தீராக் காதல் - 9
கோவிலில் இருந்து நேரே வீட்டிற்குச் சென்ற அபி, காக்கி உடையை மாற்றிக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றாள். மாரியப்பன் ஒரு வித தவிப்புடன் பென்ஞ்சில் அமர்ந்து இருக்க, அவனருகே காவலுக்கு நின்று இருந்தான் அருள்.
காவல் நிலையத்தினுள் வந்த அபி நேரே அவன் முன்னே சென்று நின்று அவனை அழுத்தமாகப் பார்க்க, “மேடம்.. என்னை ஏன் இப்படி உட்கார வச்சி இருக்கீங்க?” என்று மாரியப்பன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான்.
அடுத்த நொடியே அவனது கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள் அபி. அவன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பயத்துடன் அபியைப் பார்க்க, “அன்னைக்கு நான் அந்த தினேஷை அரெஸ்ட் பண்ணப் போறேன்னு அவன் அண்ணன் ராஜாவுக்கு இன்ஃபர்மேஷன் கொடுத்தது நீதானே?” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தாள் அபி.
அதில் அவனது முகம் வெளிறிப் போக, “என்ன.. இவ எப்படிடா கண்டுபிடிச்சான்னு பார்க்கிறீயா?” என்று நக்கல் தொனியில் கேட்டாள்.
அதற்கு மாரியப்பன் திருதிருவென முழிக்க, அவன் முகத்தில் ஒரு கவரை விட்டெரிந்த அபி “டிபார்ட்மெண்ட்ல உன் சேவையைப் பாராட்டி சஸ்பென்ஷன் இஸ்ஸூ பண்ணி இருக்காங்க. சஸ்பென்ஷன் முடிஞ்சி தப்பித் தவறிக் கூட என் முன்னாடி வந்து நின்னுறாதே. அப்படியே வேற எங்கேயாவது ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு ஓடிப் போயிடு” என்று மிரட்டினாள்.
“சாரி மேடம்..” மாரியப்பன் தலை குனிந்தவாறே சொல்ல, அபி அவனை அற்பமாகப் பார்த்து விட்டு தனது அறைக்குச் சென்றாள்.
அடுத்த சில நிமிடங்களில் வந்த கமிஷனர் நேரே அபியின் அறைக்குச் சென்று நாற்காலியில் அமர, அவளும் அவளது டீமும் அவருக்கு சலியூட் அடித்து விட்டு விரைப்பாக நின்றார்கள்.
“எதாவது வாயைத் திறந்து சொன்னானுங்களா?” என்று அவர் கேட்க,
“அரெஸ்ட் பண்ணவங்கல்ல இரண்டு பேர் அப்ரூவரா மாறிட்டாங்க சார்” என்றாள் அபி.
“வேற ஏதாவது ஆதாரம் இருக்கா?”
“இருக்கு சார். இது எல்லாத்துக்கும் பின்னாடி ராஜா தான் இருக்காங்குறதுக்கு உண்டான எல்லா ஆதாரமும் இந்த ஃபைல்ல இருக்கு” என்றவள் அவரிடம் ஒரு கோப்பை கொடுத்தாள்.
“எல்லாம் ஓகே.. இன்னும் ஏன் ராஜாவை அரெஸ்ட் பண்ணாம இருக்க?” என்று கேட்க,
“உங்களோட ஆர்டருக்காகத் தான் சார் வெயிட்டிங்” என்றாள்.
“ஓ.. எனக்காகத் தான் வெயிட்டிங்கா? அப்போ உடனே கிளம்பலாம்.. வா..” என்று விட்டு அவர் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள,
“சார்.. நீங்க எதுக்கு? நாங்களே போதுமே..” என்றாள் அபி.
அவளது வார்த்தையை அவளது குழுவினரும் ஆமோதிக்க, “இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் இன்னொரு தடவை கிடைக்காது” என்றவர் அபியின் குழுவினருடன் சேர்ந்து ராஜாவின் வீட்டிற்குச் சென்றார்.
அங்கோ, சரக்கு என்னாச்சு என்று தெரியாமல் மண்டை சூட்டில் இருந்த ராஜா ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க, போலீஸ் ஜீப் வீட்டு வாசலில் வந்து நிற்பதைக் கண்டு அதிர்ந்தான்.
அவன் முன்பு நக்கல் சிரிப்புடன் வந்து நின்ற கமிஷனர், “என்ன ராஜா.. சரக்கு என்னாச்சுன்னு தேடிட்டு இருக்கீயா?” என்று கேட்க, அவனது கண்கள் அதிர்ச்சியில் பெரியதாக விரிந்தன.
அவனது இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்த கமிஷனர், “என்ன தைரியம் இருந்தா, என் பொண்ணையே கடத்தி என்னையே மிரட்டுவ..” என்று ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க, அவனது அடியாட்கள் எல்லாம் பதறிப் போய் பாய்ந்து வந்தார்கள்.
அவர்களை எல்லாம் ஐவர் கொண்ட குழுவே பிடித்துக் கொள்ள, “அபி அரெஸ்ட் ஹிம்” என்றார் கமிஷனர். அவளும் ராஜாவின் கைகளில் விலங்கு மாட்டி இழுத்துக் கொண்டு வண்டிக்குச் சென்றாள்.
அவர்கள் மீண்டும் காவல் நிலையத்திற்கு வரும் போது செய்தியாளர்கள் எல்லாம் கையில் கேமிராவும், மைக்குமாக ஓடி வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.
“சார்.. பிரபல ரவுடி ராஜாவை நீங்க அதிரடியா அரெஸ்ட் பண்ணிட்டதா கேள்விப்பட்டோம். அது உண்மையா?” என்று ஒரு பெண் பத்திரிகையாளர் கேட்க,
“சார்.. ஏதோ சீக்ரெட் ஆப்ரேஷன் எல்லாம் நடத்தி தான் ராஜாவை பிடிச்சீங்களாமே? என்று கேட்டான் இன்னொருவன்.
“வெயிட்.. வெயிட்.. உங்க எல்லார் கேள்விக்கும் பதில் உண்டு. அமைதியா எங்களை எங்க வேலையைப் பார்க்க விடுங்க” என்று தன்மையாகச் சொன்ன கமிஷனர் அபியைப் பார்க்க, அவள் சென்று ராஜாவின் விலங்கைப் பிடித்து இழுத்து வந்து அவனைச் சிறையில் அடைத்தாள்.
அந்தக் காட்சியைத் தவறாமல் தங்களது கேமிராவில் வீடியோ எடுத்துக் கொண்ட செய்தியாளர்கள், பிரஸ் மீட் நடைப்பெற இருக்கும் அறைக்குச் சென்று காத்திருந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து பிரஸ் மீட் தொடங்கியது. முதலில் கமிஷனர் பேச, பின்பு அபி அவரோடு இணைந்து கொண்டாள். பிரவீன் வழக்கில் இருந்து தொடங்கி நேற்று போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தைக் கையும் களவுமாகப் பிடித்தது வரை கூறியவள், கைப்பற்றிய போதைப் பொருள் பெட்டிகளை பத்திரிகையாளர்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தினாள்.
அத்துடன் பிடிபட்ட ரவுடி சேதுவின் கூட்டத்தையும் அவர்களுக்கு நடுவே ராஜாவையும் நிற்க வைத்து இருக்க, செய்தியாளர்கள் அனைத்தையும் ஃபோட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்கள்.
இந்தச் செய்தி யாவும் தொலைக்காட்சிகளில் ப்ரேக்கிங் நியூஸாக ஒளிப்பரப்பாக, அதனை இறுகிய முகத்துடன் பார்த்து கொண்டிருந்த அண்ணாமலை மகளின் செயலை நினைத்து நறநறவெனப் பற்களைக் கடித்தார்.
“ஏன் மாப்ள.. அவ தான் புத்திக் கெட்டத்தனமா போறேன்னு சொன்னா, நீங்களும் அப்படியே அனுப்பிடுவீங்களா?” ருத்ராவைப் பார்த்து கோபமும் ஆதங்கமுமாக அவர் கேட்க,
“இல்ல அங்கிள்.. ஏதோ ஒரு முக்கியமான வேலைன்னு சொன்னாங்க..” என மெல்லியக் குரலில் கூறினான்.
“அவ எப்பவுமே இப்படித்தான் மாப்ள.. வேலை வேலைன்னு வேலை பின்னாடியே தான் ஓடுவா.. என்னைக்குத் தான் மாறப் போறாளோ..” அவர் சலிப்புடன் நெற்றியை நீவி விட்டுக் கொள்ள,
“அதைத் தப்புன்னு சொல்ல முடியாதே அங்கிள்.. அவங்க செய்ற வேலை அப்படி.. போலீஸ்ன்னா எந்த நேரத்துல அழைப்பு வந்தாலும் உடனே போய் தானே ஆகனும்..” என்றான் புரிதலுடன்.
மருமகனின் புரிதல் அண்ணாமலையின் மனதைக் குளிர்வித்தாலும், மகளை நினைத்து அவரால் கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இனி அவள் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயம் முன்பை விட இப்போது தான் அவருக்கு அதிகமாக இருக்கிறது..
********
அன்றே, ராஜாவையும் அவனது கூட்டத்தையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட, அவர்களை 14 நாட்கள் விசாரணை காவலில் எடுத்து விசாரிக்க ஆணை பிறப்பிக்க வேண்டினார் அரசு தரப்பு வக்கீல். நீதிபதியும் அவர் கேட்ட ஆணையைப் பிறப்பிக்க, அபியின் உதடுகள் நக்கலாக வளைந்தன.
அதே கணம் அவளை ஏறிட்டுப் பார்த்த ராஜாவின் விழிகள் பழிவெறியில் சிவந்து காணப்பட, இருக்கையில் இருந்து எழுந்து வந்த அபி “கூட்டிட்டு வாங்க..” என்று விட்டு முன்னே சென்றாள்.
காவல் துறை வாகனத்தின் மீது சாய்ந்தபடி நின்று இருந்த அபி தனது அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, நடைமுறைகள் எல்லாம் முடிந்து போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வந்த ராஜா அபியின் முன்னே வந்து நின்றான்.
தன் முன் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்த அபி, எதுவும் கேட்காமல் அமைதியாக ராஜாவை நோக்கினாள். “என் தம்பி எனக்குப் புள்ள மாதிரிடி. அவனையே கொன்னுட்ட இல்ல.. உன்னைச் சும்மா விட மாட்டேன். எழுதி வச்சிக்கோ. உன் சாவு என் கையில தான்..” என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கூற, மகளைத் தேடி அவ்விடத்திற்கு வந்த அண்ணாமலைக்கு அக்காட்சியைக் கண்டு உயிர் உறைந்துப் போனது.
“என்னது.. உன் தம்பி தினேஷ் செத்துட்டானா?” என்று ஏதோ புதிதாகக் கேள்விப்பட்டது போல் முகத்தில் போலியான அதிர்ச்சி பாவனையுடன் கேட்ட அபி,
“என்ன சொல்ற ராஜா.. எப்படி?” என்று ஏதும் தெரியாதது போலவே வினவ,
“ஏய்.. நடிக்காதேடி..” என்று ஒற்றை விரலை நீட்டினான் ராஜா.
அபி நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்க்க, “சிரிக்கிறீயா? நல்லா சிரிச்சிக்கோ.. இந்த கோர்ட், கேஸ், ஜெயில் எல்லாம் எனக்கு ஒன்னும் புதுசு இல்ல. இதை எல்லாம் எப்படி சமாளிக்கனும்ன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். கண்டிப்பா ஒரு நாள் நான் வெளியே வருவேன். அப்படி வந்தா, சத்தியமா உன்னைக் கொல்லாம விட மாட்டேன்டி. என் தம்பியை எப்படி நீ துடிக்கத் துடிக்கக் கொன்னீயோ.. அதை விட பல மடங்கு உன்னை டார்ச்சர் பண்ணி சாவடிப்பேன்டி. உன் குடும்பத்துல ஒருத்தரையும் உயிரோட விட மாட்டேன்டி..” என்றான் குரோதத்துடன்.
அதில் அபியின் முகம் மாற, அருகில் நின்று இருந்த காவலர்களைப் பார்த்து “இழுத்துட்டுப் போங்க..” என்றாள்.
அவர்களும் ராஜாவை இழுத்துக் கொண்டு செல்ல, வாகனத்தில் ஏறப் போன அபி சற்று தொலைவில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்று இருந்த தந்தையைக் கண்டு அதிர்ந்து போனாள்.
அவரது நிலைக்குலைந்துப் போனத் தோற்றம் அபியை உருக்க, அவரை நோக்கி நடந்தாள். தன் முன்னே வந்து நின்ற மகளின் முகத்தைக் கலங்கிய கண்களுடன் ஏறிட்டு நோக்கினார் அண்ணாமலை.
காலையில் அவள் கழுத்தில் ஏறிய பொன் மஞ்சள் மாங்கல்யத்தின் ஈரம் கூட காய்ந்து இருக்காது.. அதற்குள் அவளையும் அவள் குடும்பத்தையும் சிதைத்து விடுவேன் என்று நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவன் மிரட்டுகிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய ரவுடியாக இருப்பான் என்று அவர் மனதில் எண்ணிக் கொண்டிருந்த சமயம், “அப்பா..” என்றழைத்தாள் அபி.
“வேணாம்.. நீ எதுவும் பேசத் தேவையில்லை..”
“இல்லப்பா..”
“பேச வேணாம்..” என்றவர் உடைந்து போய் அங்கிருந்த மரத்தடியில் அமர, அபி உண்மையிலேயே தந்தையின் நிலையைப் பார்த்து தவித்து தான் போனாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, “போதும்.. இதுக்கு மேல இந்த வேலை உனக்கு வேணாம்.. இப்போவே ராஜினாமா பண்ணிட்டு என் கூட வா.. நாம வேற எங்கேயாவது போய் பொழச்சிக்கலாம்” என்று அவளின் கையைப் பிடித்து கெஞ்சினார்.
அவர் பயத்தினால் தான் அப்படி பேசுகிறார் என்று உணர்ந்த அபி, “அப்பா.. அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்குப் பயந்து ஊரை விட்டு போகச் சொல்றீங்களா?” என்று கேட்க,
“சொன்னா புரிஞ்சிக்கோ அபிம்மா.. எனக்குன்னு இருக்குறது நீ மட்டும் தான். உன்னையும்..” என்றவருக்கு அடுத்த வார்த்தையைச் சொல்லக் கூட முடியவில்லை.
“எனக்கு ஒன்னும் ஆகாதுப்பா.. நீங்க தைரியமா இருங்க..” அவள் அவரைச் சமாதானம் செய்ய முயல,
“அப்போ நீ என் பேச்சைக் கேட்க மாட்டே இல்ல” என்று கோபமாகக் கேட்டார்.
அதற்குப் பதில் சொல்லாத அபி திரும்பி ஒரு கான்ஸ்டெபிளைப் பார்த்து “அப்பாவை பத்திரமா கொண்டு போய் வீட்டுல விட்டுடு” என்று கூற,
“வாங்க சார்..” என்று தனது கையைப் பிடிக்க வந்த கான்ஸ்டெபிளின் கையைக் கோபமாக உதறித் தள்ளிய அண்ணாமலை, மகளை முறைத்துக் கொண்டே அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றார்.
திருமணச் சடங்கில் பாதியிலேயே கிளம்பி விட்ட மகளைப் பார்த்து பேசி மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகத் தான் அண்ணாமலை அவளைத் தேடி நீதிமன்றம் வரை வந்தார்.
வந்த இடத்தில் தனது மகளுக்கு ஒரு ரவுடி கொலை மிரட்டல் விடுவதைக் கண்டு பயந்து போனவர், இந்த போலீஸ் வேலையினால் தானே இவ்வளவும் வருகிறது என்று அந்த வேலையை விடச் சொன்னார். அபி முடியாது என்று சொல்லவும், அவள் மீது கோபத்துடன் கிளம்பி விட்டார்.
அபிக்கு உடனே அடுத்தொரு கேஸ் வர, அதில் பிஸி ஆகி விட்டாள். வீட்டில் அவளை அதட்டிக் கொண்டிருந்த ஒரே ஜீவன் அவளது அப்பா மட்டும் தான். அவரும் நீதிமன்ற வளாகத்தில் நடந்த வாக்குவாதத்திற்குப் பிறகுப் பேசாமலேயே இருக்க, ருத்ராவிற்கும் அவன் குடியிருக்கும் வீட்டை காலி செய்து கொடுக்க வேண்டி இருந்ததால் மனைவியிடம் பேசிப் பழகக் கூட அவனுக்கு நேரம் இல்லாமல் போனது.
அபி மட்டும் வழக்கம் போல் அவள் இஷ்டத்திற்கு வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்தாள். கணவன் என்று ஒருவன் தன் வீட்டில் இருப்பதே அவளுக்குத் தெரியவில்லை.
ஆம்.. அந்த வாரம் அவளுக்கு இரவு நேர காவல் பணி வழங்கப்பட்டது. காலையில் அவள் வீட்டிற்கு வரும் போது, ருத்ரா அண்ணாமலையோடு சமையலறையில் இருப்பான். இருவரும் சேர்ந்து தான் சமையல் வேலைகளைப் பார்த்துக் கொள்வார்கள். பின்னர், சாப்பிட்டு விட்டு அவன் வேலைக்குக் கிளம்பிச் செல்லும் போது, அபி கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.
களைப்பில் உறங்குபவளை எழுப்ப மனமின்றி அப்படியே சில நொடிகள் நின்று அவளைப் பார்வையால் மட்டுமே ரசித்துப் பார்த்தவன், உதட்டில் உறைந்தப் புன்னகையுடன் வேலைக்குக் கிளம்பிச் சென்று விட்டான். அவன் மாலையில் வந்து பார்க்கும் போது அவள் வீட்டில் இருக்க மாட்டாள். இப்படியே தான் இந்த ஒரு வார நாட்களும் பறந்துச் சென்றது.
Post a Comment