தீராக் காதல் - 12
இரண்டு நாள் முழுக்க அறையிலேயே அடைந்து கிடந்த அபியை, அவளின் மனநிலையை உணர்ந்து யாரும் எந்த தொந்தரவும் செய்யவில்லை. ருத்ரா அலுவலகத்திற்குச் செல்லாமல் விடுப்பு எடுத்துக் கொண்டு தான் மனைவியையும் மாமனாரையும் பார்த்துக் கொண்டான்.
காலை பத்து மணி அளவில் ருத்ராவிற்கு அலுவலகத்திற்கு அழைப்பு வர, அவன் யோசனையில் ஆழ்ந்தான். “என்ன மாப்ள.. யாரு?” என்று அண்ணாமலை கேட்க,
“ஆபீஸ்ல இருந்து தான் அங்கிள். தொடர்ந்து 3 நாள் வேலைக்குப் போகலைல்ல, அதான் ஃபோன் பண்ணி எப்போ வருவேன்னு கேட்டுட்டே இருக்காங்க” என்றான்.
அவன் பேசியது அபியின் காதிலும் விழ, அறையில் இருந்து வெளியே வந்து நின்று கீழே கணவனுக்கும் மாமனாருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களைக் கவனித்தாள்.
“இல்ல அங்கிள்.. உங்களுக்கும் உடம்புக்கு முடியல. அபியும் சஸ்பெண்ட் ஆனதுல மனசு சரியில்லாம இருக்காங்க.. இந்த நிலைமையில உங்க இரண்டு பேரையும் நான் எப்படி தனியா விட்டுட்டுப் போறது?” ருத்ரா தயக்கமாகக் கூற,
“எனக்கு ஒன்னும் இல்ல மாப்ள.. நான் நல்லா தான் இருக்கேன். அபியையும் நானே பார்த்துக்கிறேன். நீங்க ஆபீஸ்க்குக் கிளம்பிப் போங்க” என்றார்.
அப்போதும் ருத்ரா தயங்க, அண்ணாமலை வற்புறுத்தி அவனை வேலைக்கு அனுப்பினார். அவன் போனப் பின்பு அண்ணாமலை சமையலறைக்குச் சென்று தனியாக சமையல் வேலையைப் பார்க்க, வீட்டின் காலிங்பெல் அடித்தது.
“இந்த நேரத்துல யாரு? ஒருவேளை மாப்ள தான் திரும்ப வந்துட்டாரோ?” என எண்ணிக் கொண்டே அவர் கதவைத் திறக்கப் போக, அபி வந்து கதவைத் திறந்தாள்.
வெளியே ஒரு உணவு டெலிவரி மேன் நின்று இருக்க, “மேடம் உங்க பார்சல்” என்றபடியே ஒரு பார்சலை நீட்டினான். அதனை வாங்கிக் கொண்ட அபி கதவைச் சாற்றி விட்டுத் திரும்ப, அண்ணாமலை அவளையே குறுகுறுவெனப் பார்த்தார்.
“நீங்க தனியா எல்லாம் கஷ்டப்பட வேணாம். சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டேன். வாங்க சாப்பிடலாம்”
இரண்டு நாளா வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசாதவள், சாப்பிட அழைக்கவும் அவரும் அமைதியாகச் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தார்.
இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் அபியே இருவரின் தட்டையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்று கழுவி வைத்து விட்டு வந்தாள்.
பின்பு, அண்ணாமலை மதியம் போட வேண்டிய மாத்திரைகளை எடுத்து வந்து கொடுத்தவள், தண்ணீரையும் ஒரு டம்பளரில் ஊற்றிக் அவரிடம் கொடுத்தாள்.
அவர் மாத்திரை போடாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க, “என்னப்பா” என்று கேட்டாள் புரியாதப் பார்வையுடன்.
“இப்படி உட்கார் அபிம்மா.. எனக்கு உன் கூட கொஞ்சம் பேசனும்” என்று அவர் சொல்ல, அவளும் அவரின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“ஒரு அப்பாவா நான் உனக்கு எதாவது குறை வச்சி இருக்கேனா?” என்று கேட்க,
“ப்ச்.. அப்பா ப்ளீஸ், எதுனாலும் நேரடியா சொல்லுங்க. இப்படி சுத்தி வளைக்காதீங்க” என்றாள்.
“சரி.. நேரடியாவே கேட்கிறேன். நீயும் மாப்ளையும் எப்போ உங்க வாழ்க்கையை வாழுறதா இருக்கீங்க?”
அவ்வாறு அவர் கேட்கவும் அபிக்கு ஒரு நிமிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறித் தான் போனாள்.
“அ..அது.. வந்துப்பா..”
“எங்கிட்ட சமாளிக்கப் பார்க்காதே அபிம்மா” என்று அவர் கடுமையாகச் சொல்ல, அவள் அமைதியாகத் தலை குனிந்து விட்டாள்.
“கல்யாணம் ஆகியும் நீ அவரைக் கண்டுக்காம வேலை வேலைன்னு ஓடுறதைப் பத்தி அவர் ஒரு வார்த்தை கூட எங்கிட்ட கேட்டதில்லை. இதே அவர் இடத்துல வேற ஒருத்தர் இருந்திருந்தா இந்நேரம் என்னென்ன எல்லாம் பேசி இருப்பாங்க தெரியுமா?” என்று கேட்க, அபி பதில் பேசவில்லை.
“மாப்ள ரொம்ப நல்லவர் அபிம்மா. நீ கல்யாணம் ஆன கையோட கோவில்ல இருந்து போனப்போ கூட, ‘அது அவங்க வேலை அங்கிள். கூப்பிட்டா உடனே போய் தான் ஆகனும்’ன்னு புரிதலோட சொன்னார். அவருக்கு இருக்குற அந்தப் புரிதல் உனக்கு இருக்கா?” என்று கேட்க, அவள் நிமிர்ந்து தந்தையைப் பார்த்தாள்.
“நம்மைப் புரிஞ்சிக்கிற ஒரு உறவு நம்ம வாழ்க்கையில அமையுறது எல்லாம் வரம் அபிம்மா. நீ படிச்சவ. நான் எதைப் பத்தி பேசுறேன்னு உனக்கே நல்லா புரிஞ்சி இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்றவர் மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு எழுந்துச் சென்றார்.
அவர் போனப் பின்பும் அபி அசையாமல் ஹால் சோஃபாவில் யோசனையோடு அமர்ந்து இருந்தாள். தனது அறைக்கு வந்த அண்ணாமலை சுவரில் இருந்த மனைவியின் புகைப்படத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கண் கலங்கினார்.
அவரது உடல்நிலையைப் பற்றி அவருக்கு முன்பே தெரிந்ததால் தான் மகளைத் திருமணத்திற்கே வற்புறுத்தினார். இப்போதும் அவளது வாழ்வைச் சீராக்கவே முயல்கிறார்.
தந்தையின் ஆசைக்காக கணவனோடு இணக்கமாக இருப்பது போல் வெளியே காட்டிக் கொள்ள நினைத்த அபி, மாலையில் கணவனின் வருகைக்காக ஹாலிலேயே காத்திருந்தாள். வேலை முடிந்து களைப்பாக வீட்டிற்கு வந்த ருத்ரா, தலையைப் பிடித்துக் கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்து விட்டான்.
அவளுக்குத் திடீரென கணவனிடம் தானாகச் சென்று பேச ஒரு வித தயக்கம் வந்து தடுக்க, ஒரு நொடி அவனைப் பார்ப்பதும் அடுத்த நொடி தொலைக்காட்சியைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
பைக் சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை, ஹாலில் தலையைப் பிடித்தபடி அமர்ந்து இருந்த ருத்ராவைப் பார்த்தார். அவனருகே வந்து அமர்ந்தவர், “என்ன மாப்ள.. தலைவலிக்குதா?” என்று அக்கறையாகக் கேட்டார்.
“ஆமா அங்கிள்.. ஒரே நாளில்ல எல்லா வேலையும் என் தலையில கட்டிட்டானுங்க” என்றவனின் குரலில் அதீத களைப்புத் தெரிய,
“சரி.. நீங்க ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க மாப்ள. நான் உங்களுக்கு டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்றார்.
“இல்ல அங்கிள்.. வேணாம்.. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நான் ரிஃப்ரெஷ் ஆகிட்டு வந்து பார்த்துக்கிறேன்” என்றவன் இருக்கையில் இருந்து எழுந்து அவர்களது அறையை நோக்கிச் செல்ல, அபி வேகமாக சமையலறைக்கு ஓடினாள்.
மகள் எழுந்து ஓடுவதைப் புருவம் சுருக்கிப் பார்த்த அண்ணாமலை மெதுவாக எழுந்து சென்று சமையலறை வாசலில் நின்று எட்டிப் பார்த்தார். அபி குளிர்சாதனப் பெட்டியில் எதையோ தேடிக் கொண்டிருக்க, “என்னம்மா தேடுற?” என்று கேட்டார் அண்ணாமலை.
“பால் இல்லையாப்பா?” என அவரைத் திரும்பிப் பார்க்காமலேயே அவள் கேட்க,
“அதை எதுக்கும்மா நீ கேட்குற?” என்று கேட்டபடியே மகளருகே வந்து நின்றார் அண்ணாமலை.
“அது.. அ..அவருக்கு.. தலைவலிக்குதுன்னு சொன்னார் இல்ல.. அவருக்கு டீ போட்டு கொடுக்கத் தான்..” அவள் வராத வெட்கத்தை கஷ்டப்பட்டு வரவழைத்து கூற, அவளது செய்கையைக் கண்டு அவருக்கே சிரிப்பு வந்து விட்டது.
அதனை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டவர் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பால் பாத்திரத்தை எடுத்து அவளது கையில் கொடுக்க, அசடு வழியும் சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள் அபி.
“உனக்கு டீ போடுறது எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கா? இல்ல, நான் சொல்லி தரவா?” என்று அவர் கிண்டலாக இருக்க,
“அப்பாஅஅஅ..” என்றவாறே தந்தையைச் செல்லமாக முறைத்தவள், “அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு. நீங்க போங்க..” என்று விட்டு அடுப்பைப் பற்ற வைத்து அதில் பால் பாத்திரத்தை வைத்தாள்.
“சரி சரி.. நான் போறேன்.. சர்க்கரை எது.. உப்பு எதுன்னாவது பார்த்து போடும்மா.. மாப்ள பாவம்..”
போகிற போக்கில் அவர் சொல்லி விட்டு போக, இங்கே அபிக்கு நிஜமாகவே வெட்கம் வந்து விட்டது.
அறைக்குச் சென்ற ருத்ரா குளித்து முடித்து விட்டு லோயரும் டீசர்டும் அணிந்து கொண்டு மாடிப்படியில் வேகமாக இறங்கி வந்தான். அவன் வருவதைக் கண்ட அபி, தேநீர் கப் உடன் அவன் முன்பு சென்று நிற்க, அவனது விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
அண்ணாமலையும் ஹாலிலேயே அமர்ந்து இருக்க, தந்தையை ஓரக்கண்ணால் பார்த்தவள், “என்ன அப்படிப் பார்க்கிறீங்க? டீ எடுத்துக்கோங்க” என்றாள்.
அது இன்னுமே அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்த, “எனக்கா?” என்று கேட்டான்.
“ம்.. உங்களுக்குத் தான்..” என்றாள்.
“நீங்க போட்டதா?”
“ஆமா.. நான் தான் போட்டேன்”
“உங்களுக்கு டீ போட எல்லாம் கூட தெரியுமா?”
அவன் பட்டென்று கேட்டு விட, அண்ணாமலைக்கு அதற்கு மேல் சிரிப்பை அடக்கி வைக்க முடியவில்லை. வாய் விட்டு சத்தமாகச் சிரித்து விட்டார்.
“ஹாஹா.. மாப்ள.. அவளுக்கு டீ, காபி மட்டும் தான் போடத் தெரியும். அதுக்கு மேல சமையல்ல ஒன்னும் தெரியாது” என்று சிரிப்பின் ஊடே அவர் போட்டு கொடுக்க,
“அப்பாஅஅஅ..” என சிணுங்கினாள் அபி..
முதல் முறையாக அவள் குழந்தைப் போல் சிணுங்குவதை ரசித்துப் பார்த்த ருத்ரா, அவள் நீட்டிய தேநீர் கப்பை கையில் எடுத்துக் கொண்டு அண்ணாமலையின் அருகில் சென்று அமர்ந்து குடித்தான்.
அவனது பார்வை தன் மேல் ரசனையாகப் படிவதை உணர்ந்த அபிக்கு உள்ளுக்குள் என்னவோ போல் இருக்க, அங்கே நிற்க முடியாமல் அறைக்குச் சென்று விட்டாள்.
********
மறுநாள் காலையில் அபி ஹால் சோஃபாவில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளை வாசித்துக் கொண்டே ருத்ரா போட்டு கொடுத்த காபியை நன்றாக சுவைத்துப் பருகிக் கொண்டு இருக்க, அவன் தனியாக சமையல் அறையில் சமைத்துக் கொண்டு இருந்தான்.
அதனை தனது அறையில் இருந்து வெளியே வந்துப் பார்த்த அண்ணாமலை மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு மகளின் அருகே வந்து அமர்ந்தார்.
“குட் மார்னிங்ப்பா” என்றவள் தந்தையை பார்க்காமல் செய்தித்தாளில் மும்முரமாக இருக்க,
“ம்.. டீ நல்லா இருக்கா?” என்று நக்கல் குரலில் கேட்டார்.
“டீ இல்லப்பா.. காபி..”
“ஓ.. மாப்ள போட்டு கொடுத்தாரா?”
“ம்.. ஆமாப்பா..” என்று அவள் சொல்ல,
“அங்க மாப்ள தனியா சமையல் ரூம்ல கஷ்டப்பட்டுனு இருக்கார். இங்க நீ ஜாலியா அவர் போட்டு கொடுத்த காபியை ரசிச்சி குடிச்சிக்கிட்டே நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருக்க” என்று கூறி ஆத்திரத்தில் பற்களை நறநறவெனக் கடித்தார்.
அபி அசடு வழிந்து கொண்டே தந்தையை ஏறிட்டு பார்க்க, “யாரு பொண்டாட்டி.. யாரு புருஷன்னே தெரியல..” என்றார் நக்கலாக.
“இப்போ என்னை என்ன தான் செய்ய சொல்றீங்க?” அவள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்க,
“போ.. போய் மாப்ளைக்கு கூட மாட ஒத்தாசையா இரு” என்று சொல்லவும் அவள் சிணுங்கி கொண்டே எழுந்து சென்றாள்.
சமையல் அறை வாசலில் நிழல் ஆடுவதைக் கண்ட ருத்ரா திரும்பிப் பார்க்க, அபி தான் தயக்கத்துடன் நின்று இருந்தாள். அவள் அடுப்பில் இருந்த பாத்திரத்தை எட்டிப் பார்க்க, அவன் “எதாவது வேணுமா?” என்று கேட்டான்.
அதற்கு ‘இல்லை’ என்பது போல் தலை அசைத்தவள், “நான் உங்களுக்கு எதாவது ஹெல்ஃப் பண்ணவா?” என்று மெல்லியக் குரலில் கேட்டாள்.
அப்படி கேட்டவளை அவன் ஆச்சரியத்துடன் பார்க்க, அவள் பின்னால் திரும்பி தந்தையை ஒரு பார்வைப் பார்த்தாள்.
அதிலேயே மாமனார் தான் அவளை அதட்டி தன்னிடம் அனுப்பி வைத்து இருக்கிறார் என்று உணர்ந்தவனின் இதழ்கள் புன்னகையில் விரிய, “வெங்காயம் வெட்டிக் கொடு” என்றான்.
கூடையில் இருந்த வெங்காயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து காய்கறி வெட்டும் கட்டையின் மீது வைத்தவள், வெட்டு கத்தியால் ஓங்கி குத்தப் போக, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பாய்ந்து வந்து அவளது கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.
“என்ன பண்ற நீ?” என்று கேட்டவனைப் புரியாமல் பார்த்தவள்,
“நீங்க தானே வெங்காயம் கட் பண்ண சொன்னீங்க” என்று கேட்டாள்.
“அதுக்குன்னு இப்படியா தோலோட கட் பண்ணுவாங்க” என்றவன் அவனே வெங்காயத்தின் தோலை உறித்து பொடியாக நறுக்கி எடுத்துக் கொண்டான்.
அதனை வாணாலியில் காய்ந்து கொண்டிருந்த எண்ணெயில் போட்டவன், “அந்த கத்தரிக்காயை எடுத்து வெட்டிக் கொடு” என்று அவளிடம் சொல்லி விட்டு வெங்காயத்தை வதக்க, அவள் கத்தரிக்காயை பாதியாக வெட்டி விட்டாள்.
“அப்படி இல்ல” என்றவன் அவளின் பின்னால் வந்து நின்று அவளின் கையைப் பிடித்து கத்தரிக்காயை நறுக்கியபடி “சாம்பாருக்கு இப்படித் தான் கத்தரிக்காயை நறுக்கனும்” என்று சொல்ல, அவனது சூடான மூச்சுக் காற்று அவளது செவியைத் தீண்டிச் சென்றது.
அத்துடன் பட்டும் படாமல் நின்று இருந்த கணவனின் நெருக்கம் அபியை என்னவோ செய்ய, மெல்ல தலையை உயர்த்தி பின்னால் நின்று இருந்த கணவனை ஏறிட்டு நோக்கினாள். இருவரின் பார்வையும் வெகு அருகில் சந்தித்துக் கொள்ள, அந்த நொடி அப்படியே உறைந்துப் போனது.
அப்போது மெல்ல சமையல் அறையை எட்டிப் பார்த்த அண்ணாமலை, மகளும் மருமகனும் இருக்கும் நிலையைப் பார்த்து விட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே திரும்பிச் சென்று விட்டார்.
பின்னர், குக்கர் விசில் சத்தத்தில் சுயநினைவு அடைந்தவர்கள் சட்டென விலகிக் கொள்ள, அபியின் முகம் நாணத்தில் சிவந்துப் போனது.
“ஹே.. உனக்கு வெட்கப்பட எல்லாம் கூட தெரியுமா?” அவன் கிண்டலாகச் சிரிக்க, இன்னும் அதிகமாக சிவந்த முகத்தை அவனுக்குக் காட்டாமல் மறைப்பதற்காக அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள் அபி.
இப்படி அவ்வப்போது நடக்கும் செல்லச் சீண்டல்கள், தீண்டல்கள் மூலம் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் உண்டானது. அபிக்கு அவனுடன் இருக்கும் நேரங்கள் இனிமையாகவும், அவன் இல்லா நேரங்கள் வெறுமையாகவும் செல்ல, மனதிற்குள் அவனுக்காக ஏங்க தொடங்கினாள்.
ஒருநாள் தனது அறையில் இருந்த அபி பைக் ஹார்ன் சத்தம் கேட்டதுமே, கணவன் தான் வந்து விட்டான் என்று நினைத்து ஆவலுடன் ஓடி வந்து வாசல் கதவைத் திறந்துப் பார்த்தப் போது தான் அவள் தன் மனதையே அறிந்தாள்.
வாசலில் யாருமே இல்லை. வேறு யாரோ போகும் போது ஹார்ன் அடித்து விட்டுச் சென்று இருக்க, இவள் கணவன் தான் வந்து விட்டான் என்று நினைத்து ஓடி வந்து கதவைத் திறந்து விட்டாள்.
கணவனின் நினைவு தன்னை எந்தளவிற்கு பாதித்து இருக்கிறது என்பதை முழுதாக உணர்ந்தவள், நாணத்தில் சிவந்த முகத்துடன் கதவை மூடி விட்டு வீட்டினுள் சென்றாள்.
Post a Comment