தீராக் காதல் - 2


“அதெல்லாம் சொல்லியாச்சுங்க.. பொண்ணுக்கு ஏதாவது அவசர வேலை வந்து இருக்கும். அதான் வீட்டுக்கு வர லேட் ஆகுது போல..” என்று தரகர் இடையில் புகுந்து சமாளிக்க, அண்ணாமலை நாலாப் பக்கமும் தலையை ஆட்டி வைத்தார். 

“அதனால என்ன? நாங்க பொறுமையா வெயிட் பண்ணியே பொண்ணைப் பார்த்துட்டுப் போறோம்” என்று அவர்கள் பெருந்தன்மையாகச் சொல்ல, அண்ணாமலைக்கு மேலும் சங்கடமாகிப் போனது. ஆனாலும் சலிக்காது அலைப்பேசியில் மகளுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். 

இரவு ஒன்பது மணி அளவில் அபி வீட்டிற்கு வர, காக்கி உடையில் வந்து நின்றவளைக் கண்டு மாப்பிள்ளை வீட்டார்களின் முகம் வாடிப் போனது. 

அவர்களை எல்லாம் பார்த்து விட்டு அவள் தந்தையைக் கேள்வியாக நோக்க, “உன்னை எத்தனை மணிக்கு வரச் சொன்னேன்? நீ எப்போ வந்து இருக்க?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் பல்லைக் கடித்தார் அண்ணாமலை. 

“ஒரு புது கேஸோட இன்வஸ்டிகேஷன்ல பிஸியா இருந்ததால, நீங்க சொன்னதை மறந்துட்டேன்ப்பா.. அதுக்கு என்னப்போ..?” அவள் வெகு சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே அறைக்குச் செல்ல, 

அவள் பின்னாடியே சென்ற அண்ணாமலை “உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு தான், நான் உன்னை சீக்கிரமாவே கிளம்பி வரச் சொன்னேன். நீ என்னடான்னா எப்போவும் போல இப்போவும் லேட்டா வீட்டுக்கு வர்ற.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க உன்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?” என்று கேட்டார். 

அதிர்ச்சியுடன் விலுக்கென நிமிர்ந்து தந்தையின் முகத்தைப் பார்த்த அபி, துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு மாடிப்படியில் வேகமாக இறங்கி ஹாலுக்குச் செல்ல, “அபிம்மா.. வேணாம்.. சொன்னா கேளு..” என்றபடியே அவள் பின்னாடியே ஓடி வந்தார் அண்ணாமலை. 

தந்தையின் வார்த்தைகளைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாத அபி, மாப்பிள்ளை வீட்டாரை நோக்கி துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி “எழுந்துருங்க” என்று அடிக்குரலில் சீற, அவர்கள் பதற்றத்துடன் எழுந்து நின்றார்கள்.

“உங்க எல்லாருக்கும் இரண்டு நிமிஷம் தான் டைம்.. அதுக்குள்ள ஓடிப் போயிடுங்க. இல்ல, ஒவ்வொருத்தர் நெஞ்சுலயும் நாலு புல்லட் இறங்கிடுவேன்” என்று அபி மிரட்ட, அவர்கள் பயத்துடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள். 

ஆனாலும் போகும் போது “பொண்ணா இது.. இராட்சசி..” என்று மாப்பிள்ளையின் அம்மா புலம்பிக் கொண்டே காரில் ஏறப் போக, அபி ஹாலில் நின்றவாறே வாசலில் அழகுக்காக தொங்க விடப்பட்டு இருந்த பூத்தொட்டியைக் குறிப் பார்த்து சுட்டாள். 

அதில் பூத்தொட்டி அறுத்து மாப்பிள்ளையின் அம்மாவின் காலடியிலேயே விழுந்து விட, அவரோ அதிர்ந்து அபியை நோக்கினார். 

“இன்னொரு வார்த்தை பேசுன.. அடுத்த புல்லட் உன் தலையில தான் இறங்கும்..” என்று மிரட்ட, அவர் விட்டால் போதும் என்று உயிர் பயத்தில் வேகமாக காரில் ஏறி அமர்ந்துக் கொண்டார். 

காரும் கிளம்பிச் சென்று விட, தந்தையை உறுத்து விழித்த அபி, துப்பாக்கியை அதன் உறையில் வைத்து விட்டு மாடியேறி அவளது அறைக்குச் சென்றாள். கோபத்துடன் அறைக் கதவை அவள் ‘டம்’ என்று அடித்துச் சாற்ற, அண்ணாமலை தளர்ந்த நடையுடன் அவரது அறைக்குச் சென்றார். 

*****

நள்ளிரவு நேரம் அபிக்கு விழிப்பு தட்ட, அறையில் விளக்கைப் போட்டவள் படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். அருகில் இருந்த மேஜையில் காலியான தண்ணீர் பாட்டிலே இருக்க, தண்ணீர் எடுப்பதற்காக கீழே இறங்கி வந்தாள். 

அப்போது தந்தையின் அறையில் இன்னமும் விளக்கு ஒளிர்வதைக் கண்டவள், மெல்ல நடந்து அவரது அறைக் கதவில் கை வைத்தாள். 

கதவு தானாகத் திறந்து கொள்ள, அபி அறைக்குள் எட்டிப் பார்த்தாள். அண்ணாமலை மனைவியின் புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு மகளின் திருமணத்தை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார். 

“நான் அப்படி என்ன கேட்டேன் மீனாட்சி.. பெத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கனும்ன்னு ஆசைப்பட்டது ஒரு குத்தமா?” என்று அவர் சொல்ல,

“அப்பா.. மணி இப்போ என்னாச்சு? இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அதட்டல் குரலில் கேட்டாள் அபி. 

மகளின் குரல் கேட்டதும் அவரது முகம் இறுகி போக, “எப்போ தூங்கனும், எப்போ எழுந்துக்கனும்ன்னு எனக்குத் தெரியும். எனக்கு யாரும் வந்து சொல்லனும்னு அவசியம் இல்ல” என்று முகத்தில் அடித்தாற் போல சொன்னவர், மகளின் புறம் திரும்பக் கூட இல்லை. 

அபி அதைக் கண்டுக் கொள்ளாமல் அவரின் முன்பு ஒரு நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர, அண்ணாமலை அவளைப் புரியாமல் நோக்கினார். 

“சரி, நான் எதுவும் சொல்லல. நீங்க உங்க புலம்பலை எல்லாம் முடிச்சிட்டு எப்போ தூங்குறீங்களோ, தூங்குங்க. அது வரைக்கும் நான் இங்கேயே இருக்கேன்” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியவள் தந்தையைப் பார்த்துக் கொண்டே தனது இரு கையையும் மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொள்ள, அவர் மகளை முறைத்துப் பார்த்தார்.

“ம்.. கன்டினியூ பண்ணுங்கப்பா..” அவள் நக்கலாகச் சொல்ல, 

“எனக்குத் தூக்கம் வருது” என முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு சொன்னவர், மனைவியின் புகைப்படத்தை அருகில் வைத்து விட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டார். 

“என்னப்பா.. உங்க புலம்பலைக் கேட்க எவ்ளோ ஆர்வமா வந்து உட்கார்ந்து இருக்கேன். நீங்க என்னடான்னா இப்படி இழுத்து போர்த்திக்கிட்டு படுத்துட்டீங்களே..”

“நான் தூங்கி அரை மணிநேரம் ஆகுது..” என்றவர் குறட்டைச் சத்தத்தையும் வெளியிட, அபியின் இதழ்கள் புன்னகையில் விரிந்து கொண்டன. 

அவளுக்குத் திருமணத்தின் மீது காழ்ப்புணர்ச்சி எல்லாம் இல்லை. இதுவரை யார் மீதும் காதல் கொண்டதும் இல்லை. அதற்கு அவளிடம் நேரமும் இல்லை. திருமணம் என்று வரும் போது, அவள் மறுப்பதற்கு ஒரே காரணம், அவளது அப்பா தான். 

தான் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டால், தந்தை தனியாக இருக்க வேண்டி வருமே என்று தான் தந்தைக்காகத் தன் திருமணத்தைக் கூட மறுக்கிறாள்.

நாற்காலியை இழுத்து ஓரமாகப் போட்ட அபி, தந்தையின் அறை விளக்கை அணைத்து விட்டு கதவையும் அடைத்து விட்டு தனது அறைக்குச் சென்றாள். 

அடுத்த நாள் முதல் அண்ணாமலை மகளிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். அபியும் அந்த போதைப் பொருள் வழக்கு விசாரணையில் மும்முரமாக இருந்ததால், தந்தையின் கோபத்தைக் கண்டு கொள்ளும் நிலையில் எல்லாம் அவள் இல்லை. 

அப்படி ஒரு நாள் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தவள், டீப்பாய் மீது நேற்று அவள் வாங்கி வந்த சுகர் மாத்திரை அப்படியே இருப்பதைக் கண்டு புருவம் சுருக்கினாள். 

“அப்பா..” என்று அழைக்க, அண்ணாமலையிடம் இருந்து பதிலே வரவில்லை. 

அவள் நான்கு, ஐந்து முறை அழைத்தப் பின்பு மிக மெதுவாக தனது அறையில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை மகளின் முகத்தைப் பார்க்காமல் வாயை இறுக்கமாக மூடியபடி வெற்று சுவரை வெறித்துப் பார்த்தார். 

“ஏன்ப்பா.. சுகர் மாத்திரை இங்கேயே இருக்கு?” என்று கேட்க, அவர் மௌனமாக நின்று இருந்தார். 

“உங்களைத் தான்ப்பா கேட்கிறேன்.. நீங்க மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடுறீங்களா? இல்லையா?” என்று அவள் கேட்க, அவர் அதற்கும் வாயைத் திறக்கவில்லை.

“அப்பா.. இப்போ எங்கிட்டப் பேசப் போறீங்களா? இல்லையா?” அபி அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் பல்லைக் கடிக்க, 

அறைக்குள் சென்று ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்து வந்த அண்ணாமலை, அதில் “பேச மாட்டேன்” என்று எழுதி அவளின் முகத்திற்கு நேரே நீட்டினார். 

“ஏன் பேச மாட்டீங்க?” அவள் மார்புக்குக் குறுக்காகக் கையைக் கட்டிக் கொண்டு அவரை மிதப்பாகப் பார்த்தபடி அழுத்தமாக வினவ, 

அதற்கு அண்ணாமலை, ‘நான் ஏன்ம்மா உங்கூட பேசனும்? நீதான்  என்னை அப்பனாவே மதிக்குறது இல்லையே..’ என்று எழுதி விட்டு அவளிடம் காட்டினார். 

“நான் என்னப்பா உங்களை மதிக்கல?” அவள் கோபமாகக் கேட்கவும், 

அடுத்தப் பக்கத்தைத் திருப்பியவர், ‘எதுக்கு நீ நான் கூட்டிட்டு வர்ற மாப்பிள்ளைகளை எல்லாம் விரட்டி அடிக்குற?’ என்று எழுத, 

“எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை” என்றாள் அழுத்தமாக. 

‘எனக்கு இப்போவே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும். நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு, நான் உங்கூட பேசுறேன். இல்லன்னா, உயிரே போனாலும் ஒரு வார்த்தை உங்கூட பேச மாட்டேன்’ 

“மிரட்டுறீங்களா?” அபி அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் தந்தையைப் பார்த்து பல்லைக் கடிக்க, 

‘அப்படியே வச்சிக்கோ’ என்பது போல் மிதப்பாகப் பார்த்து வைத்தார். 

“பார்க்கிறேன்.. எத்தனை நாளைக்கு நீங்க இப்படியே இருக்கீங்கன்னு பார்க்கிறேன்..” என்று கடுப்பாக உரைத்த அபி ஜீப்பில் ஏறிச் செல்ல, அண்ணாமலையின் முகத்தில் கவலை படிந்தது.  

******** 

இப்படியே இரண்டு தினங்கள் கடந்தது. அண்ணாமலை பக்கத்தில் இருக்கும் கடை ஒன்றிற்கு தனியாக நடந்து சென்றார். சுகர் மாத்திரை சாப்பிடாததால் அவருக்குத் தலை சுற்றல் ஏற்பட, தலையைப் பிடித்துக் கொண்டு சாலை ஓரமே மயங்கி விழுந்து விட்டார். 

சிறிது நேரம் கழித்து அவர் மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்க்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு திகைத்துப் போனார். நெற்றியில் சிறிதாக கட்டுப் போடப்பட்டு இருப்பதைக் கையால் தொட்டு அவர் உணர்ந்த போது தான், ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான ஒருவன் அறைக்குள் நுழைந்தான். 

“சின்ன அடி தான் சார்.. இரண்டு நாள்ல சரியா போயிடும்” என்று அவன் சொல்ல, 

“யாருப்பா நீ?” என்று கேட்டார் அண்ணாமலை. 

“நான் ருத்ரா.. ருத்ர பிரதாபன். வேலை தேடி அலைஞ்சிட்டு இருக்குற ஒரு வேலையில்லா பட்டதாரி” என்று அவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள, 

“நான் எப்படி இங்க?” என்று தயக்கத்துடன் கேட்டார் அண்ணாமலை. 

“இன்னைக்கு சுகர் மாத்திரை போட மறந்துட்டீங்க போல. ரோட்டுல மயங்கி கெடந்தீங்க. இன்டர்வியூவ் முடிச்சிட்டு அந்தப் பக்கமா வந்துட்டு இருந்த நான் தான் உங்களைத் தூக்கிட்டு வந்து இந்த ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்” என்று அவன் நடந்ததைச் சொல்ல, அண்ணாமலை ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு கட்டிலில் சாய்வாக அமர்ந்தார். 

“ஹான்.. சார்.. ஹாஸ்பிடல் பில் 2000 ரூபாய் ஆச்சு..” என்று அவன் சொல்ல,

“இருப்பா.. நான் கொடுக்கிறேன்..” என்று தனது பாக்கெட்டில் கை விட்டவர் பர்ஸ் காணாமல் போனதை உணர்ந்து அதிர்ந்து அவனை நோக்க, அவன் அவரது பர்ஸை எடுத்து அவர் முன்பு நீட்டினான். 

அவர் திகைப்புடன் அவனை ஏறிட்டுப் பார்க்க, “உங்க பர்ஸ் தான் சார். நானே உங்க பர்ஸ்ல இருந்து பணத்தை எடுத்து பில் கட்டிட்டேன்” என்றான் பளீரென்ற புன்னகையுடன். 

“விவரம் தான்ப்பா நீ..” 

“அ..அதான் சொன்னேனே சார்.. நானே ஒரு வேலையில்லா பட்டதாரி.. எங்கிட்ட எப்படி சார் அவ்ளோ பணம் இருக்கும்?” என்று அவன் அசடு வழிந்து கொண்டே சொல்ல, 

பர்ஸை திறந்து பார்த்த அண்ணாமலை, “எல்லாம் சரி.. நான் என் பர்ஸ்ல 2500 ரூபாய் வச்சி இருந்தேன். ஆனா இதுல இப்போ 300 ரூபாய் தானே இருக்கு? நீ கணக்குல வீக்கோ?” என்று அவர் கேட்டார்.

“இல்ல சார்.. அது ஆட்டோக்காரனுக்கு இங்க கொண்டு வந்து விட 200 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்” என்றான். 

“அப்போ ஆட்டோ காசும் என்னோடது தானா.. ரொம்ப நியாயமானவன்ப்பா நீ..” என்று அவர் சொல்ல,

“தேங்க்ஸ் சார்..” என்றான் அதே பளீரென்ற புன்னகையுடன். 

“என் ஃபோன் எங்க?” என்ற அண்ணாமலை தனது சட்டை பாக்கெட்டிலும் அருகிலும் தேட, ருத்ரா அதைத் தனது சட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தான். 

அவர் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, “பத்திரமா இருக்கட்டுமேன்னு நானே எடுத்து வச்சிக்கிட்டேன் சார்..” என்றான்.

அலைப்பேசியை வாங்கியவர் அதனைப் பார்வையிட, “ஹான்.. சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. உங்க பொண்ணு ஃபோன் பண்ணாங்க. நீங்க இங்க தான் இருக்கீங்கன்னு சொன்னேன். அவங்க உடனே கிளம்பி வரேன்னு சொன்னாங்க” என்றான். 

அதைக் கேட்டு அதிர்ந்த அண்ணாமலை, “அய்யய்யோ.. அதெல்லாம் ஏன்ப்பா நீ அவக்கிட்ட சொன்ன?” என்று பதறிய தருணம் கதவைப் படாரென திறந்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அபிலாஷினி. 

“அப்பா.. உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..” அவள் பரிதவிப்புடன் தந்தையை நெருங்கி அவரது கையைப் பிடித்துக் கொண்டு கேட்க, 

“இ..இல்லம்மா.. எனக்கு ஒன்னும் இல்ல.. நான் நல்லா தான் இருக்கேன். லேசான தலை சுத்தல்.. அவ்ளோ தான்..” என்றது தான் தாமதம், அவள் அவரைக் கோபத்துடன் பார்த்தாள். 

“எனக்குத் தெரியும்.. இன்னைக்கு சுகர் மாத்திரையைப் போடல தானே நீங்க..?” என்று அவள் அவரைத் திட்ட துவங்க, அண்ணாமலை தலை குனிந்து மகளின் வாயில் இருந்து வரும் அர்ச்சனை வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டார். 

அதனைக் கண்ட ருத்ரா ஒரு மென்சிரிப்புடன் அந்த அறையில் இருந்து வெளியேறி விட்டான். 

1 comment:

Powered by Blogger.