தீராக் காதல் - 10



ஒரு நாள், ஏழு மாடி கட்டடத்தின் மேலே ஒருவன் நின்று இருக்க, கீழே கூடி இருந்த கூட்டம் ‘குதிக்காதே’ என்று கத்திக் கெஞ்சிக் கொண்டிருந்தது. போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கிய அபி, கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து மேலே நின்று இருப்பவனைப் பார்த்தாள். 

“மேடம்.. இந்தாங்க” என்ற கான்ஸ்டெபிள் அவளிடம் ஒரு ஒலிவாங்கியை நீட்டினார்.  

அதை வாங்கியவள், “ஹலோ.. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். முதல்ல கீழே இறங்கி வாங்க..” என்றாள். 

“முடியாது மேடம். நான் இங்கிருந்து குதிக்கத் தான் போறேன்” என்றான் அவன். 

“ஹே மேன்.. தற்கொலை பண்ணிக்கிறது சட்டப்படி குற்றம்” 

“பரவாயில்ல மேடம்.. எப்படியும் நான் இங்க இருந்து குதிச்சா எலும்பு கூட தேறாது. நேரா சொர்க்கம் தான். அப்புறம் நீங்க எப்படி என் மேல கேஸ் போட முடியும்?” என்று இடக்காகக் கேட்டவனைச் சலிப்புடன் பார்த்தவள்

“இப்படி சாகுற அளவுக்கு உனக்கு என்னய்யா பிரச்சனை?” என்று கேட்டாள். 

“சொன்னா தீர்த்து வச்சிடுவீங்களா?”

“கண்டிப்பா தீர்த்து வைக்கிறேன். உன் பிரச்சனை என்னன்னு சொல்லு” 

“என் பொண்டாட்டி என் கூட ஒரு வாரமா பேசல மேடம்?” 

“ஆ..” என்று ஒட்டு மொத்த கூட்டமும் வாயைப் பிளக்க, அபிக்கும் அதே நிலை தான். 

“வாட்.. பொண்டாட்டி பேசலன்னு யாராவது இப்படி பில்டிங் மேல இருந்து குதிப்பாங்களா?” 

“அதானே.. யோவ்.. அதெல்லாம் எவ்ளோ பெரிய வரம் தெரியுமா? என் பொண்டாட்டி எல்லாம் கொஞ்சம் நேரம் வாயை மூட மாட்டாளான்னு இருக்கும் எனக்கு. எப்போ பார்த்தாலும் நொயி நொயின்னு பேசியே சாவடிக்கிறாய்யா” என்று கூட்டத்தில் ஒருவன் புலம்ப, 

அவனைத் திரும்பி பார்த்து முறைத்த அபி, “அது ரொம்ப முக்கியமா இப்போ” என்று பல்லைக் கடித்தாள். 

“மேடம்.. யாருக்கு எப்படியோ.. எனக்கு என் பொண்டாட்டின்னா உயிர் மேடம். எப்படியாவது அவளை எங்கூட பேச சொல்லுங்க மேடம்” என்று அவன் கெஞ்ச, 

“சரி.. பேச சொல்றேன். கீழே இறங்கி வா” என்று கத்தினாள். 

“நிஜமாவா மேடம்?” 

“நிஜமா தான்ய்யா.. முதல்ல நீ கீழே இறங்கு” 

“அப்புறம் மாத்தி பேசக் கூடாது மேடம்” 

“மாட்டேன்.. வா” என்று அவள் உறுதி அளிக்க, அவன் கீழே இறங்கி வந்தான். 

வெள்ளை நிறச் சட்டை அவனது உருண்டு திரண்ட புஜங்களை இறுக்கிப் பிடித்தபடி இருக்க, ஆறடி உயரத்தில் ஆண்மையின் இலக்கணத்தோடு கன்னக்குழிச் சிரிப்புடன் தன் முன்பு வந்து நின்றவனைப் பார்த்தவள், “உன் பொண்டாட்டி எங்கே இருக்கான்னு சொல்லு.. நான் பேசுறேன்..” என்றாள். 

நமட்டுச் சிரிப்புடன், “வாங்க மேடம். நானே அழைச்சிட்டுப் போறேன்..” என்றவன் ஜீப்பின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொள்ள, 

கூட்டத்தைக் கலைத்து விட்டு வந்து ஜிப்பின் முன் சீட்டில் ஏறி அமர்ந்த அபி, “டிரைவர்க்கிட்ட அட்ரஸ் சொல்லு” என்றாள். 

அவனும் ரகசியமாக அவரது காதில் வீட்டு விலாசத்தைச் சொல்ல, அவர் அதிர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்தார். 

“போ” என்பது போல அவன் பார்வைக் காட்ட, அவர் அப்படியே திரும்பி வண்டியை எடுத்தார். 

போகும் வழியில் “ஆமா.. உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?” என்று அவள் சாதாரணமாகக் கேட்க, 

அவன் “ஒரு வாரம் ஆச்சு மேடம்” என்றான் அடக்கப்பட்டப் புன்னகை உடன். 

“என்னது.. ஒரு வாரமா?” என்று அதிர்ந்தவளின் அலைப்பேசி அலற, யாரது என்று அலைபேசியை எடுத்து பார்த்தவள் உடனே அழைப்பை ஏற்று பேசினாள். உயர் அதிகாரியின் அழைப்பு அது. 

அவள் பேசி கொண்டே வர, வண்டியும் ஓரிடத்தில் சென்று நின்றது. “ஓகே ஸார்.. நான் என்னன்னு பார்த்துட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவள், வண்டியில் இருந்து இறங்கி வீட்டைப் பார்க்க, அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். 

ஏனென்றால், அது அவளுடைய வீடு தான். 

அவளது அதிர்ந்த தோற்றத்தைப் பார்த்துக் கொண்டே அவளின் முன்னே வந்தவன், “இது தான் மேடம், என் பொண்டாட்டியோட வீடு” என்றான் அடக்கப்பட்டச் சிரிப்புடன். 

“நீ.. நீங்க..?” என்று அவள் திக்கித் திணற, 

“ருத்ர பிரதாபன்” என்றவன் சிறிது இடைவெளி விட்டு 

“உங்க புருஷன் மேடம்” என்றான் விரிந்தப் புன்னகையுடன்.. 

ருத்ர பிரதாபன் தன்னை யாரென்று அறிமுகம் செய்து கொள்ளவும் அபி உடன் வந்த கான்ஸ்டெபிள்ஸ் எல்லாம் தங்களுக்குள்ளேயே குசுகுசுவெனப் பேசினார்கள். 

“என்னது மேடமுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? இது எப்போ?”, “இவரா மேடமோட ஹஸ்பெண்ட்? மேடம் சொல்லவே இல்லையே!” என்று ஒவ்வொருவரும் ஆச்சரியமாக வினவ, சிலையென நின்று இருந்த அபி சுயநினைவு அடைந்தாள்.

பக்கவாட்டாகத் திரும்பி அவர்களைப் பார்த்தவள், “நீங்க கிளம்பலாம்” என்று கூற,

“கிளம்புறதா? அதுக்காகவா உங்க எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்தேன்..” என்றான் ருத்ரா. 

அபி அவனைப் புரியாமல் பார்க்க, “எங்க கல்யாணத்துக்குத் தான் உங்க யாரையும் கூப்பிட முடியல. அதான் உங்க எல்லாரையும் வீட்டுக்குக் கூப்பிட்டாவது ட்ரீட் வைக்கலாம்ன்னு இப்படியொரு டிராமா போட்டேன்” என்றான் அதே விரிந்தப் புன்னகையுடன். 

“ட்ரீட் ஆஹ்?” என்று வாயைப் பிளந்தவர்கள், “எங்க சார்?” என்று ஆர்வமாகக் கேட்க, 

“உள்ளே வாங்க..” என்றவன் அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான். 

அபியும் அவர்களோடு இணைந்து வீட்டினுள் நுழைய, அண்ணாமலை அவர்களை எல்லாம் வரவேற்று ஹாலில் உட்கார வைத்து அவர்களுக்கு குடிக்க குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்தார். 

அதிலும் மிக ஜாக்கிரதையாக மகளின் புறம் அவர் திரும்பாமலேயே இருக்க, ருத்ரா அதைக் கவனித்து விட்டு அவனே ஒரு கிளாஸை எடுத்து வந்து மனைவியிடம் நீட்டினான். 

தந்தையை ஆழ்ந்துப் பார்த்த அபி, கணவன் நீட்டிய குளிர்பானத்தை வாங்காமலேயே படியேறி அவளது அறைக்குச் சென்றாள்.

அவள் பின்னாடியே செல்லப் போன ருத்ராவைப் பிடித்துக் கொண்ட ஒரு கான்ஸ்டெபிள், “சார்.. உங்களுக்கும் மேடமுக்கும் எப்போ கல்யாணம் ஆச்சு? உங்க கல்யாணக் கதையை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று கேட்டான் கதைக் கேட்கும் ஆர்வத்துடன். 

“நீங்க எதிர்ப்பார்க்குற அளவுக்கு லவ் ஸ்டோரி எல்லாம் இல்லை. ஒரு வாரம் முன்னே கோவில்ல சிம்பிளா தான் கல்யாணம் ஆச்சு” என்று ருத்ரா கூற, அனைவரது கண்களும் பெரியதாக விரிந்தன. 

“என்ன சார் சொல்றீங்க? போன வாரம் தானே.. மேடம் ஒரு பெரிய கேஸை பிடிச்சாங்க” 

“ஆமா.. அன்னைக்குத் தான் எங்க கல்யாணமும் நடந்துச்சு” என்றான் ருத்ரா. 

அங்கு ஒரு வித அமைதி நிலவ, “என்ன எல்லாரும் அமைதியா இருக்கீங்க?” என்று அவன் கேட்க, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள். 

“டின்னருக்கு இன்னும் நேரம் இருக்கு. அதுவரைக்கும் எதாவது படம் பார்க்கலாமா?” என்று வினவ, அவர்கள் சம்மதமாய் தலையை அசைத்ததும் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து நகைச்சுவை சினிமா ஒன்றைப் போட்டான். 

அதில் ஒன்றிப் போனவர்கள் கிண்டலடித்துக் கொண்டும் சத்தமாகச் சிரித்துக் கொண்டும் இருக்க, மேலே தனது அறையில் கட்டிலில் அமர்ந்து இருந்த அபி உடனே அறையின் கதவைத் திறந்து வெளியே வந்து கீழே எட்டிப் பார்த்தாள். 

அங்கே, அனைவருடன் சேர்ந்து அமர்ந்து அண்ணாமலை வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பதை வெறித்துப் பார்த்த அபி, மீண்டும் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். அதைப் பார்த்து விட்ட ருத்ரா, மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து படியில் ஏறி அவர்களது அறைக்குச் சென்றான். 

உள்ளே வந்த அபிக்கு அலமாரியில் இருந்த வெண்ணிற கவர் கண்ணிற்குத் தெரிய, அதை எடுத்துப் பார்த்தாள். அதில் தான் ருத்ராவின் புகைப்படம் இருந்தது. 

அண்ணாமலை அன்று அவளிடம் இந்த கவரைக் கொடுத்தப் போது, ஸ்டேஷனில் நடந்த பிரச்சனையில் அதனைப் பார்க்காமலேயே வைத்து விட்டுச் சென்று விட்டதை இப்போது தான் நினைத்துப் பார்த்தாள். 

புகைப்படத்தின் பின்புறத்தில், ‘ருத்ர பிரதாபன்’ எனக் குறிப்பிட்டு ஒரு தனியார் கம்பெனியின் பெயர் மட்டும் எழுதி இருந்தது. 

அதனைப் பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்த ருத்ரா, “இப்போ தான் என் போட்டோவையே பார்க்கிறீங்களா?” என்று வினவ, 

திடீரென அவனது குரல் கேட்கவும் அதிர்ந்து திரும்பிப் பார்த்தவள், “அ..அது.. வொர்க் பிஸில பார்க்காம விட்டுட்டேன்” என்றாள் உண்மையாக. 

“ஓ.. அப்போ என் முகத்தைக் கூடப் பார்க்காம தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?” என்று அவன் கேட்க, 

தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவள் ‘ஆமாம்’ என்பது போல் தலை அசைத்தாள்.    

“நவ், ஐ காட் இட்.. அதான் என்னை உங்களுக்கு அடையாளமே தெரியலையா? நான் கூட நீங்க எங்கூட விளையாடுறீங்கன்னு நெனைச்சேன்” அவன் சிரித்துக் கொண்டே சொல்ல,

“சாரி” என்றாள் அபி. 

“நமக்குள்ள சாரி எல்லாம் எதுக்கு?” என்றவன் அவளை கீழே அழைக்க, 

அவள் தந்தையின் கோபத்தை மனதில் வைத்து கொண்டு, “இல்ல.. எனக்குக் கொஞ்சம் தலைவலியா இருக்கு” என்று மறுத்து விட்டாள். 

“இட்ஸ் ஓகே.. ரெஸ்ட் எடுங்க” என்றவன் அவளைத் தனியே விட்டு விட்டு கீழே இறங்கிச் செல்ல, குளியலறைக்குள் புகுந்த அபி ஷவரைத் திறந்து விட்டு தண்ணீருக்கடியில் நின்றாள். 

*********

அடுத்த நாள் காலையில் அபி கண் விழித்தப் போது அவள் முன்பு காபி உடன் நின்று இருந்தான் ருத்ரா. 

“குட் மார்னிங்..” என்று அவன் மெல்லியப் புன்னகையுடன் கூற, 

ஒரு வித தயக்கத்துடன் “குட் மார்னிங்..” என்றபடி அவன் நீட்டிய கப்பை வாங்கிக் கொண்டவள் அதைக் குடிக்காமல் அப்படியே கையில் வைத்து இருந்தாள். 

“இன்னைக்கு லீவ் ஆஹ்?” என்று அவன் கேட்க, அவள் கேள்வியாக அவனை ஏறிட்டு நோக்கினாள். 

“இல்ல, எனக்கு இன்னைக்கு லீவ். உங்களுக்கும் லீவ் அஹ் இருந்தா வெளியே எங்கேயாவது போலாமேன்னு பார்த்தேன்” என்று ஆர்வத்துடன் கூற, தனது அலைபேசியை எடுத்தவள் அதில் சில எண்களை அழுத்தி விட்டு காத்திருந்தாள்.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், “நான் இன்னைக்கு ஸ்டேஷனுக்கு வர மாட்டேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டிக்க, ருத்ரா கீழ் உதட்டைக் கடித்து புன்னகைப் புரிந்தான். 

அபி அவனை ஏறிட்டுப் பார்க்க, “தேங்க்ஸ்.. ரெடி ஆகிட்டு வாங்க. நான் கீழே வெயிட் பண்றேன்” என்றவன் அறையில் இருந்து வெளியேற, அவளும் படுக்கையில் இருந்து எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.  

சிறிது நேரம் கழித்து அறைக் கதவு திறக்கப்பட, ஹாலில் அவளுக்காக ஆர்வத்துடன் காத்திருந்த ருத்ரா தலையை மட்டும் உயர்த்தி மாடியில் பார்வையைப் பதித்தான். 

புடவை அணிந்து வருவாள் என்று எதிர்ப்பார்த்து இருந்தவனின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக, அவள் இளஞ்சிவப்பு நிற முழுக்கைச் சட்டையும் காக்கி பேண்ட்டும் அணிந்து வர, அவனது முகம் மாறிப் போனது. 

வழக்கம் போல் வேகமாக படி இறங்கி அவன் அருகில் வந்தவள், “போலாமா?” என்று கேட்க, 

அதில் தன்னிலை அடைந்தவன் மீண்டும் தன் முகத்தில் புன்னகையைப் படர விட்டு ‘போலாம்’ என்பது போல் தலை அசைத்தான். 

அபி வாசலை நோக்கி திரும்ப, “அங்கிள்.. வாங்க போலாம்” என்று உள்பக்கம் திரும்பி குரல் கொடுத்தான் ருத்ரா. 

உடனே, “இதோ வந்துட்டேன் மாப்ள..” என்றவாறே அறையில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை, ஹாலில் மகளைக் கண்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார். 

அபி திரும்பி கணவரைப் பார்க்க, “அவரும் நம்மளோட தான் வர்றார்” என்றான். 

அவள் ஒன்றும் சொல்லாமல் முன்னால் சென்று வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவர்களது காரில் ஏறி அமர, ருத்ரா ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான். அண்ணாமலை பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ள, ருத்ரா மிதமான வேகத்தில் காரை இயக்கினான். 

போய் சேரும் வரை அபியும் எங்குச் செல்கிறோம் என்று கேட்கவில்லை.. இவனும் சொல்லவில்லை. 

கார் நேரே ஒரு திரையரங்கிற்குச் செல்ல, அபி திரும்பி கணவனைப் பார்த்தாள். “தலைவர் படம்ன்னா அங்கிள்க்கு ரொம்பப் பிடிக்கும்ன்னு சொன்னார். அதான் கூட்டிட்டு வந்தேன்..” என்று அவன் சொல்ல, அவள் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. 

ருத்ரா சென்று டிக்கெட் எடுத்து கொண்டு வர, மூவரும் சேர்ந்து திரையரங்கினுள் நுழைந்தார்கள். அண்ணாமலை சென்று முதலில் ஒரு இருக்கையில் அமர, அவர் அருகில் சென்று அமர்ந்தாள் அபி. 

அவள் அமர்ந்ததும் விருட்டென அண்ணாமலை எழுந்து கொள்ள, “என்னாச்சு அங்கிள்?” என்று கேட்டான் ருத்ரா. 

“எனக்கு அந்த சீட்டு சௌகரியப் படல. நீங்க அங்க உட்காருங்க மாப்ள. நான் அடுத்த சீட்ல உட்கார்ந்துக்கிறேன்” என்றவர் ஒரு சீட்டு விட்டு அடுத்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, ருத்ரா வந்து இருவருக்கும் இடையில் அமர்ந்தான். 

அபி லேசாக தலையைத் திருப்பி தந்தையைக் குறுகுறுவெனப் பார்க்க, அவர் இவளது பார்வையை அலட்சியம் செய்து விட்டு திரையை நோக்கினார். 

தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பனிப் போரை முதற் முறையாகக் கண்ட ருத்ரா, டென்ஷனாக நெற்றியை நீவி விட்டு கொள்ள, “என்ன மாப்ள தலைவலிக்குதா?” என்று அக்கறையாகக் கேட்டார் அண்ணாமலை. 

“இல்ல அங்கிள்..” என்று தயக்கமாகச் சொன்னவன் முன்னே திரும்பி திரையை நோக்க, அபி ஒருபக்கமாக தலையைச் சாய்த்து தந்தையை நோக்கி புருவத்தை உயர்த்தினாள். மகளின் பார்வையைக் கண்டவர், கோபமாக தலையைத் திருப்பிக் கொண்டார்.  


No comments

Powered by Blogger.