப்பை எங்கிட்ட விட்டுடுங்க சார். நான் பார்த்துக்கிறேன்” என்றாள் அபி.
“நீயா? நீ எப்படி? உன்னால இவங்களை ஹேண்டில் பண்ண முடியாதும்மா. இவங்க இரண்டு பேரும் ரொம்ப மோசமானவங்க”
“எனக்கும் அந்தாளுக்கும் தீர்க்கப்படாதே பழைய கணக்கு ஒன்னு இருக்கு” என்றவளின் பார்வையில் மின்னிய பழிவெறியைப் பார்த்தவர்,
“அப்படி என்ன பகை உனக்கு?” என்று அவர் கேட்க, அவள் ஒரே ஒரு பெயரைத் தான் கூறினாள். அவருக்கு அனைத்தும் ஒரு நொடியில் புரிந்து விட்டது.
“ஓகே.. நீயே பார்த்துக்கோ.. ஆனா எனக்கு உன் பிளான் என்னன்னு சொல்லனும்” என்று அவர் கேட்க, அவளும் தனது திட்டத்தை அவருக்குக் கூறினாள்.
அதைக் கேட்டு ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தியவர், “ம்.. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?” என அவளது அறிவுக் கூர்மையைப் பாராட்ட, அதனை ஒரு மெல்லியப் புன்னகையுடன் அவள் ஏற்றுக் கொண்டாள்.
“சார்.. இதுல எனக்கு உங்களோட உதவியும் தேவைப்படுது”
“என்ன செய்யனும்ன்னு சொல்லும்மா. கண்டிப்பா நான் செய்றேன்” என்று அவர் சொல்ல, காளிதாசனின் முதல்வர் கனவிற்கு முடிவுரை எழுதினாள் அபி.
*********
இரண்டு தினங்களாகத் தொடர்ந்து நடந்த வருமானவரித் துறை சோதனையால் சுந்தர் திக்கு முக்காடிப் போனான். நிறைய கணக்கில் வராத பணம், தங்கக் கட்டிகள், வெளிநாட்டு பணம் என முக்கால்வாசியை அவர்கள் கைப்பற்றி எடுத்துச் செல்ல, அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
அவர்கள் வெளியே சென்ற அடுத்த நிமிடம் போலீஸ் உள்ளே நுழைந்தது. அவர்களைப் புரியாமல் பார்த்தவன், “உங்களுக்கு என்னய்யா?” என்று எரிந்து விழ,
“5 மாசத்துக்கு முன்னாடி ஒரு பெரியவரை மிரட்டி அவரோட 50 கோடி ரூபாய் சொத்தை வெறும் 5 கோடி கொடுத்து ஏமாத்தி வாங்குனதுக்காக உங்களைக் கைது செய்றேன்” என்றான் இன்ஸ்பெக்டர் ஞானவேல். இவனும் அபியுடன் ஒன்றாக போலீஸ் ட்ரெனியிங்கில் இருந்தவன் தான். இருவருமே நண்பர்கள்.
“அதை நான் தான் பண்ணேங்குறதுக்கு உங்கக்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு?” என்று சுந்தர் கேட்க, அவன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து அதில் ஒரு வீடியோவைக் காட்டினான்.
அதில் சுந்தர் காரில் இருந்து இறங்கிச் சென்று பெரியவரை மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது வரை ஆடியோ உடன் இருக்க, அவன் திடுக்கிட்டுப் போனான்.
‘இது எப்படி நடந்துச்சு?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவனது காதருகே குனிந்த ஞானவேல், “ரொம்ப யோசிக்காதேடா.. பொத்திக்கிட்டு வந்து வண்டியில ஏறு” என்றான்.
அதில் கோபமடைந்தவன் “ஏய்..” என கத்திக் கொண்டே இருக்கையில் இருந்து எழுந்து நிற்க முயல, அப்போது தான் தனது கையில் விலங்கு மாட்டி இருப்பதையே கண்டான் சுந்தர்.
அவன் அதிர்ச்சியுடன் ஞானவேலை பார்க்க, “போலாமா?” என்று கேட்டவன் தனக்கு பின்னால் இருந்த கான்ஸ்டெபிளைப் பார்த்து “இழுத்துட்டு வாங்க” என்று விட்டு முன்னே சென்றான்.
தங்களைச் சுற்றி ஏதோ ஒரு பெரிய சதி வேலை நடப்பதை உணர்ந்த சுந்தர் எதுவும் பேசாமல் அவர்களோடு கிளம்பிச் சென்றான்.
ஆள் கடத்தல், கொலை மிரட்டல், சட்டத்திற்குப் புறமாக சொத்துக்களை அபகரித்தல், பண மோசடி என பல வழக்குகளை அவன் மீது பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட, அவனது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, அவனை விசாரணை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
எல்லா ஆதாரங்களையும் கையில் தயாராக வைத்து இருந்த அபி, வேண்டும் என்றே மாத கணக்கில் தந்தையையும் மகனையும் நீதிமன்றத்திற்கும் சிறைக்கும் அலைய விட்டாள்.
பின்னர், இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வாங்கி தந்தவள், அவர்களை நக்கலாகப் பார்த்து சிரித்து கொண்டே நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினாள்.
நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் பாதுகாப்பில் நின்று இருந்த சுந்தர், ஞானவேல் உடன் சிரித்துப் பேசி விட்டு விடைப்பெற்றுக் கொண்டு வந்து ஜீப்பில் ஏறிய அபியைக் கொலைவெறியோடு நோக்கினான்.
மகனது பார்வையின் பொருளை உணர்ந்த காளிதாசன், “வேணாம்டா மகனே.. இப்போதைக்கு எதுவும் பண்ணிடாதே.. அவளைப் பின்னாடி பார்த்துக்கலாம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தந்தையின் கையை உதறித் தள்ளியவன் அபியை நோக்கி ஓடினான்.
அதை அறியாத அபி ஜீப்பை கிளப்பிக் கொண்டு செல்ல, அவனும் ஜீப்பின் பின்னாடியே ஓடினான். அவனைப் பிடிக்க போலீஸ்க்காரர்களும் ஓடி வர, காளிதாசன் திகைத்துப் போய் நின்று இருந்தார்.
அபியின் ஜீப் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறி சாலையில் கலக்க, சுந்தரும் அவளைத் துரத்துவதை விட்டு விடவில்லை. தொடர்ந்து ஓடி வந்தவன் நான்கு வழிச்சாலைக்கு வந்த போது, வேகமாக வந்த லாரி அவன் மீது மோதியதில் அவன் தூக்கி வீசப்பட்டான்.
சத்தம் கேட்டு அபி திரும்பிப் பார்த்தப் போது சுந்தர் இரத்த வெள்ளத்தில் தெருவில் விழுந்து கிடந்தான். மக்களும் ஓடி வந்து சூழ்ந்து கொள்ள, அபி கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து பார்த்தாள்.
அதற்குள் அவனது உயிர் பிரிந்து இருக்க, மூச்சு வாங்க ஓடி வந்து பார்த்த காளிதாசன், “ஐயோ! சுந்தர்! என்னை விட்டு போயிட்டீயேடா..” என்று மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.
போலீஸ் கூடி இருந்த கூட்டத்தைத் தள்ளி நிறுத்த, அழுதுக் கொண்டே அபியை நிமிர்ந்து பார்த்த காளிதாசன், “என் புள்ளையவே கொன்னுட்ட இல்ல, உன்னைச் சும்மா விட மாட்டேன்டி” என்று ஆக்ரோஷத்துடன் கூறினார். அதை எதையுமே பெரியதாக எடுத்துக் கொள்ளாத அபி, கண்ணிற்கு சன்கிளாஸை மாட்டிக் கொண்டு சென்று விட்டாள்.
அன்று தான் அபி கடைசியாக காளிதாசனைப் பார்த்தாள். அதன் பின்பு இப்போது தான் மறுபடியும் பார்க்கிறாள்.
காளிதாசனைப் பழி வாங்க வேண்டும் என்று அவள் முடிவெடுத்தப் பின்னர், முதல் வேலையாக அவரைப் பற்றி அனைத்து தகவல்களையும் அவள் சேகரிக்கத் தொடங்கினாள். காளிதாசனின் இரண்டு மகன்களில் சுந்தர் மட்டுமே தந்தையுடன் இருப்பதையும், மற்றொரு மகன் வெளிநாட்டில் இருப்பதையும் தெரிந்து கொண்டாள்.
இருவரில் சுந்தரே காளிதாசனின் நகல் வடிவம் என்பதாலும், மற்றொரு மகன் (ருத்ர பிரதாபன்) தொலைத்தூரத்தில் இருந்ததாலும் அவள் அவனைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.
ஒருவேளை.. சுந்தரின் முழுப்பெயர் சுந்தர பிரதாபன் என்று அவளுக்குத் தெரிந்து இருந்தால், ருத்ர பிரதாபனின் பெயரைக் கேட்ட நொடியிலேயே அவளுக்குப் பொறி தட்டி இருக்கும். அங்கும் விதி தான் சதி செய்தது.
அபிக்கு பணியிட மாற்றலாகி வேறொரு மாவட்டத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்குச் சென்று இருந்த சமயம் தான், ருத்ர பிரதாபனுக்கு தந்தை சிறையில் இருப்பதும் அண்ணன் இறந்து விட்ட தகவலும் தெரிய வந்தது. உடனே கிளம்பி இந்தியாவுக்கு வந்து விட்டான்.
ருத்ரா தந்தையை வெளியே கொண்டு வர உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நேரம், அண்ணாமலைக்கு முதல் முறை ஹார்ட் அட்டெக் வந்தது. தந்தையைப் பார்த்துக் கொண்டு மருத்துவமனையிலேயே இருந்த அபிக்கு இந்த மேல்முறையீட்டு விவகாரம் எல்லாம் தெரியாமலேயே போனது.
மகனின் முயற்சியால் வெளியே வந்த காளிதாசன் தனது இந்த நிலைமைக்கு அபி தான் காரணம் என்று ருத்ராவிடம் கூறி, அவள் மேல் பழிவெறியைத் தூண்டி விட்டார்.
*********
இன்று,
இரவு வெகு நேரம் ஆகியும் அபி மட்டும் தூங்காமல் விழித்து இருப்பதைக் கண்ட சிறைக் காவலர் அதிகாரி தனது கையில் இருந்த லத்தியால் கம்பியை இரண்டு தட்டுத் தட்ட, அந்தச் சத்தத்தில் தன்னிலை அடைந்த அபி அவரைப் புரியாமல் பார்த்தாள்.
“மணி 2 ஆகுது. இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அவர் வினவ, அபி மௌனமாக இருந்தாள்.
“உன்னைத் தான் கேட்டுட்டு இருக்கேன்..” என்று அவர் குரலை உயர்த்தவும், அபி படுக்கையில் படுத்து விட்டாள்.
“கம்பியை எண்ணிட்டு இருந்தாலும் திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று முணுமுணுத்து விட்டுச் செல்ல, அபியின் கண்கள் கண்ணீரைச் சிந்தின.
மேலும் இரு தினங்கள் கடக்க, மீண்டும் அபி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டாள். நீதிமன்றத்திற்கு வந்து இருந்த ருத்ரா, இறுக்கமான முகத்துடன் இருக்கையில் அமர்ந்து இருந்தான்.
டவாலி அபிலாஷினியின் பெயரை மூன்று முறை உரைக்க, அவள் யாருடைய முகத்தையும் பார்க்காமல் குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றாள்.
அவளைப் பார்த்த நீதிபதி, “அபிலாஷினி.. நீங்க கர்ப்பமாக இருக்கீங்கன்னு மெடிக்கல் ரிப்போர்ட் வந்து இருக்கு” என்று கூற, அதிர்ச்சியில் உறைந்தான் ருத்ரா.
அவனது பார்வை தானாக அபியை நோக்க, அவள் முகத்தில் துளி அதிர்வு இல்லை. அவனது பார்வையை உணர்ந்தாலுமே அவள் அவனைத் திரும்பி பார்க்க விரும்பவில்லை.
அப்போது தான் இரு தினங்கள் முன்பு, அவள் தனது கையைப் பிடித்து கூற வந்த விஷயமே இது தான் என்று அவனது புத்திக்கு உரைக்க, டென்ஷன் ஆனவன் இடது கையைக் கொண்டு நெற்றியை நீவினான்.
“சென்ற முறை பாதியில் நிறுத்தப்பட்ட இறுதி விசாரணையை இப்போது தொடங்கலாம்” என்று நீதிபதி கூற, அரசு தரப்பு வழக்கறிஞர் எழுந்து நின்றார்.
“யுவர் ஆனர், இன்றைய தலைமுறையினர்களுக்கு அனைத்தும் அசுர வேகத்தில் நடந்தேற வேண்டும். பொறுமை என்பதே சுத்தமாக இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து துரிதகதியில் முன்னேற முயல்கிறார்கள்” என்று கூற,
“எதுக்கு சம்பந்தம் இல்லாம பேசுறீங்க?” என்று கேட்டார் நீதிபதி.
“சம்பந்தம் இருக்கு யுவர் ஆனர். இப்போ நான் சொன்ன வாக்கியங்கள் அனைத்தும் இதோ இங்கே குற்றவாளி கூண்டில் இருக்கும் அபிலாஷினிக்கு அப்படியே பொருந்தும். சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர் மிக குறுகிய காலத்திலேயே இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதற்காக பல குறுக்கு வழிகளைக் கையாண்டு இருக்கிறார்” என்று கூற,
“சுத்தி வளைக்காமல் எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லுங்க” என்றார் நீதிபதி.
“எஸ் யுவர் ஆனர்.. மிஸ். அபிலாஷினி பதவி உயர்வுக்காக பலருடன் தவறான உறவில் இருந்ததால் தான் தற்போது திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருக்கிறார். இது நம் கலாச்சாரத்திற்கே கேடான ஒரு விஷயம்” என்று கூற, அபி அதிர்ந்து போய் அவரை நோக்கினாள்.
அப்படியே பார்வையைத் திருப்பி ருத்ராவை ஒரு பார்வைப் பார்த்தாள். அவன் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு அமர்ந்து இருக்க, அவளுக்கு ‘ச்சீ’ என்று ஆகி விட்டது. உடனே தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ருத்ரா அபியை ஒரு கோவிலில் வைத்து தானே தாலி கட்டினான். அதற்கு ஒரே ஒரு சாட்சி அண்ணாமலை மட்டும் தான். அவரும் தற்போது உயிருடன் இல்லை. மற்றவர்கள் எல்லாம் அவன் ஏற்பாடு செய்த ஆட்கள்.
அதன் பின்பு நடக்கவிருந்த வரவேற்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி ருத்ரா தள்ளிப் போட்டுக் கொண்டே வந்ததால், அபிக்குத் திருமணம் ஆனதே வெளியே பலருக்கும் தெரியவில்லை.
அவள் கழுத்தில் இருந்த தாலியையும் இரண்டு நாட்கள் முன்பு இதே நீதிமன்ற வளாகத்தில் அதைக் கட்டியவனே அறுத்து எரிந்து விட்டான்.
இப்போது அவளே நினைத்தாலும் தனக்கு நடந்தத் திருமணத்தை அவளால் நிரூபிக்க முடியாது என்ற நிதர்சனம் முகத்தில் அறைய, அவளுக்கு வாழ்வே வெறுத்துப் போனது.
“ஆதாரம் இருக்கா?” என்று நீதிபதி கேட்க,
“இருக்கு யுவர் ஆனர்..” என்ற அரசு தரப்பு வக்கீல் ஒரு பென் டிரைவை கொடுத்தார்.
அதில் ருத்ராவும் அபியும் இரவு நேரத்தில் ஒரு விடுதிக்குச் சென்று அறை எடுத்தது காட்டப்பட்டது. அந்த வீடியோவில் ருத்ராவின் முகம் மட்டும் மறைக்கப்பட்டு இருக்க, அபியின் முகம் தெளிவாகக் காண்பிக்கப்பட்டு இருந்தது.
இது காளிதாசனின் வேலை தான். அவருக்கு முன்பே அபி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்து விட்டது.
“இப்போ உண்மையைச் சொல்லுங்க அபி.. அந்த வீடியோவுல இருக்குறது நீங்க தானே?” என்று மிக புத்திசாலித்தனமாகக் கேள்விக் கேட்க, அவள் ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தாள்.
“யுவர் ஆனர்.. இதே விடுதிக்கு அபி பல முறை பல ஆண்களுடன் வந்து இருப்பதை அந்த விடுதி மேனேஜரை ஒப்புக் கொண்டு உள்ளார். இப்படி சுய ஒழுக்கமே இல்லாத இவங்க எப்படி சட்ட திட்டங்களை மதிச்சி நடப்பாங்க? அதிகாரம் தன் கையில இருக்குற திமிர்ல தன் இஷ்டத்துக்கும் அதிகாரத்தை துஷ்பிரியோகம் செய்து இருக்காங்க.
முன்பகை காரணமாக இந்த அபி தான் ராஜாவைச் சுட்டுக் கொன்று இருக்கிறார் என்பதை நான் இங்கே மிகவும் ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறேன். ஆகவே கொலை குற்றவாளியான அபிக்கு தாமதிக்காமல் தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்..” என்று கூறி அமர,
அபியை ஏறிட்டுப் பார்த்த நீதிபதி, “இந்த வழக்குல கடைசியா நீங்க சொல்ல ஏதாவது இருக்கா?” என்று வினவினார்.
அதற்கு அவளிடம் எந்த பதிலும் வராமல் போக, “அப்போ கொலைக் குற்றத்தைச் செஞ்சது நீங்க தான்னு ஒத்துக்குறீங்களா?” என்று கேட்டார். அதற்கும் அவளிடம் அதே மௌனம்.
“இப்படி பேசாம இருக்கிறது கோர்ட்டை அவமதிக்குற மாதிரி ஆகும்” என்று நீதிபதி எச்சரிக்க, கண்ணீருடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் அபி.
“ஆமா.. எல்லா தப்பும் என்னோடது தான். நான் தான் தப்பு பண்ணிட்டேன். எனக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனையைக் கொடுங்க.. எனக்குத் தூக்குத் தண்டனைக் கொடுங்க.. எனக்குத் தூக்குத் தண்டனைக் கொடுங்க..” என்று ஆவேசத்துடன் கத்த, மொத்த நீதிமன்றமும் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துப் போனது.
Post a Comment