தீராக் காதல் - 11

 


திரையரங்கில் இருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு திரைப்படம் திரையிடப்பட்டது. அண்ணாமலையும் ருத்ராவும் அமைதியாக திரைப்படத்தை ஆழ்ந்துப் பார்க்க, அபி வேண்டா வெறுப்பாகத் தான் இருக்கையில் அமர்ந்து இருந்தாள். இடைவெளியில் ருத்ரா பாத்ரூமிற்குச் செல்வதாகச் சொல்லி விட்டுச் செல்ல, அபி தந்தையைப் பார்த்துப் பேசினாள். 

“அப்பா..” என்றழைக்க, அவர் அவளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. 

“அப்பா நான் உங்களைத் தான் கூப்பிடுறேன்” 

“எங்கிட்ட யாரும் பேசத் தேவையில்லை” என அவர் முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விட,

“ரொம்ப ஓவரா பண்றப்பா நீ?” அபி ஒற்றை விரலை நீட்டி தந்தையை எச்சரித்தாள். 

மகளின் மிரட்டலுக்கும் அதட்டலுக்கும் பயப்படாதவர், “ஏம்பா.. கூல்ரிங்க்ஸ் எல்லாம் நல்லா ஜில்லுன்னு இருக்கா? என் மாப்ளைக்கு ஜில்லுன்னு இருந்தா தான் பிடிக்கும்” என்றார்.

அதைக் கேட்டு அபி கடுப்பாக, “ஆன்.. பாதாம் பால் ஒன்னு கொடு” என்று விற்பனையாளரிடம் கேட்டு வாங்கினார் அண்ணாமலை.

அப்போது அங்கே வந்த ருத்ரா அவரது கையில் இருந்த உணவு பொருட்களைப் பார்த்து விட்டு, “என்ன அங்கிள்.. எல்லாமே இரண்டு இரண்டா தான் இருக்கு” என்று கேட்க, 

“ஆமா.. மாப்ள.. ஒன்னு உங்களுக்கு.. இன்னொன்னு எனக்கு..” என்றார் அண்ணாமலை. 

அபி தந்தையை உக்கிரமாக முறைத்துப் பார்ப்பதைக் கண்ட ருத்ரா அவளைக் கைக்காட்டி, “அபிக்கு?” என்று வினவ, 

“யாருக்கு வேணுமோ அவங்களையே போய் காசு கொடுத்து வாங்கிக்கச் சொல்லுங்க மாப்ள. சுவர் எகிறி குதிச்சிப் போய் மிஷன் பண்ண தெரியுறவங்களுக்கு, இந்தா இருக்குற கடையில பாப் கான் வாங்கிக்க தெரியாதா?” என்று அலட்சியமாகச் சொல்லி விட்டுச் சென்றார். 

அபி செல்லும் தந்தையின் முதுகை கோபமாகப் பார்த்துக் கொண்டு இருக்க, அவள் முன்பு ஒரு பாப் கான்-ஐயும் ஐஸ் வாட்டரையும் நீட்டினான் ருத்ரா. 

அவள் அவனை ஏறிட்டுப் பார்க்க, “அங்கிள் பேசுறதை எல்லாம் மனசுல வச்சிக்காதீங்க. பர்ஸ்ட் டைம் வெளியே வந்துருக்கோம். சண்டை போட வேணாமே.. ப்ளீஸ்..” என்றான் கெஞ்சலாக. 

கணவனின் மனதைக் காயப்படுத்த விரும்பாத அபி, அவன் நீட்டியவற்றை வாங்கிக் கொண்டு மீண்டும் திரையரங்கினுள் நுழைந்தாள். மீதி படத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது அபியின் அலைபேசி தொடர்ந்து சிணுங்கிக் கொண்டே இருந்தது. 

படம் ஆரம்பிக்கும் போதே அலைபேசியை சைலண்ட்டில் போட்டு இருந்ததால், அவள் அதைக் கவனிக்கவே இல்லை. படம் முடிந்து வெளியே வந்தப் பிறகு, அண்ணாமலை பாத்ரூமிற்குச் செல்ல ருத்ரா அங்கேயே நின்று விட்டான். 

“நான் காரை பார்க்கிங்ல இருந்து எடுத்துட்டு வரேன்” என்ற அபி ருத்ராவின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் சென்று விட, இதழ் குவித்து ஊஃப் என பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட ருத்ரா தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டான். 

திரையரங்கின் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்குச் சென்று காரை வெளியே எடுத்து வந்து சாலையில் நிறுத்திய அபி, தந்தையும் கணவரும் வருவதற்காக காரின் உள்ளேயே காத்திருந்தாள். 

திடீரென அங்கே யாரோ துப்பாக்கியால்  சுடும் சத்தம் கேட்ட பொதுமக்கள் இங்கும் அங்குமாக அலறி அடித்துக் கொண்டு ஓட, ருத்ராவும் அண்ணாமலையும் கூட்டத்தினுள் சிக்கிக் கொண்டார்கள். 

அபி அமர்ந்து இருந்த காரின் கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு உள்ளே பாய்ந்து இருந்ததைக் கண்டு ருத்ராவும் அண்ணாமலையும் அதிர்ச்சியில் உறைந்து போக, மேலும் சரமாரியாக குண்டுகள் முழங்கின. 

அதில் கார் கண்ணாடிகள் சில்லு சில்லாக உடைந்து நொறுங்க, “அபி..” என நடுங்கும் குரலில் அழைத்த அண்ணாமலை அப்படியே மயங்கி விழுந்தார்.

அவரைத் தன் கைகளில் தாங்கிக் கொண்ட ருத்ரா, “அங்கிள்..” என்றபடியே அவரது கன்னத்தைத் தட்ட, அண்ணாமலை கண்களைத் திறக்கவே இல்லை. 

அதே நேரம் துப்பாக்கிச் சுடுவது நின்று போக, ருத்ரா திரும்பிப் பார்த்தான். சாலையின் எதிரே நின்று இருந்த காரில் வந்தவர்கள் தான் அபியைக் குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்க, ருத்ராவின் கண்கள் கண்ணீரை வெளியேற்றின. 

“டேய்.. நீ போய் அவ இன்னும் உயிரோட இருக்காளான்னு பார்த்துட்டு வாடா?” என்று காரில் இருந்த ஒருவன் சொல்ல, பின்னிருக்கையில் அமர்ந்து இருந்தவன் கதவைத் திறந்து கொண்டு இறங்கிச் சென்றான். 

தெனாவட்டாக நடந்து வந்து அபியின் கார் கதவைத் திறந்துப் பார்க்க, அபி இருக்கையில் அசைவின்றி படுத்து இருந்தாள். அவளின் மேற்புறம் கண்ணாடி சில்லுகள் சிதறல்களாக இருப்பதைக் கண்டவனின் இதழ்கள் புன்னகைக்க, படாரென விழிகளைத் திறந்தாள் அபி.

அதைக் கண்டு அவன் அதிர்ச்சியில் உறைய, அபி அதிரடியாக அவனின் வலது தோள்ப்பட்டையில் சுட்டு விட்டாள். அதில் அவன் நான்கடி பின்னால் சென்று விழ, மற்றவர்கள் அதிர்ந்துப் போனார்கள். 

அத்துடன் தன் கூட்டத்தைப் பார்த்தவனோ, “அண்ணா.. அவ சாகலண்ணா.. உயிரோட தான் இருக்கா..” என்று கத்த, காரின் கதவை காலால் திறந்து கொண்டு வெளியே வந்த அபி தனது துப்பாக்கியால் அவர்களைக் குறி வைத்தாள். 

குண்டு அடிப்பட்டவன் தட்டுத்தடுமாறி வந்து காரில் ஏறிக் கொள்ள, அக்கூட்டத்தின் தலைவன் பயத்துடன் அபியின் கண்களைப் பார்த்துக் கொண்டே, “வண்டியை எடுடா..” என்றான். 

வந்த வேகத்திலேயே காரும் புறப்பட்டுச் சென்று விட, அவர்கள் பின்னே போக எத்தனித்த அபியின் காதில் ருத்ராவின் கதறல் கேட்கவும் அப்படியே நின்று திரும்பிப் பார்த்தாள். 

திரையரங்கின் வாசலில் தந்தை சுயநினைவின்றி கிடக்க, கணவன் அவரைத் தன் மடியில் தாங்கி இருப்பதைக் கண்ட அபி உடனே சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினாள். 

ருத்ரா அண்ணாமலையைத் தூக்கிக் கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்ற, மருத்துவமனையை நோக்கி ஆட்டோ விரைந்தது. 

அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அண்ணாமலைக்கு நிறைய பரிசோதனைகள் நடக்க, அபி சிகிச்சை அறையின் வாசலில் கலங்கிச் சிவந்த கண்களுடன் இறுக்கமாக நின்று இருந்தாள். 

அவளிடம் வந்த ருத்ரா, “சாதாரண மயக்கம் தானே.. அதுக்கு எதுக்கு இவ்ளோ டெஸ்ட் எடுக்குறாங்க?” என்று வினவ, 

“அப்பா ஒரு ஹார்ட் பேஷண்ட்” என்று அவனைப் பார்க்காமலேயே கூறினாள் அபி. 

ஆம்.. அண்ணாமலைக்கு இதயம் பலவீனமாக இருப்பதால், அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அபியிடம் அறிவுறுத்தி இருந்தார்கள்.  

அப்போது அறையில் இருந்து வெளியே வந்த மருத்துவரை அபி தவிப்புடன் நோக்க, “கன் ஷூட் நடந்ததுல ரொம்ப பயந்து போய் இருக்கார்” என்றார். 

“அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுல்ல டாக்டர்” அபி படபடக்கும் மனதுடன் மருத்துவரைப் பார்த்து கேட்க,

“நாங்க கொடுக்குற எந்த சிகிச்சைக்கும் அவர் உடம்பு ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்குது. முதல்ல அவரை அந்த பயத்துல இருந்து வெளியே கொண்டு வரனும்” என்றார்.  

அபி புரியாமல் விழிக்க, “அவர் உங்களுக்கு என்னமோ ஆச்சுன்னு தான் பயந்துட்டு இருக்கார். நீங்க உள்ளே போய் அவர்க்கிட்ட பேசுங்க..” என்றான் ருத்ரா. 

அபி மருத்துவரை ஏறிட்டுப் பார்க்க, அவரும் ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தார். 

உடனே அபி அவசரச் சிகிச்சை அறைக்குள் நுழைய, செயற்கைச் சுவாசங்களுக்கு இடையில் சுயநினைவின்றி கிடந்த தந்தையைக் கண்டு அவளது கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்த்தன. 

மெல்ல அடியெடுத்து வைத்து அண்ணாமலையின் அருகே வந்து நின்றவள், அவரின் கையைப் பிடித்துக் கொண்டு “அப்பா..” என்றழைத்தாள் கண்ணீருடன். அவரின் உடலில் எந்த மாற்றமும் இல்லை. 

“அப்பா.. அபி வந்து இருக்கேன்ப்பா.. உங்க அபிம்மா வந்து இருக்கேன். கண்ணைத் திறந்து என்னைப் பாருப்பா.. நீயும் என்னை விட்டுட்டு போயிட்டா, என்னால.. என்னால.. தாங்க முடியாதுப்பா..” என்று அவள் கதறி அழ, 

மெதுவாகக் கண்ணைத் திறந்து மகளைப் பார்த்த அண்ணாமலை, “அ..அபிம்மா..” என்றழைத்தார் தடுமாற்றமாக.    

உடனே அழுகையை நிறுத்தி விட்டு தந்தையின் முகத்தைப் பார்த்த அபி, அவரின் கன்னத்தைப் பற்றிக் கொண்டு “அப்பா..” என்றழைக்க, 

“உனக்கு.. உனக்கு எதுவும்..” என்றவரின் பேச்சு பாதிலேயே நின்று போனது. 

அவர் அந்த துப்பாக்கிச் சூட்டைப் பற்றி தான் கேட்க வருகிறார் என்பதை உணர்ந்த அபி, “எனக்கு ஒன்னும் இல்லப்பா. நான் நல்லா தான் இருக்கேன். பாருங்க..” என்றவள் உடனே இரண்டடி தள்ளிச் சென்று முன்னும் பின்னுமாக தன்னைச் சுற்றிக் காட்டினாள்.  

மகளுக்கு ஒன்றும் ஆகவில்லை, அவள் நன்றாகத் தான் இருக்கிறாள் என்பதை கண்ணில் கண்டப் பின்பு தான் அண்ணாமலையின் மூச்சு சீராக, அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் “நவ் ஓகே.. இன்னைக்கு ஒரு நாள் அப்சர்வேஷன்ல இருக்கனும்” என்று விட்டுச் சென்றார். 

அன்று முழுவதும் அபியும் ருத்ராவும் அண்ணாமலையின் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டார்கள். அடுத்த நாள் தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த அபி, வேலைக்குக் கூட செல்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டாள். 

அபி, ருத்ரா, அண்ணாமலை மூவரும் ஹாலில் அமர்ந்து இருந்த நேரம் அவளின் அலைபேசி அலற, அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், “ஹலோ” என்றாள். 

“மேடம்.. நான் நேத்துல இருந்து உங்களை ரீச் பண்ண ட்ரை பண்ணேன். ஆனா முடியல..”

“ஏன்? என்னாச்சு?” என்று அவள் கேட்க,  

“ராஜா நேத்து ஜெயில்ல இருந்து தப்பிச்சிட்டான் மேடம். அதைச் சொல்ல தான் நேத்து உங்களுக்கு ஃபோன் ட்ரை பண்ணேன். ஆனா நீங்க எடுக்கவே இல்லை” என்றார் சிறைச்சாலை காவல் அதிகாரி.

மேலும் அவரே தொடந்து, “நேத்து உங்க மேல நடந்த ஷுட் அவுட் கூட அவனோட வேலையா தான் இருக்கும் மேடம்” என்று சொல்ல, அதற்கு எந்த விதமான பதிலும் சொல்லாமல் அழைப்பைப் பட்டென்று துண்டித்து விட்ட அபி விறுவிறுவென நடந்துச் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்து நியூஸ் சேனலை வைத்தாள். 

அதில் ‘பிரபல ரவுடி ராஜா நேற்று சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட்டம்’ என்று தலைப்புச் செய்தி வர, ருத்ராவும் அண்ணாமலையும் அதிர்ந்து போய் அபியைப் பார்த்தார்கள். 

அடுத்த கணமே, உயர் அதிகாரியிடமிருந்து அபிக்கு ஒரு அழைப்பு வர, அதை ஏற்றவள் அலைபேசியைக் காதில் வைத்து, “சார்..” என்றாள் உள்ளே போனக் குரலில். 

“அபி.. நேத்து சினிமா தியேட்டர் வாசல்ல கன் ஷுட் நடந்துச்சுல்ல, அதைப் பத்தின விசாரணை தான் போயிட்டு இருக்கு. உடனே கிளம்பி கமிஷனர் ஆபீஸ்க்கு வா” என்றவர் பட்டென்று அழைப்பைத் துண்டித்து விட, அவள் தவிப்புடன் அலைபேசியை பாக்கெட்டில் வைத்து விட்டு தந்தையை நோக்கினாள். 

அவளின் தவிப்பை உணர்ந்த ருத்ரா, “நீங்க போங்க.. நான் அங்கிளை பார்த்துக்கிறேன்” என்று சொல்ல, அபியும் உடனே கிளம்பி கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றாள். 

நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்து விட்டதால், உயர் அதிகாரிகள் அபியை பதிலே சொல்ல விடாமல் சரமாரியாகக் கேள்விக் கேட்டு கடுமையாகச் சாடினார்கள்.

மாலையில் தளர்ந்த நடையுடன் அபி வீட்டிற்கு வர, ருத்ரா தான் அவளிடம் சென்று “என்னாச்சு?” என்று கேட்டான். 

அவள் எதுவும் சொல்லாமல் ஒரு கவரை அவனிடம் நீட்ட, அதை வாங்கிப் படித்துப் பார்த்தவன், “என்னதிது? நேத்து நடந்த ஷுட் அவுட்க்கும் உங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லைன்னு அவங்களுக்குத் தெரியாதா? எதுக்காக உங்களை டார்கெட் பண்ணி ஒரு மாசம் சஸ்பென்ஷன் இஸ்ஸு பண்ணி இருக்காங்க?” என்று கோபமாகக் கேட்டான். 

“அந்த இடத்துல நான் இருந்தும் பொதுமக்கள் இரண்டு பேரை இறந்து போக விட்டுட்டேனாம். அதுக்காக என் மேல நடவடிக்கை எடுத்து இருக்காங்க” என்று அவள் சொல்ல, 

“வாட் நான்சென்ஸ்..” என்று பல்லைக் கடித்தான் ருத்ரா. 

“இதுக்குத் தான் அந்த வேலையே வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்.. கேட்டாளா இவ..” என்று அண்ணாமலையும் தன் பங்கிற்கு புலம்ப, அபி ஒன்றும் சொல்லாமல் அவளது அறைக்குச் சென்றாள். 

“என்ன அங்கிள்.. அவங்களே வேலை போயிடுச்சுன்னு மனசு கஷ்டத்துல இருக்காங்க.. இப்போ போய் இதையெல்லாம் சொல்லிக் காட்டணுமா?” என்று மனைவிக்குப் பரிந்து கொண்டு அவன் பேச, கணவனது பேச்சு காதில் விழுந்தும் விழாதது போல் அறைக்குச் சென்று அறைக் கதவை படாரென்று அடித்துச் சாற்றியவள் அதன் மீது சாய்ந்து நின்றாள்.  

பழைய நினைவுகள் எல்லாம் அவளது மனக்கண்ணில் ஊர்வலம் போக, நொடி நேரத்தில் கண்கள் ஆத்திரத்தில் சிவந்துப் போனது. கட்டுக்கடங்காத கோபத்துடன் அறையில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைக்க, ருத்ரா பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி மாடிக்குச் சென்றான். 

“அபி.. என்னங்க ஆச்சு? கதவைத் திறங்க?” அவன் தவிப்புடன் கதவை வேகமாகத் தட்ட, 

மேலும் சில பொருட்களைத் தூக்கிப் போட்டு உடைத்தவள், “ஆஆஆ..” என பெருங்குரல் எடுத்து கத்தினாள்.


No comments

Powered by Blogger.